கண்ணபிரான் நினைவுரை


கண்ணபிரான்
பாதுகாப்பையும் இறைமையையும் கட்டிக்காத்தல் 

Image result for c. v. Wigneswaran
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
இலங்கை வட மாகாண முதலமைச்சர்
(சுருக்கம்)
1994 முதல் 2008 வரை மக்கள் குடியியல் சுதந்திர சமாசத்தின் (People's Union for Civil Liberties) தலைவராக விளங்கிய கே. ஜி. கண்ணபிரான் இந்தியாவின் மகத்தான மனித உரிமை வினைஞர் மட்டுமல்ல, சட்டவல்லுனரும் கூட. அன்னாரை நினைவுகூர்ந்து "பாதுகாப்பையும் இறைமையையும் கட்டிக்காத்தல்" என்னும் பொருள் குறித்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
(1) அரசியல்யாப்பு: அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டபொழுது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஆட்கொணர்வு ஆணையை (writ of habeas corpus) இடைநிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்த வேளையில், "அரசியல்யாப்பு ஒரு தற்கொலை உடன்படிக்கை அல்ல" என்று அதற்கு நியாயம் தெரிவித்தார். 90 ஆண்டுகள் கழித்து பேச்சுச் சுதந்திர வழக்கு ஒன்றில் (Terminiello v. City of Chicago) நீதியரசர் ஜாக்சன் ஏனைய நீதியரசர்களுடன் இணங்காமல் அளித்த தனது சொந்தத் தீர்ப்பில் இவ்வாறு தெரிவித்தார்: "குடியியற் சுதந்திரம் என்றால், மக்கள்திரள்மீது இடப்பட்ட முட்டுக்கட்டைகள் அனைத்தையும் அகற்றுவது என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இந்த நீதிமன்றம் சென்றுவிட்டது. அத்துடன் உள்ளூரில் ஒழுங்கினைப் பேணுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் குடிமக்களின் சுதந்திரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கும் இந்த நீதிமன்றம் சென்றுவிட்டது. ஒழுங்கினையா, சுதந்திரத்தையா தேர்ந்தெடுப்பது என்பதல்ல பிரச்சனை. ஒழுங்குடன் கூடிய சுதந்திரத்தையா, ஒழுங்கோ சுதந்திரமோ அற்ற அராசகத்தையா தேர்ந்தெடுப்பது என்பதே பிரச்சனை. நீதிமன்றம் சற்று நடைமுறை ஞானம் கொண்டு அதன் கோட்பாட்டு நியாயத்தைப் புடம்போடாவிட்டால், அரசியல்யாப்பில் பொதிந்துள்ள உரிமைப் பிரகடனத்தை அது ஒரு தற்கொலை உடன்படிக்கையாக உருமாற்றும் ஆபத்தை நாம் எதிர்கொள்ளக் கூடும்."     
(2) மனித உரிமைகள்: மனித உரிமை விழுமியங்களுக்குத் துணைநிற்பவர்கள் யார்? சாராம்சத்தைப் பொறுத்தவரை மனித உரிமை ஒரு மேல்நாட்டு எண்ணம் அல்லவா? பழம்பெரும் வரலாறும் நாகரிகமும் படைத்த நாங்கள் எதற்காக உலகத்தை அடிமைகொண்டு கட்டியாண்ட நாடுகள் புதுக்கப் புனைந்த எண்ணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்? இது "மனித உரிமை" அடியாட்களைக் கொண்ட அரசு சாரா அமைப்புகள் ஆதரிக்கும் நவகாலனித்துவம் அல்லவா? மற்ற நாடுகளுக்கு இடித்துரைக்க மேற்படி நாடுகளுக்கும் சர்வதேய அமைப்புகளுக்கும் என்ன அருகதை இருக்கிறது? இது அரசுகளின் இறைமையை மீறவில்லையா? இறைமை என்பது சர்வதேய சட்டத்தின் மிகவும் புனிதமான அம்சம் அல்லவா? அதன் அத்திவாரம் அல்லவா அது? பாதுகாக்கும் பொறுப்பு (R2P) குறித்த அறைகூவல்கள் அனைத்தும் ஏகாதிபத்திய தலையீடுகளின்  மறைதிரைகள் அல்லவா? இத்தகைய வினாக்களுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.
