ரோசா லக்சம்பேர்க்

   Image result for rosa luxemburg quotes    
      ஒரு துவக்குச் சோங்கினால் அவருடைய தலை தகர்க்கப்படுகிறது. குற்றுயிருடன் அவர் ஓர் ஊர்தியில் ஏற்றப்படுகிறார். அந்த ஊர்திக்குள் வைத்து அவர் சுடப்படுகிறார். அவருடைய உடல் ஒரு கால்வாயில் வீசப்படுகிறது. "கிழட்டுப் பரத்தை கிடந்து நீந்துகிறாள்" என்கிறான் கொலையாளிகளுள் ஒருவன். மூன்று மாதங்களாக அது அப்படியே கிடக்கிறது. அப்பொழுது ரோசாவுக்கு 48 வயது. இது அவரது நடுகல்லுரை:

     சிவப்பு ரோசாவும் இனி இல்லையே
     அவர் புதையுண்ட இடமும் புலப்படவில்லையே
     வாழ்வின் பொருளை அவர் வறியோர்க்கு ஈந்தாரே
     பொருள்படைத்தோர் அவரைத் துடைத்தெறிந்தனரே.     
   
     1919 ஜனவரி 15ம் திகதி ஜேர்மன் படையாட்களால் கொல்லப்பட்ட ரோசா லக்சம்பேர்க் 1871 மார்ச் 5ம் திகதி போலாந்தில், ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 16 வயது முதல் 3 தசாப்தங்களுக்கு மேலாக அவர் சமூகவுடைமை நாடிப் போராடியவர். சமூகவுடைமை ஊடாகவே நீதி, அமைதி, சமத்துவம் அடையமுடியும் என்று திடமாக நம்பியவர். அவரைப் பொறுத்தவரை மானுடத்தின் இறுதித் தெரிவுகள் இரண்டே இரண்டு: (1) சமூகவுடைமை, (2) காட்டுமிராண்டித்தனம். அதே சமூகவுடைமைக்காகப் போராடிய ரோசா, அதே காட்டுமிராண்டித்தனத்துக்கே பலியானார்!
     "…அவர் ஒரு சிறிய பெண்மணி. நலிந்த மேனி. வருத்தக்காரி போன்ற தோற்றம். வீறார்ந்த முகம். அறிவொளி வீசும் அழகிய விழிகள். தன் உளவலி, குணநலம் கொண்டு மற்றவர்களை ஈர்ப்பவர். பலவித குணவியல்பு படைத்தவர். அவரது நுண்ணிய சிறப்புகள் அவருக்கு மெருகூட்டுபவை. புரட்சி வேட்கை, மானுடம், கலை, இயற்கை, புள்ளினம், மரஞ்செடிகொடிகள் அனைத்தும் அவரது அகவீணை நரம்புகளை மீட்டவல்லவை…" (Leon Trotsky, My Life).
          சுவிற்சலாந்தில் ரோசாவைச் சந்தித்த யோன் மில் என்னும் யூத சமூகவுடைமைவாதி, அவரை இப்படி விபரித்தார்: "… அவர் குறுகிய உடலும், பாரிய தலையும்  கொண்டவர். நொண்டியும், தாண்டியும் நடப்பவர். முதன்முதல் அவரை நான் கண்டபொழுது என் உள்ளத்தில் நல்ல தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் அவருடன் கொஞ்ச நேரம் கழித்த பின்னர், அவருடைய ஆற்றலும், கூர்மதியும், உயிர்த்துடிப்பும், கெட்டித்தனமும் புலப்பட்டன…"     
     ரசியப் பேரரசை அவர் மூன்று நிலைகளில் எதிர்கொண்டார்: (1) ரசியப் பேரரசரின் கொடுங்கோன்மைக்கு உள்ளாகிய ரசிய மக்களுக்காகவும், (2) ரசியப் பேரரசினால் அடக்கியாளப்பட்ட போலாந்து மக்களுக்காகவும், (3) ரசியப் பேரரசினால் அடக்கியொடுக்கப்பட்ட யூத மக்களுக்காகவும் அவர் போராடினார். அடக்கி ஒடுக்கப்படும் தரப்புகள் அனைத்துக்காகவும் அவர் குரல் கொடுத்தார். ஒரு தரப்புக்கு விழும் அடியை ஏனைய தரப்புகளுக்கு விழும் அடியாகவே அவர் எடுத்துக்கொண்டார்.
