இடமிருந்து வலம்

இந்தியாவில் பொதுவுடைமையின் வீழ்ச்சி 

Ron Ridenour
ரான் ரைட்னோர் 

இந்திய பொதுவுடைமைக் கட்சிகளுக்கு ஒரு நூற்றாண்டுகால வரலாறு உண்டு. அவற்றின் சாதனைகள் பற்றி இந்திய புலமையாளரும், முன்னாள் மாவோயிச அரசியல் வினைஞருமாகிய ரி. ஜி. ஜக்கோப் ஒரு நூல் எழுதியிருக்கிறார். "இடமிருந்து வலம் - இந்தியாவில் பொதுவுடைமையின் வீழ்ச்சி"என்ற இந்நூலில் பொதுவுடைமையை எதிர்க்கும் நிலைக்கோ, முதலாளித்துவ வர்க்கத்தை மகிழ்விக்கும் நிலைக்கோ அவர் தாழ்ந்து போய்விடவில்லை. அக்கட்சிகள் அடைந்த தோல்விகளை அவர் எடுத்துரைத்துள்ளார்; பகுத்துரைத்துள்ளார். அதுவே எழுத்துலகிற்கு இந்நூலின் தலையாய பங்களிப்பு. 

ரி. ஜி. ஜக்கோப் நன்கு ஆய்விட்டு எழுதிய இந்நூல் ஒரு நேரிய நூல், துணிகர நூல், அறைகூவும் நூல். அவர் சுற்றிவளைத்துப் பேசவில்லை. 

பொதுவுடைமைவாதிகள் காலனியாதிக்கத்துக்கு கட்டுண்ட மனப்பான்மை கொண்டிருந்தார்கள்; காலனியாதிக்கத்துக்கு கட்டுண்ட மனப்பான்மையே அவர்களை சோவியத் தலைமையில் இயங்கிய சர்வதேய பொதுவுடைமைக் கழகத்தின் (Comintern) அடிவருடிகளாகவும், பிரித்தானிய பொதுவுடைமைக் கட்சியின் அடிவருடிகளாகவும் மாற வழிவகுத்தது; அதன் விளைவாகவே பெரும்பாலான பொதுவுடைமைக் கட்சிகள் அவலமடைந்தன; தோல்வியடைந்தன; குடியாட்சிவாத சமூகவுடைமைக் கட்சிகளாகத் தாழ்ந்து போயின என்றெல்லாம் அவர் வாதிக்கிறார்.

1920ல் அமைக்கப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (CPI) 1960ல் இரண்டாகவும், பிறகு மூன்றாகவும், பிறகு நான்காகவும் பிளவுபட்டது. இந்திய பொதுவுடைமைக் கட்சிக்கு கைவந்த கலையாகிய நாடாளுமன்ற அரசியலை, நான்காவதாக எழுந்த மாவோயிசவாதிகள் சாடினார்கள். 1960கள் முதல் 1970கள் வரை மாவோயிசக் குழுமங்கள் பலவும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டன (அண்மைக் காலத்தில் ஆயுதப் போராட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது). பாரிய படுகொலைகளைக்குப் பலியாகாது தப்பிய மாவோயிசவாதிகளுள் அநேகர் முதலாளித்துவ முறைமைக்கு உட்பட்ட குடியாட்சிவாத சமூகவுடைமைச் சீர்திருத்தவாதிகளாகத் தாழ்ந்து போய்விடவில்லை. எனினும் மாவோயிசவாதிகள் கூட லெனினையும், ஸ்டாலினையும் விடுத்து, மாவோ சே-துங் என்னும் அந்நிய திருவுருவத்தை வழிபட்டார்கள். அந்நியப்படும் தேசிய விளையாட்டாகிய திருவுருவ வழிபாட்டில் இறங்கிய மாவோயிசவாதிகள் கூட தமது தாய்நாட்டின் நிலைமைகளை ஆழமாகப் பகுத்தாராயவில்லை. சமூகவுடைமைப் புரட்சிக்கான தேசிய திட்டம் எதனையும் வகுப்பதற்கு, அத்தகைய பகுப்பாய்வு அத்தியாவசியம் அல்லவா. 

குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வண்ணம் மக்களின் ஆதரவை ஈட்டிக்கொண்டதுண்டு. எனினும் அத்தகைய மாநிலங்களில் முதலாளித்துவ பொருளாதார சக்தியை அக்கட்சிகள் தகர்த்ததுமில்லை, அரசியற் கட்டமைப்புகளை தீவிரமாக மாற்றியதுமில்லை. உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டாமல், சாதிகளை அடக்கி ஒடுக்காமல் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையையோ, சந்தைப் பொருளாதாரத்தையோ மேற்கொள்ள முடியாது. அத்தகைய பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையையும், சந்தைப் பொருளாதாரத்தையும் அவை தொடர்ந்து பேணிவந்தன என்பதே உண்மை. 