2014ம் ஆண்டு ஜெனீவாவில் மனித உரிமை மன்றம் கூடியபொழுது, "இலங்கையில் மீளிணக்கம், பொறுப்பேற்பு, மனித உரிமைகள் மேம்படுத்தல்" பற்றிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாத காரணத்தை விளக்கியுரைத்த ஐ.நா.வுக்கான இந்தியப் பிரநிதி திலிப் சின்கா (Dilip Sinha) இவ்வாறு தெரிவித்தார்: "தேசிய இறைமைக்கும், அமைப்புகளுக்கும் பாதிப்பு விளையும் வண்ணம் தலையிடும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது எதிர்விளைவுக்கு வழிவகுக்கும் என்று இந்தியா உறுதிபட நம்புகிறது. ஆக்கபூர்வமான சர்வதேய உரையாடல் – ஒத்துழைத்தல் என்னும் தலையாய நெறியிலிருந்து வெகுதூரம் பிறழ்வதால், மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் பாதுகாக்கும் பணிக்கு உலகளாவிய முறையில் மரியாதை கிடைப்பதை மேம்படுத்தும் நோக்குடன் மனித உரிமை மன்றம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாதிக்கப்படக் கூடும்."
இலங்கை அரசாங்கம் இன்னும் நேரடியாகவே தெரிவித்தது: "இத்தீர்மான வரைவு அறவே தவறான முன்னீடுகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் அரசாகிய இலங்கையின் இறைமையையும், சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாலும், சர்வதேய சட்ட நெறிகளை மீறுவதாலும், இலங்கை மக்களின் நலன்களுக்கு கேடுசூழ்வதாலும் அதை இலங்கை திட்டவட்டமாகவும், முற்றுமுழுதாகவும் நிராகரிக்கிறது." 
(3) பாதுகாப்பு: முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்னமாரா (Robert McNamara) ஒருதடவை கூறினார்: "பாதுகாப்பு என்பதை நாங்கள் படைத்துறையுடன் மட்டுமே, இன்னும் திட்டவட்டமாகச் சொல்வதாயின், படைக்கலங்களுடன் மட்டுமே தொடர்புபடுத்தி வந்துள்ளோம். ஆனால் உண்மை அதுவல்ல." இன்றைய உலகமயமாக்க ஊழியில் பயங்கரவாதம் தொட்டு ஈபோலா வரையான ஆபத்துகள் அனைத்தும் தேசிய பாதுகாப்புக்கு உட்பட்ட பிரச்சனைகளே. எனினும் அதை நான் "தேசிய பாதுகாப்பு" என்று வரையறுக்கப் போவதில்லை. "ஆட்சிபீடப் பாதுகாப்பு" தான் இடக்கரடக்கலாக "தேசிய பாதுகாப்பு" எனப்படுகிறது. நான் ஏற்றிப்போற்றுவது "மனித பாதுகாப்பு" என்பதையே. 1994ல் ஐ. நா, அபிவிருத்தி திட்டத்துறை சுட்டிக்காட்டியது போல் அனைவரும் அச்சமின்றி வளமுடன் வாழும் சுதந்திரத்தை நிலைநாட்டுவதே உலகளாவிய பதுகாப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குச் சிறந்த வழி. மனித பாதுகாப்பு என்னும் வரையறைக்குள் ஏழு விடயங்கள் அடங்கியுள்ளன: பொருளாதார பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, சூழற் பாதுகாப்பு, ஆட்பாதுகாப்பு, சமூகத்தின் பாதுகாப்பு, அரசியற் பாதுகாப்பு.
பாதுகாப்பை ஆட்சிபீடப் பாதுகாப்பு என்று கொள்வதை விடுத்து மனித பாதுகாப்பு என்று கொண்டால், சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் இடையே எழுவதாகக் கொள்ளப்படும் நெருக்கடிகள் பலவற்றை எங்களால் தீர்க்க முடியும். வெட்டவெளிச் சிறைகளில் இடப்பட்டிருந்த 2½ இலட்சம் தமிழர்களை 2010ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான தேர்தலுக்கு சற்று முன்னதாக சட்ட அடிப்படை எதுவுமின்றி விடுதலைசெய்தமை ஆட்சிப் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முதன்மையை உணர்த்தும் தலைசிறந்த எடுத்துக்காட்டு. போரின்பொழுது இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளிவராவாறு தடுக்கும் நோக்குடனும், மக்கள்பரம்பலை மாற்றும் நோக்குடனும் அவர்கள் சிறைவைக்கப்பட்டார்கள்.  தகவல்கள் தங்குதடையின்றி வெளிவந்தால், இது "மனிதாபிமானப் பணி," இதில் "மக்களுக்கு இம்மியும் இழப்பில்லை" போன்ற சொற்சிலம்பங்கள் பொய்த்துவிடும். மனிதாபிமானச் சட்டம் பாரதூரமான முறையில் மீறப்பட்டமை குறித்து வழக்குத்தொடுக்கும்படி கோரிக்கைகள் எழுப்பப்படும். ஆணைப் பொறுப்பு நெறி (principle of command responsibility) ஆட்சிபீடத்துக்கு ஆபத்து விளைவிக்கும். எனினும் ஆட்சிபீடம் தேர்தலில் வென்றாக வேண்டும். மக்களை விடுதலைசெய்தால், அவர்கள் நன்றியுணர்வோடு ஆட்சிபீடத்தை ஆதரித்து வாக்களிப்பார்கள்! மனித பாதுகாப்புக்கு முதன்மை அளித்திருந்தால், மக்களை ஏற்கெனவே விடுதலை செய்திருக்கலாம் அல்லவா?