     தனக்குரிய பாதையையும், அதற்கான வெளிச்சத்தையும் அவர் மார்க்சியத்தில் கண்டுகொண்டார். "…ஒவ்வொருவரும் முற்றுமுழுதாக, சுதந்திரமாக மேம்படுவதற்கு ஏதுவான ஆட்சிநெறி கொண்ட சமூகத்தை அமைப்பதே சமூகவுடைமையின் நோக்கம்…"  என்ற மார்க்சின் கூற்று அவரைப் பெரிதும் ஆட்கொண்டது. தொழிலாள இயக்கத்தின் வெற்றியூடாகவே பெண்களும், சிறுபான்மையோரும் விடுதலை பெறமுடியும் என்று அவர் திடமாக நம்பினார். "…மக்களே தமது வேலைத்தலங்களையும், சமூகங்களையும், அரசாங்கங்களையும் பொறுப்பேற்க வேண்டும், அனைவருக்கும் பேச்சுச் சுதந்திரம் அளிக்க வேண்டும், அனைவரும் ஆட்சி புரிவதில் பங்குபற்ற வேண்டும்…"  என்று அவர் முழங்கினார்.
     ரோசா லக்சம்பேர்க்கின் உலகளாவிய கண்ணோட்டத்துக்கும், பரந்துவிரிந்த இதயத்துக்கும், அவர் ஒரு தோழிக்கு எழுதிய மடல் சான்று பகர்கிறது: "…இந்த யூத மக்களின் வேதனை விசயத்தில் மட்டும் உனக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது? இறப்பர்த் தோட்டங்களில் வருந்தும் அப்பாவிகளும், ஆபிரிக்காவில் ஐரோப்பியருக்கு அடிமைப்பட்டு உழலும் கருப்பின மக்களும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களேயூத சமூகத்துக்காக மட்டும் நான் பரிந்துரைப்பவள் அல்ல. உலகில் எங்கெல்லாம் முகில்களும், பறவைகளும், மக்களின் கண்ணீரும் தென்படுகின்றனவோ அங்கெல்லாம் என் நெஞ்சம் நடமாடுகிறது… "  
     போலாந்தில் கூலி உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்த ரோசாவின் தோழர்கள் சிலர் கொல்லப்பட்டதை அடுத்து, அவர் ஒரு கத்தோலிக்க அடிகளிடம் சென்று, தான் ஒரு கத்தோலிக்க இளைஞனைக் காதலிப்பதாகவும், தாங்கள் இருவரும் மணம் புரிய விரும்புவதாகவும், தான் ஒரு யூதப் பெண் என்றபடியால், ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தீக்கை பெறவேண்டி உள்ளதாகவும், தான் மதம் மாறுவதற்கும், தன் காதலனைக் கைப்பிடிப்பதற்கும் தனது பெற்றோர் குறுக்கே நிற்பதாகவும், ஆதலால் சுவிற்சலாந்துக்குத் தப்பியோடி, அங்கு தீக்கை பெறவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
     ரோசாவின் கதையை நம்பிய கத்தோலிக்க அடிகள், அவரை ஓர் உழவனின் வண்டியில் சுவிற்சலாந்துக்கு கடத்த ஒழுங்கு செய்தார். ஒரு வைக்கோல் கட்டின் அடியில் புதையுண்டு, நெடுந்தூரம் குலுக்குண்டு, மூர்ச்சித்துப் பயணித்த ரோசா, சுவிற்சலாந்தில் வெளிப்பட்டு, அரசியல் அகதியாகத் தன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