பொதுவுடைமைக் கட்சிகள் பலவும் அவ்வாறு படுதோல்வி அடைந்த காரணத்தைப் புரியவைக்கும் நோக்குடன், அவற்றின் தலைவர்கள் பெரிதும் உயர்சாதிப் பிராமணர்களாக விளங்கியதை, பாரம்பரிய நியமப்படியான சலுகைகளுக்கு உரியவர்களாக விளங்கியதை ஜக்கோப் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன், மாவோயிசம் பேசாத பொதுவுடைமைக் கட்சிகளின் தலைவர்கள் "ஒற்றை"அகில இந்தியா என்னும் மாய எண்ணத்தை ஏற்றுக்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 

"இந்தியாவின் இன்றைய அரசியற் கட்டமைப்பு என்பது காலனித்துவம் ஈந்த கொடையே... காலனியாதிக்க முதலாளித்துவ வர்க்க நலன்கருதி ஈயப்பெற்ற கொடையே அது... உடைமைநலன் நாடும் நாட்டுப்புறத்து நிலக்கிழாரிய சாதிமான்களுடன் கூட்டுச்சேர்ந்து ஈயப்பெற்ற கொடையே அது... ஓர் உபகண்டமாக விளங்கும் பரிமாணம் கொண்ட இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சனையே ஆளும் வர்க்கங்களுக்கு பேராபத்து விளைவிக்கக் கூடியது... கூட்டாட்சி முறைமைக்கு உதட்டளவில் சேவகம் புரியும் அத்தகைய ஒற்றை அரசியல் யாப்பை பொதுவுடைமைவாதிகள் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டார்கள்... இவ்வாறு பொதுவுடைமைவாதிகளின் அணுகுமுறை என்பது என்றென்றும் இணக்கமுடியா முரண்பாடுகள் சேர்ந்த கும்பியாகவே காணபட்டது." 

மாமன்னர்கால இரசியாவை (Tsarist Russia-வை) "தேசிய இனங்கள் அடையுண்ட சிறை" என்று வர்ணித்தார் லெனின். காலனியாட்சிக்குப் பிற்பட்ட இந்தியாவை அத்தகைய மாமன்னர்கால இரசியாவுக்கு ஒப்பிட்டுள்ளார் ஜக்கோப். வலதுசாரிக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் ஆகிய இரு தரப்புகளுமே ஆயிரக் கணக்கான குலங்களையும், இனங்களையும், மொழிகளையும், சாதிகளையும் ஓரங்கட்டி, புறக்கணித்து, ஒதுக்கித்தள்ளின. எனினும் மாவோயிச குழுமங்கள் பலவும் அதற்கு விதிவிலக்கு என்பதை மறுப்பதற்கில்லை. 

சீன, சோவியத் பொதுவுடைமை முறைமைகளின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் நூலாசிரியர் சுருக்கி உரைத்துள்ளார். மார்க்சியம் என்றால் என்ன, அதன் கோட்பாட்டு வழுக்கள் எவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜக்கோபின் கணிப்பின்படி இந்தியாவில் நேர்ந்த ஒரு முக்கிய தவறு யாதெனில், மார்க்சியம் என்பது அறிவியல் கொண்டு கணிக்கப்படக்கூடியது என்று வாதிக்கப்பட்டமையே. "அறிவியல்" வழுவுக்கு ஓர் எடுத்துக்காட்டு: உழைக்கும் வர்க்கத்தின் சமூகவுடைமைப் புரட்சிகள் எங்கு நிகழும், எங்கு நிகழாது என்பது பற்றிய எண்ணங்கள். 

அந்த "அறிவியலுக்கு" மாறாகவே விருத்திகுன்றிய "மூன்றாம் உலக" நாடுகள் சிலவற்றில் சமூகவுடைமையை எய்தும் இலக்குடன் கூடிய புரட்சிகள் ஆரம்ப வெற்றியை ஈட்டிக்கொண்டன; மிகவும் தொழில்துறைமயப்பட்ட "முதலாம் உலகத்தில்" அப்படி நிகழவில்லை. மூன்றாம் உலகத்தில் முதலாளித்துவ குடியாட்சிப் புரட்சிகள் முழுமையாக நிகழ்வதைக் காலனித்துவம் தடுத்துவிட்டது. 