இலங்கை அரசுக்கு மனித பாதுகாப்பில் அக்கறை இருந்திருந்தால், ஒருபுறம் 2011ல் புகுத்தப்பட்ட கொடிய அவசரகால ஒழுங்குவிதிகளை அகற்றிவிட்டதாகப் பறைசாற்றிவிட்டு, மறுபுறம் அவற்றுக்கு நிகரான கொடிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தியிருக்க மாட்டாது – ஒருபுறம் ஈர்த்து மறுபுறம் ஏய்க்கும் சூழ்ழ்ச்சியில் ஈடுபட்டிருக்க மாட்டாது. "அவசரகால ஒழுங்குவிதிகள் அகற்றப்பட்டாலும், தடுப்புக்காவல் முறைமைகள் மாறமாட்டா. சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டர்கள்" என்பதை சட்டத்துறை அதிபதி வலியுறுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  
(4) படைமயமாக்கம்: வடபுலத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்பதற்காக அது படைமயமாக்கப்படவில்லை. மக்களை அடக்கி ஒடுக்கி அடிபணிய வைப்பதற்காகவே வடபுலம் படைமயமாக்கப்பட்டுள்ளது – மக்களாட்சிநெறிக்கு அமைவாகவோ அரசியல்நெறிக்கு அமைவாகவோ ஆட்சியாளருடன் முரண்படாவாறு மக்களை முடக்குவதற்காகவே அது படைமயமாக்கப்பட்டுள்ளது. மனித பாதுகாப்பை நாடும் ஓர் அரசில் படையினர் மக்களின் காணிகளை அபகரிக்க மாட்டார்கள். தமது காணிகளின் வரும்படிகளை  படையினரிடமே மக்கள் விலைகொடுத்து வாங்க மாட்டார்கள். போரினால் நொந்துகெட்ட மக்கள் கொட்டில் குடில்களில் பரிதவிக்க, சுற்றுலாவாணருக்கான விடுதியகங்களும் குழிப்பந்தாட்டத் தரைகளும்  தலைகாட்ட மாட்டா.
வலிகாமம் வடக்கில் 6381 ஏக்கர் காணியில் இலங்கை அரச படையினர் சட்டவிரோதமாக உயர் பாதுகாப்பு வலயம் அமைத்துள்ளார்கள். அது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் 2100க்கு மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன.  மேற்படி வலயத்துள் எஞ்சிமிஞ்சிய கட்டிடங்கள், வீடுகள், கோயில்கள், பள்ளிகள் அனைத்தும் படையினரால் அழித்தொழிக்கப்படுகின்றன. வடபுல முதல்வர் என்ற வகையில் நான் அவற்றைப் பார்க்கச் சென்றபொழுது, பாதுகாப்புச் செயலாளரிடம் (ஜனாதிபதியின் சகோதரரிடம்) அனுமதிபெற்று வரும்படி மிகுந்த மரியாதையோடு என்னைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்!  பாதுகாப்பில் எமது இறைமைவாய்ந்த அரசு கொண்ட கரிசனை அது!
அமரர் கண்ணபிரான் கூறினார்: "சட்டத்தையும் ஒழுங்கையும், அரசின் பாதுகாப்பையும் பேணும் சாக்கில் அரசு புரியும் வன்முறை, தனியாள் புரியும் வன்முறையை விடப் பன்மடங்கு  பெரியது, அழிவு விளைவிப்பது. தனியாளின் வன்முறை தணிந்தவுடன் அரச வன்முறை தணிந்துவிடாது. அரச வன்முறைக்கு அரசியல் நோக்கம் உண்டு. ஆகவே எதிர்ப்பு ஒழியும்வரை அரச வன்முறை அதன் போக்கில் தொடரும். அரசியல் முடிபுகள் எடுப்பதில் மக்கள் பங்குபற்றுவது மக்களாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் என்று கொள்ளப்படுவதால், அவர்களை அசண்டை கொள்ளும் நிலைக்கும், உடன்படும் நிலைக்கும் உள்ளாக்க வேண்டியிருக்கிறது."