     தன் வாழ்நாள் முழுவதும் உயிரினங்களாலும், மரஞ்செடிகொடிகளாலும் ஈர்க்கப்பட்ட ரோசா தனது பல்கலைக்கழகப் பாடங்களாக உயிரியலையும், கணிதவியலையும் தேர்ந்தெடுத்தார். அத்துடன் சட்டவியல், மெய்யியல், பொருளியல் பாடங்களையும் அவர் கற்றறிந்தார். வெளியுலகத் தொடர்பின்றிச் சிறையிருந்த வேளைகளில் பூச்சிபுழுக்கள், மரஞ்செடிகொடிகள் பற்றி ஆராய்வதில் மெய்மறந்தார். சிறையிலிருந்து அவர் எழுதிய மடல் ஒன்று: "…ஜேர்மனியில் இசைப்புள் மறைந்த காரணங்களை நேற்று நான் வாசித்தறிந்தேன். அறிவியலின் பாற்பட்ட காட்டியல், தோட்டச்செய்கை, பயிர்ச்செய்கையால் அவற்றின் கூடுகளும், உணவு வகைகளும் ஒழிந்துவிட்டன. நவீன முறைகளால் வெளிகளும், பொந்துமரங்களும், சுள்ளிகளும், இலைதழைகளும் அருகி வருகின்றன. இதை நினைந்து, உள்ளம் வெந்து புண்ணாகிறது…"  
     ரசிய ஆளுகைக்கு உட்பட்ட போலாந்திலிருந்து சுவிற்சலாந்துக்குத் தப்பியோடிய அகதிகளுள் லியோ யோகிச்சஸ் என்ற யூதரும் ஒருவர். சமூகவுடைமைவாதத் தலைவர்களுள் ஒருவராகிய லியோ, போலாந்தில் இரு தடவைகள் சிறையிருந்தவர். மீண்டும் பிடிபடுந் தறுவாயில் சுவிற்சலாந்துக்குத் தப்பியோடியவர். இரகசிய செய்தித்தாள் அச்சடித்தல், கள்ளக் கடவுச்சீட்டு தயாரித்தல், தடைசெய்யப்பட்ட நூல்களைத் தருவித்தல் ஆகியவற்றில் துறைபோனவர். லியோவின் துணிவும், திறனும், மதியும், நிதானமும், உறுதியும் ரோசாவை ஆட்கொண்டன. ரோசாவின் கூரிய மதியும், தீவிர நெஞ்சமும் லியோவைக் கவர்ந்தன. தவிர்க்கவியலாவாறு அவர்களிடையே காதலும், தோழமையும் ஓங்கின.
     1893ல் ரோசாவும், லியோவும் (போலாந்து மொழியில்) தொழிலாளர் குறிக்கோள் என்னும் செய்தித்தாளை வெளியிடத் தொடங்கினார்கள். முதலாளித்துவத்துக்கும், ரசியப் பேரரசுக்கும் எதிரான போராட்டத்தை அது ஆதரித்தது. உலகத் தொழிலாளிகளின் திண்மையை அது போதித்தது. சமூகவுடைமைவாதிகளிடையே உலகளாவிய ஒற்றுமைக்கு அது அழைப்பு விடுத்தது. அப்பொழுது ஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சியே உலகின் மிகப்பெரிய சமூகவுடைமைவாதக் கட்சியாக விளங்கியது. ஆதலால் ஜேர்மனிக்குச் சென்று, அந்தக் கட்சியில் சேர்ந்து போராட அவர் புறப்பட்டார்.
     ஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சியில் ரோசாவுக்கும், எட்வேட் பேண்ஸ்டைன் என்ற பழம்பெரும் உறுப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்துமோதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: "… மார்க்சியம் ஒரு நாட்பட்ட சித்தாந்தம்புரட்சி இன்றியே சமூகவுடைமையை எய்த முடியும்நாடாளுமன்றத்தின் ஊடாகவே சீர்திருத்தங்களைப் புகுத்த முடியும்முதலாளித்துவம் வசப்படுத்தப்பட்டுவிட்டதுஇனிமேல் பொருளாதார மந்தமோ நெருக்கடியோ ஏற்படாதுமுதலாளித்துவத்தைச் சீர்திருத்துவதிலேயே எமது கட்சி ஈடுபட வேண்டும்முதலாளித்துவத்தைக் கவிழ்ப்பதில் அது ஈடுபடக் கூடாதுஎமது கட்சி ஒரு தற்காலக் கட்சியாகவும், நிகழ்வரத்துக்கு உகந்த கட்சியாகவும் மாற வேண்டும்நாடாளுமன்றத்திலும், தொழிற் சங்கங்களிலும் அது புலனைச் செலுத்த வேண்டும். புரட்சி முழக்கங்களை அது கைவிட வேண்டும்…" என்றார் பேண்ஸ்டைன்.
     அதற்கு ரோசாவின் பதிலடி: "…பேண்ஸ்டைன் முன்வைத்த மாற்றுத்தெரிவுகள் பொய்யானவைபுரட்சியா, சீர்திருத்தமா? என்ற வினாவுக்கு அவர் பதிலிறுக்கவில்லை   சீர்திருத்தமும்,   புரட்சியும் சமூகவுடைமைக்கு மாற்று வழிகள் ஆகாஎமது குறிக்கோளை எய்துவதற்கு மிகவும் அமைதியான, தணிவான, மெதுவான வழியை அவர் நாடவில்லை…  வேறொரு குறிக்கோளை எய்துவதற்கே அத்தகைய வழியை அவர் நாடுகிறார்ஒரு புதிய சமூகத்தை அமைக்கும் நிலைப்பாட்டை விடுத்து, பழைய சமூகத்துக்குப் புறப்பூச்சிடும் நிலைப்பாட்டையே அவர் நாடுகிறார்தொழிலாள வர்க்கத்தின் வாழ்வை மேம்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த முடியும், பயன்படுத்த வேண்டும் என்பதில் ஐயமில்லைஆனால்முதலாளித்துவத்தைக் கவிழ்ப்பதற்கான, உடைமையாளர்களின் கைகளிலிருந்து தொழிற்சாலைகளை அகற்றுவதற்கான, தனியார் துறையினர் இலாபம் ஈட்டுவதை ஒழிப்பதற்கான  சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றப் போவதில்லைஅத்தகைய சட்டங்களை காவல்துறையினரும், படையினரும் நடைமுறைப்படுத்துவார்களா? ஒரு முதலாளித்துவ சமூகத்தில் சட்டம் என்றென்றும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தையே நிலைநிறுத்தும் அல்லவாமுதலாளித்துவம் என்னும் அவலக் கடலினுள் சமூக சீர்திருத்தம் என்னும் எலுமிச்சம்பழக் கரைசலைச் சொட்டுச் சொட்டாக இட்டு, அதனை ஓர் இனிய சமூகவுடைமைக் கடலாக மாற்றலாம் என்று பேண்ஸ்டைன் கனவு காண்கிறார்என்று சாடினார் ரோசா. ஈற்றில் ரோசாவின் நிலைப்பாட்டையே ஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சி ஏற்றுக்கொண்டது. அவர் தலையாய சமூகவுடைமைவாத சித்தாந்திகளுள் ஒருவராக எழுச்சி பெற்றார்.
     1904ல் ஜேர்மன் பேரரசரை அவமதித்த குற்றத்துக்காக அவர் 6 கிழமைகள் சிறையிருந்தார். 1905ல் 2 இலட்சம் ரசியத் தொழிலாளிகள் 8 மணித்தியால வேலை, அடிப்படை உத்தரவாதக் கூலி, நாடாளுமன்ற அங்கத்துவம் கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஒரு மதகுருவின் தலைமையில் முட்டுக்காலிலிருந்து தொழுத தொழிலாளிகளைப் படையினர் சுட்டுத் தள்ளினார்கள். 500 பேர் கொல்லப்பட்டார்கள். ஆயிரக் கணக்கானோர் காயப்பட்டார்கள்.