மார்க்சியத்தில் வேறு குறைகளையும் நூலாசிரியர் கண்டுகொண்டுள்ளார். மானுடத்தின் இதயத்தையும், இயற்கையின் உரிமைகளையும், இயற்கையின் தேவைகளையும் மார்க்சியம் கருத்தில் கொள்ளாது புறக்கணித்துவிட்டது என்கிறார் ஜக்கோப். மார்க்ஸ் வாழ்ந்த ஊழியை வைத்துப் பார்க்கும்பொழுது, சூழலுக்கு விளையப்போகும் பேரழிவுகளை அவர் எதிர்பார்க்கவில்லையே என்று அங்கலாய்ப்பது நியாயமாகாது. எனினும் லெனினிய, ஸ்டாலினிய, மாவோயிச, பின்-மாவோயிச அபிவிருத்தித் திட்டங்களில் இயற்கை அன்னையின் தேவைகள் அப்பட்டமாகவே புறக்கணிக்கப்பட்டன. மார்க்சியத்தைப் பின்பற்றியோருள் அநேகர் மனித இதயத்தில் பொங்கும் உணர்ச்சியின் பலம், பலவீனம் என்பவற்றைப் பொருட்படுத்தவில்லை; சில திறனாய்வாளர்கள் கூறுவதுபோல், மனித "ஆன்மா"வை அவர்கள் பொருட்படுத்தவில்லை; மனித இதயத்தில் பொங்கும் கனிவை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. 

பொதுவுடைமைக் கட்சிகள் தத்தம் கொள்கைகளை வகுத்து, நடைமுறைப்படுத்துவதற்கு கையாண்ட முறைகளாலும் சமூகவுடைமவாதத்துக்குப் பேரழிவு விளைந்தது. 

"கருத்தியல் ஓடை என்ற வகையில் மார்க்சியமும், பொதுவுடைமையும் சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் சிந்தனை ஓடையாக ஊற்றெடுத்த அதேவேளை, அதே ஓடையினுள் ஆக்கவளமும், அபிவிருத்தியும் மேலோங்கா வண்ணம் அதனைப் பாழ்படுத்தும் எதிர்நீரோட்டம் எனும்படியாக சித்தாந்தப் பிடிவாதமும் ஊற்றெடுத்தது." 

"மாற்றுக்கருத்தை என்றென்றும் அடக்கியொடுக்கி ஆணையிடும் அத்தகைய கட்டமைப்பே மனிதர்களின் (குறிப்பாக அங்கத்தவர்களின்) ஆக்கத்திறனைக் கோணவைத்து, முட்டுக்கட்டை போடுகிறது. குடியாட்சிநெறிக்கு எதிரான நெறியாக அதனால் மிகவிரைவில் மாறமுடிகிறது. அத்தகைய பாறையில் மார்க்சியத்தின் விடுதலைச் சாறும், மானுடச் சாறும் ஊற்றெடுத்தல் அரிது."

இந்தியாவின் சமய வரலாறு, அதன் கொடிய சாதியத்தின் பின்னணி, பிரித்தானிய காலனியாட்சிக் காலம் என்பவற்றையும் நூலாசிரியர் சுருக்கி உரைத்துள்ளார். இந்தியாவில் கூலி-மனப்பான்மை வலிமைபட நிலைத்திருப்பது உண்மையில் வருந்தத்தக்கது. இந்திய வர்க்கங்கள் நெடுங்காலமாகத் தம்மிடையே சாதிகளாகப் பிளவுண்டு, ஒன்றை ஒன்று புறங்கட்டி வருகின்றன. அந்த வகையில் இந்திய ஆளும் வர்க்கங்களும், அந்நிய ஆளும் வர்க்கங்களும் பெரிதும் தம் இச்சைப்படி அவற்றைக் கூறுபடுத்தி வெற்றிகொள்ள அவை இடங்கொடுத்துள்ளன. 

இந்தியா பற்றி, இந்திய பொதுவுடைமைக் கட்சிகள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எனினும் இந்திய பொதுவுடைமைக் கட்சிகளைப் பிளவுபடுத்தி, ஆதிக்கம் செலுத்துவதில் சர்வதேய பொதுவுடைமைக் கழகம் (Comintern) வகித்த பங்கு, எதேச்சாதிகாரம் செலுத்துவதில் மாவோயிசமும் மற்றும் பிற பொதுவுடைமைக் கட்சித் தலைமகளும் வகித்த பங்கு தொடர்பாக இந்நூலில் நான் வாசிக்கும் கூறுகள், மார்க்சிய ஆதரவாளன் என்ற வகையில் ஏற்கெனவே நான் கண்டறிந்த விபரங்களை உறுதிப்படுத்துகின்றன. மேலதிக விபரங்களையும் இதில் நான் கற்றறிந்துள்ளேன். 

அதேவேளை இந்திய பொதுவுடைமைக் கட்சிகளோ, உலகளாவிய பொதுவுடைமைக் கட்சிகளோ "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை" (உற்பத்திச் சாதனங்களிலும், தீர்மானங்கள் எடுப்பதிலும் உண்மையான மக்களாட்சியை) நடைமுறைப்படுத்தாத காரணத்தை விளங்கிக்கொள்வது கடினமாக இருக்கிறது. 