(5) இலங்கை நீதித்துறை: இலங்கை அரசின் சட்டமூலங்களையும், அரசியல்யாப்புத் திருத்தங்களையும், அடிப்படை உரிமை மீறல்களையும் உச்ச நீதிமன்று ஆதரித்து வந்துள்ளது. அதே தடத்தில் ஒரு தலைமை நீதியரசர் அடியெடுத்து வைக்கத் தவறியதால், அரசின் சீற்றத்துக்கு அவர் பலியானதுண்டு. சட்டவிரோதமான கைது, தடுத்துவைப்பு குறித்த அடிப்படை உரிமை வழக்குகளை விசாரிக்கும் நீதியரசர்கள் சட்டத்துறை அதிபதியை நோக்கி, "பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்டவர் மீது வழக்குத்தொடர முடியுமா, அவரை விடுதலைசெய்ய முடியுமா, வழக்கு நடபடிக்கையை விரைவுபடுத்த முடியுமா என்பதைக் கண்டறியும்படி" கேட்டுக்கொள்வதுண்டு! ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டனைக்கு உள்ளாகும் அச்சமின்றி, சட்டதிட்டத்துக்கு உட்படாமல் மக்களை மேன்மேலும் கைதுசெய்து, அடைத்து வந்ததில் வியப்பில்லை. அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்ப்புகள் அளிக்கப்படாவாறு பார்க்கப்பட்டதால், மேற்படி மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் எம்மால் அம்பலப்படுத்த முடியவில்லை.
(6) இரண்டாந்தரக் குடிமக்கள்: தமிழ் பேசும் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகத் தாழ்த்துவதற்கு இலங்கை நீதித்துறை துணைநின்றது என்னும் உண்மையை முன்னாள் நீதியரசராகிய நான் மிகுந்த வேதனையுடன் ஒப்புக்கொள்கிறேன். தமிழரல்லாத மூவர் தமது ஆய்வுநூலில் இந்த உண்மையை உரிய சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளார்கள் (Dr. de Almeida Guneratne, Kishali Pinto Jayawardena, Gehan Gunatilleke, The Judicial Mind in Sri Lanka – Responding to the Protection of Minority Rights):
() 1956ல் தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஒரே நாளில் இரண்டாந்த்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள்.
() 1957ல் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக பிரதேச மன்றங்களை அமைக்கும் நோக்குடன் செய்துகொள்ளப்பட்ட பண்டா–செல்வா ஒப்பந்தத்தை பிரதமர் பண்டாரநாயக்காவே ஒருதலைப்பட்சமாக மறுதலித்தார். 1967ல் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செய்துகொள்ளப்பட்ட டட்லி–செல்வா ஒப்பந்தத்தை பிரதமர் டட்லியே ஒருதலைப்பட்சமாக மறுதலித்தார்.  
() காணி உரிமை, கல்வி உரிமை, வளர்ச்சி உரிமைகளை மறுக்கும் ஆழ்ந்து பரந்து விரிந்த கட்டமைப்புகள் மூலம் பாரபட்சத்துக்கு உள்ளான தமிழ் இளையோரின் மாயை அகலவே அவர்கள் ஊக்கமிழந்து விரக்தியடைந்தார்கள்.
() ஆட்சிக் கட்டுக்கோப்பு சிங்களமயமாக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தலைவர்களால் மக்களாட்சிநெறிக்கு அமைந்து நேரிய, நீடித்த அரசியல் தீர்வை ஈட்ட முடியவில்லை.   