     ரசிய சமூகவுடைமைவாதிகளைப் பின்பற்றி, ஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சியும் பாரிய வேலைநிறுத்தங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ரோசா வாதாடினார். ஆனால் அவர் சார்ந்த கட்சியோ அடக்கி வாசிக்கவே விரும்பியது. பொறுப்புணர்ச்சியின்றிப் புரளி கிளப்புபவர் என்று ரோசாவை அது கண்டித்தது. பழைமைவாத எதிர்க்கட்சியினரோ, அவரைக் கலகம் விளைவிக்கும் அந்நியர் என்றும், ஆட்சிகவிழ்க்கும் யூதர் என்றும், உன்மத்தம் கொண்ட பெண்மணி என்றும் சாடினார்கள். போலாந்துக்குத் திரும்பிப் போகும்படி அவரை நோக்கிக் கூச்சலிட்டார்கள். ரோசா போலாந்து திரும்பினார்.    
     ஓர் ஊடகர் போல் வேடம் பூண்டு, கள்ளக் கடவுச்சீட்டுடன், தாயகம் திரும்பும் வழியில், அங்கு இடம்பெற்ற வேலைநிறுத்தத்தால் அவருடைய தொடருந்துப் பயணம் தடைப்பட்டது. அதே வேலைநிறுத்தத்தை அடக்குவதற்காகப் படையினரை ஏற்றிச்சென்ற வேறொரு தொடருந்தில் தலைமறைவாக  ஒரு பெண்மணி, அதுவும் ஒரு புரட்சிப் பெண்மணி பயணிப்பது அதே படையினருக்குத் தெரியாது! ஊர் திரும்பிய ரோசா தனது குடும்பத்தவரையும், ஏற்கெனவே ஊர் திரும்பிய லியோவையும் வார்சோவில் சந்தித்தார். ஊர் திரும்பிய கையோடு போலாந்தில் இடம்பெற்ற போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக அவர் ஈடுபடுத்திக்கொண்டார். "மிகைபடுத்தாமல், முழு நேர்மையுடன் என்னால் ஓர் உண்மையை வலியுறுத்த முடியும்: என் வாழ்நாளில் இதுவே மிகமகிழ்ச்சியான காலகட்டம்" என்று ரோசாவின் மடல் ஒன்று கூறுகிறது. அப்பொழுது அவர் எழுதிய வேறு சில வரிகள்: "சமூகவுடைமைக்கான போராட்டமே உலக வரலாறு கண்ட மாபெரும் உள்நாட்டுப் போர்தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும்போராடாமல் சமூகவுடைமையை ஈட்ட முடியாதுவன்முறை ஓங்குதல் திண்ணம், குருதி சிந்துதல் திண்ணம், எனினும் ஒரு துளி குருதியும் வீணாகச் சிந்தக்கூடாதுமுழு உலகத்தையும் கவிழ்க்க வேண்டும்ஆனால் தவிர்க்கப்படக்கூடிய கண்ணீர் ஒரு குற்றச்சாட்டுக்கு நிகரானதுஒரு முக்கிய செயலைப் புரிய விரையும் ஒருவர், நினையாப் பிரகாரமாகவேனும் ஒரு புழுவை மிதிப்பது குற்றமாகும்…"      
     1906ல் ரசியப் படை, வேலைநிறுத்தத்தை ஒடுக்கிய பின்னர், காவல்துறையினர் ரோசாவையும், லியோவையும் படுக்கையில் வைத்து மடக்கிப் பிடித்தார்கள். சிறையிலிருந்து அவர் எழுதிய ஒரு மடலின்படி, "அவர்கள் என்னை அலங்கோலமான நிலையில் வைத்துப் பிடித்தார்கள்ஒரு காட்டு விலங்கினைப் போல் அடைத்து வைத்தார்கள்."
     உண்ணா நோன்பிருந்து, நோய்வாய்ப்பட்டு, விடுதலையான ரோசா,  பின்லாந்து சென்று, லெனின் உட்படப் புலம்பெயர்ந்த மார்க்சியவாதிகளைச் சந்தித்தார். "லெனினுடன் கதைப்பதே இன்பம். அவர் பலதிறப்பட்டவர். பரந்த அறிவு படைத்தவர். அவருடைய கடுத்த முகம் எனக்கு மிகவும் பிடித்தமானது" என்று ரோசா கருத்துரைத்தார்.