இப்பொதுவுடைமைக் கட்சிகள் அனைத்தும், அவற்றின் உலகளாவிய தலைவர்களுள் பெரும்பாலானோரும் ஏன் முதலாளித்துவத்தின் பங்காளிகளாக நலியவோ, இழியவோ நேர்ந்தது என்று கூட நான் ஏங்குகிறேன். முதலாளித்துவமும், அதன் ஏகாதிபத்தியமும்/உலகமயமாக்கமும் அத்துணை வலிமை படைத்தவை என்ற ஒரே காரணத்தை விட வேறு காரணம் ஏதோ இருக்க வேண்டும். ஜக்கோப் உணர்த்துவது போல், பொதுவுடைமைக் கட்சிகளின் அணுகுமுறைகளுடனும், கட்டமைப்புகளுடனும் சம்பந்தப்பட்ட, ஒருவேளை தலைமையைப் பணிந்து வழிபடும் (பொதுவுடைமைவாதத்துக்கு ஒவ்வாத) "இயல்பான" மனப்பான்மையுடன் சம்பந்தப்பட்ட வேறு காரணம் ஏதோ இருக்க வேண்டும். 

மிகமுக்கிய காரணங்களுள் அறிவுநெறி சம்பந்தமான ஒரு விவரம் உண்டு: உற்பத்திச் சாதனங்களை மெய்யாகவே தமது உடைமைகளாக ஆக்கிக்கொள்ளவும், முக்கிய தீர்மானங்களை எடுக்கவும் தொழிலாளிகளை அனுமதிக்காத சூழ்நிலையில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை என்றுமே நிறைவேற்றாத சூழ்நிலையில், சமூகவுடைமைக் கோட்பாடு விருத்தியடைய முடியாது போய்விடுகிறது; ஆதலால் புரட்சிகள் விரைவில் ஓய்ந்துவிடுகின்றன. எவ்வாறாயினும், தொழிலாளிகளே உற்பத்திச் சாதனங்களைக் கையகப்படுத்தி உண்மையான மக்களாட்சியைத் தோற்றுவிக்கும் வண்ணம் அவர்களைப் பொதுவுடைமைக் கட்சிகளோ, அவற்றின் தலைவர்களோ தயார்ப்படுத்தத் தவறியது ஏன் என்பது ஒரு முக்கிய கேள்வி; இன்னமும் பகுத்தாய்ந்து, விடைகாண வேண்டிய கேள்வி அது. 

சாதியம் பற்றிய தெளிவான விளக்கம், கருத்தளவிலும் நடைமுறையிலும் சாதிகளின், உபசாதிகளின் தொழிற்பாடுகள் பற்றிய சுருக்கம் என்பவற்றுடன் கூடிய மீள்பதிப்பு எதுவும் இந்தியரல்லாத வாசகர்களுக்கு நலம் பயக்கக்கூடும். இன்னும் முழுமைவாய்ந்த சுட்டுநிரல் ஒன்று வாசகர்கள் அனைவருக்கும் நலம் பயக்கக்கூடும். அத்துடன் கூறியது கூறும் போக்கும் ஜாக்கோபிடம் பெருமளவு காணப்படுகிறது. பொருள்விளக்கமின்றி சில முக்கிய பதங்கள் எடுத்தாளப்படுள்ளன. அப்புறம் சில விளக்கங்ளும் காணப்படுகின்றன. "Social fascism", "social imperialism", போன்ற பதங்களை நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவற்றை அவர் தெளிவுபடுத்தவில்லை. 


எனினும் இவை சிறிய குறைகளே. புரட்சி, சமூகவுடைமை, பொதுவுடைமை, மார்க்சியம் புரிவோர், பயில்வோர் அனைவரும் வாசிக்கவேண்டிய ஓர் அடிப்படை உசாத்துணை நூல்: "இடமிருந்து வலம்." குறிப்பாக இந்தியாவில் மட்டுமல்ல, தம்மைத் தாமே "பொதுநலவாயம்" என்று கொண்டாடும் நாடுகளிலும், எங்கும் கவிந்துள்ள ஐக்கிய அமெரிக்காவிலும் உள்ள நூலகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், நூல் விற்பனை நிலையங்களிலும் இருக்கவேண்டிய நூல்: "இடமிருந்து வலம்."
_____________________________________________________________________________________________
       Ron Ridenour, Left To Right, Decline Of Communism In India, Colombo Telegrpah, 2013-10-28.
தமிழ்: மணி வேலுப்பிள்ளை,காலம், மார்ச் 2014

No comments:

Post a Comment