     எனினும், லெனினுக்கும் ரோசாவுக்கும் இடையே தேசியப் பிரச்சனை குறித்து காரசாரமான விவாதம் ஒன்று இடம்பெற்றது: (1) பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து அயர்லாந்தும், (2) ரசிய ஆதிக்கத்திலிருந்து போலாந்தும், பின்லாந்தும், (3) சுவீடிய ஆதிக்கத்திலிருந்து நோர்வேயும், (4) பால்க்கன் பேரரசிலிருந்து சேர்பியாவும், பல்கேரியாவும் விடுதலை பெறுவது, இந்நான்கு பேரரசுகளையும் நலிவுறுத்தும் என்றும், அதேவேளை அத்தகைய தேசங்களின் விடுதலை அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஓங்குவதற்கு வழிவகுப்பது தவிர்க்க முடியாதது என்றும், எனினும் அது மக்களாட்சிக்கும் புரட்சிக்கும் ஒரு படிக்கல் என்றும் வாதாடினார் லெனின்.
     லெனினே ஒப்புக்கொண்டவாறு, அத்தகைய விடுதலை அங்கெல்லாம்  முதலாளித்துவ வர்க்கம் ஓங்க வழிவகுக்கும் என்றபடியால், ரோசா அவற்றின் விடுதலையை வன்மையாக எதிர்த்தார்.
     லெனினோ, அடக்கியொடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலை பெறுவதில் மக்களாட்சி விழுமியம் பொதிந்துள்ளது என்றும், ஆதலால் அது முதலாளித்துவத் தன்மை வாய்ந்ததாய்  விளங்கினாலும், அதனை ஆதரிக்க வேண்டும் என்றும், சேர்பிய, பல்கேரிய தேசங்களின் விடுதலையால் பால்க்கன் பேரரசில் நிலையூன்றிய நிலமானியக் கட்டுக்கோப்பு தகர்க்கப்படும் என்றும், அங்கு ஓரளவு விடுதலைபெற்ற உழவர்களும், காணிச் சொந்தக்காரர்களும் மேலோங்குவார்கள் என்றும், அது மக்களாட்சிக்கு ஓர் ஏணிப்படி என்றும், ஆகவே அதனை ஆதரிக்கவேண்டும் என்றும்  வாதாடினார்.
     "பிரித்தானியப் பேரரசிலிருந்து அயர்லாந்து விடுதலை பெறும்வரை, பிரித்தானியத் தொழிலாளிகள் விடுதலை பெறமுடியாது" என்று மார்க்ஸ் இட்ட முழக்கத்துடன் லெனினுடைய நிலைப்பாடு உடன்படுவதும், ரோசாவின் நிலைப்பாடு முரண்படுவதும் கவனிக்கத்தக்கது.
     தேசங்களின் விடுதலை, தேசிய முதலாளித்துவத்தின் விடுதலையாகவே அமையும், ஆகவே சமூகவுடைமைவாதிகள் தேசியக் கண்ணோட்டத்தை விடுத்து, சர்வதேசியக் கண்ணோட்டத்தையே பற்றிக்கொள்ள வேண்டும் என்பது ரோசாவின் வாதம்.
     ரோசாவும், லியோவும் வெறுங் காதலர்களேயொழிய, வாழ்க்கைத் துணைவர்கள் அல்லர். "எங்களுக்கு ஒரு பிள்ளை தேவை என்பதை நான் அடிக்கடி உணர்ந்துகொள்கிறேன். இந்தக் குறையை என்னால் தாங்கமுடியவில்லை. வீட்டில் இருப்பது இன்பமே. ஆனால், பிள்ளகள் இல்லாத வாழ்வு, வெறுமையும் மடைமையும் நிறைந்த வாழ்வு என்பது உனக்குப் புரியவில்லை" என்று பிரிவுத் துயரில் அவர் லியோவுக்கு எழுதியதுண்டு. ரோசாவுடன் குடும்பம் நடத்தும் மனநிலையில் லியோ இருக்கவில்லை. எனினும், ரோசாவை ஒரு புதிய காதலனுடன் கண்டபொழுது, லியோ பொறாமைப்பட்டு, ரோசாவை அச்சுறுத்தினான். ரோசா தற்பாதுகாப்புக்காக ஒரு கைத்துவக்கு வாங்கி வைத்திருந்தார்!  
     1907ல் ரோசா ஜேர்மனி திரும்பியபொழுது மக்கள் அவரை மொய்க்கவே, கிளர்ச்சியை விரும்பாத அவருடைய சமூக மக்களாட்சிக் கட்சியினர் மிகவும் சங்கடப்பட்டார்கள். அதேவேளை, பொறிபறக்கும் பேச்சாளரும் எழுத்தாளருமாகிய ரோசாவை அவர்களால் தட்டிக்கழிக்க முடியவில்லை. ஆதலால் கட்சிக் கல்லூரியில் அவரை ஒரு விரிவுரையாளராக அமர்த்தினார்கள்.
     அதே ஆண்டில், ஸ்டட்கார்ட் என்ற ஜேர்மன் நகரில் கூடிய சர்வதேய சமூகவுடைமையாளர் பேரவையில் லெனினும் ரோசாவும் சேர்ந்து போருக்கு எதிராக முன்வைத்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது: "படையாண்மைக்கு (இராணுவ தர்பாருக்கு) எதிரான போராட்டத்தை சமூகவுடைமை நோக்கிய வர்க்கப் போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதுமுதலாளித்துவ அரசுகளுக்கு இடையே நிகழும் போர்கள், உலக சந்தைகளைப் பற்றிகொள்வதற்கு அவை போட்டியிடுவதன் பெறுபேறேஅதில் அந்நிய மக்களும், அந்நிய தேசங்களும் அடிமைகொள்ளப்படுகின்றனஆதலால் போர்கள் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பாகும்முதலாளித்துவ பொருளாதாரம் ஒழிக்கப்பட்ட பின்னரே போர்கள் ஒழியும்போர் மூள்வதைத் தடுப்பதற்கு இயன்றவரை பாடுபடுவதே உழைக்கும் வர்க்கத்தின், அவர்தம் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் கடமைஅதனை மீறிப் போர் மூண்டால், போரினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, மக்களைக் கிளர்ந்தெழச்செய்து, முதலாளித்துவ வர்க்க ஆட்சியை ஒழிப்பது அவர்தம் கடமை…"    
     1907ம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற தேர்தலில் சமூக மக்களாட்சிக் கட்சி 32 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளையும், 42 நாடாளுமன்ற இருக்கைகளையும் வென்றெடுத்து, இரண்டாவது பெரிய கட்சியாக ஓங்கியது. ஆதலால் அது சர்வதேய சமூகவுடைமைவாதத்தைத் துறந்து, தேசியவாதத்தைப் பற்றிக்கொண்டது. அதன் பயனாக 1912ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அது 110 இருக்கைகளுடன் முதலாவது பெரும் கட்சியாக மாறியது. இவ்வாறு (ரசிய போல்சிவிக் கட்சியைத் தவிர ஏனைய) ஐரோப்பிய சமூகவுடைமவாதக் கட்சிகள் அனைத்தும் தத்தம் நாடுகளின் போர் நடவடிக்கைகளை ஆதரிக்கலாயின.
     போருக்கும், சமூக மக்களாட்சிக் கட்சிக்கும் எதிராக வெகுண்டெழுந்த ரோசா, மக்களைக் கிளர்ந்தெழும்படி பேசியும், எழுதியும் புரிந்த குற்றத்துக்காக 1915ல் அவருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1916ல் அவர் விடுதலையான பிறகு நிகழ்ந்த மே தினக் கொண்டாட்டத்தை ஒட்டி, அவரும் தோழர்களும் நடத்திய பேரணியில் 10,000 பேர் கலந்துகொண்டார்கள். "அரசு வீழ்க! போர் ஒழிக!" என்று அவர்கள் அறைகூவினார்கள். ஆதலால் ரோசா மீண்டும் சிறைவைக்கப்பட்டார்.
     படையினரின் கிழிந்த, குருதி தோய்ந்த சீருடைகள் வண்டி வண்டியாக அவருடைய சிறைச்சாலைக்கு வந்த வண்ணம் இருந்தன. பெண்-கைதிகள் அவற்றைப் பொருத்துவார்கள். அப்பொழுது மிகுந்த சுமையுடன் ஒரு வண்டி வந்தது. அதனைச் செலுத்திவந்த படையாள், அவ்விரு எருமைகளுக்கும் விளாசி அடித்ததில், அவற்றின் வன்தோல் கிழிந்து, குருதி பாய்ந்தது. ரோசா அதனை ஒரு சக கைதியிடம் தெரிவித்தார். "உனக்கு உயிர்கள்மீது இரக்கம் இல்லையா?" என்று அவனிடம் கேட்டபொழுது, "மனிதர்களாகிய எங்கள்மீது எவருக்காவது உள்ள இரக்கத்தைவிட அதிக இரக்கம், எனக்கு இந்த எருமைகள்மீது  இல்லை என்பது உண்மைதான்!" என்று பதிலிறுத்த படையாள், ஒரு கெட்ட முறுவலிப்புடன் மேலும் விளாசி அடித்தான்.  "அப்பொழுது போரின் பயங்கரம் முழுவதும் என் கண்முன் தோன்றியது" என்று எழுதிச் சென்றுள்ளார் ரோசா.       
     1914 முதல் 1918 வரை இடம்பெற்ற முதலாம் உலகப் போரில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டது. ஜேர்மன் பேரரசர் நாட்டைவிட்டுத் தப்பியோடினார். நாடு முழுவதும் தொழிலாளர் மன்றங்களும், படையினர் மன்றங்களும் முளைவிட்டன. புரட்சியை ஆதரிப்பதா, தமது கட்சியை ஆதரிப்பதா என்று தெரியாமல் தொழிலாளர்கள் திண்டாடினார்கள். கலவரமடைந்த அரசாங்கம், ஆட்சியதிகாரத்தை சமூக மக்களாட்சிக் கட்சியிடம் ஒப்படைத்தது.
     என்ன விதப்பட்டும் புரட்சியைத் தவிர்க்கவே சமூக மக்களாட்சிக் கட்சித் தலைவர்கள் விரும்பினார்கள். ஒரு புரட்சிக்கு இடம் கொடுத்தால், அதே புரட்சியால் தாங்கள் வாரிச்செல்லப்படுவோம் என்பதை நன்கறிந்தவர்கள் அவர்கள். ஆதலால் அவர்களுடைய கட்டளைப்படி தொழிலாளர் - படையினர் மன்றத் தலவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆர்ப்பாட்டம் செய்தோர் படையாட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எந்த  சமூக மக்களாட்சிக் கட்சியில் ரோசா அங்கத்துவம் வகித்தாரோ, அந்தக் கட்சியின் அரசாங்கமே அவரைக் கொல்வதற்கு உத்தரவு பிறப்பித்தது. ரோசாவின் கொலஞர்களை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக, லியோவும் கையோடு கொல்லப்பட்டான். கொலைஞர்களுள் ஒருவன் தப்பிச்செல்ல அனுமதிக்கப்பட்டான்மற்றவன் ஈராண்டுச் சிறைவாசத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டான்
      சிவப்பு ரோசாவும் இனி இல்லையே
     அவர் புதையுண்ட இடமும் புலப்படவில்லையே
Wendy Forrest, Rosa Luxemburg, Hamish Hamilton, London, 1989;  Alfred Cobban, The Nation State and Self-Determination, Collins, London,1969,  மணி வேலுப்பிள்ளை, 2010-05-01.

No comments:

Post a Comment