(7) இறைமை நெறி: அன்றைய மன்னரின் தெய்வீக இறைமையே இன்றைய அரச இறைமையின் தோற்றுவாய். அரச இறைமையை விடுத்து மக்களின் இறைமையையே, சட்ட ஆட்சியின் இறைமையையே நான் ஏற்றிப்போற்றுகிறேன். மக்களின் இறைமையை நிலைநிறுத்துவது எங்ஙனம்? பெரும்பான்மையோர் தமது விருப்பத்தை சிறுபான்மையோர் மீது திணித்தால் என்ன நடக்கும்? இவற்றுக்கான விடை "மனித பாதுகாப்பில்" பொதிந்துள்ளது. அரசின் இறைமையை ஏற்றிப்போற்ற வேண்டும் என்பதற்காக ருவாண்டாவில் 100 நாட்களுள் 8 இலட்சம் துற்சி இனத்தவர் படுகொலை செய்யப்பட்டபோது நடந்தது போல் உலகம் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது. அது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஜனாதிபதி கிளின்டன் எதிர்கொண்ட ஒரு படுதோல்வி என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கையில் போர் தணியுந் தறுவாயில் குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஐ.நா. தன்னைத் தானே சாடியுள்ளது. அது தொடர்பான ஐ.நா. உள்ளக அறிக்கையை வரைந்த சாள்ஸ் பெற்றி (Charles Petrie) "இலங்கையில் ஐ.நா.வின் பாரிய தோல்வி" என்று அதை விவரித்துள்ளார். 1971ல் இந்தியா தலையிடத் தவறியிருந்தால், வங்கதேசத்தில் இனப்படுகொலை மேற்கொண்டு தொடர்ந்திருக்காதா? மனித பாதுகாப்பு நெறிநின்று தனது சொந்த மக்களின் இறைமையையும், சட்ட ஆட்சியின் இறைமையையும் பேணாத அரசு இறைமை கோர அருகதை அற்றது. மக்களின் இறைமையிலிருந்தே அரசின் பிரதிநிதித்துவ இறைமை ஊட்டம் பெறுகிறது. உள்நாட்டுக் குழப்பங்களைத் தணிக்கும் சாக்கில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று நான் கூறவில்லை. உள்நாட்டு இறைமையைக் கட்டிக்காக்கும் சாக்கில் எந்த நாடும் சர்வதேய சட்டத்தை மீற இடங்கொடுக்கக் கூடாது என்றுதான் கூறுகிறேன்.
இன்றைய உலகில் அரசின் இறைமை பெரிதும் ஒவ்வாத விடயமாக மாறியுள்ளது. சர்வதேய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பாரிய அதிகாரம், அரசின் இறைமையை அரித்து வருவதை சர்வதேய குற்றவியல் நீதிமன்றின் முன்னாள் தலைமை வழக்குத்தொடுநர் ஒகம்போ (Luis Moreno Ocampo) சுட்டிக்காட்டியுள்ளார் (BBC Hard Talk, September 2014). சர்வதேய பொருத்தனைகளும் (treaties), மீறவொண்ணா வழமைகளும் (jus cogens norms) ஓங்கிய இக்காலகட்டத்தில் இறைமை இன்னும் ஏற்புடையதா? சர்வதேய சட்டம் என்பதே ஒருவகையில் அரசின் இறைமையைக் கட்டுப்படுத்துகிறதே! உடன்படிக்கைகள் பேணப்பட வேண்டும் (pacta sunt servanda) என்னும் நெறியை சர்வதேய வழமைச் சட்டம் போன்று நடைமுறைப்படுத்தவேண்டிய கடப்பாடு கூட அரசின் இறைமையை விஞ்சுகிறதே! பின்னிப்பிணைந்த இன்றைய உலகில் ஒருநாட்டுப் பிரச்சனை (மத்திய கிழக்கில் நிகழ்வது போல்) பிறநாட்டுக்குப் பரவுகிறது. எல்லைகடந்த மொழி, சமய, பண்பாட்டு உறவுகளால் தேசியப் பிரச்சனைகள் சர்வதேயப் பிரச்சனைகளாக மாறிவிடுகின்றன. உள்நாட்டுப் பிரச்சனை வெளிநாட்டில் தாக்கம் விளைவித்தவுடன், வெறுமனே உள்நாட்டுப் பிரச்சனை என்ற நிலையை அது இழந்துவிடுகிறது. தாக்கத்துக்கு உள்ளாகும் நாடுகள் அனைத்தும் அதில் பங்காளிகளாக மாறிவிடுகின்றன.  
(8) தமிழ் பேசும் மக்கள்: பல்லாயிரம் ஆண்டுகளாக தமது வட-கீழ் தாயகத்தில் பெரும்பான்மையோராக வாழ்ந்துவந்த தமிழ் பேசும் மக்கள் முழு இலங்கை என்னும் கட்டுக்கோப்பில் சிறுபான்மையோராக மாற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல்வாரியாக ஓரங்கட்டப் பட்டுள்ளார்கள். போர்க்காலத்தில் மிருகத்தனமாக நடத்தப்பட்டுள்ளார்கள். பெரும்பான்மைவாதக் கொள்கைகளால் அவர்கள் ஒதுக்கப்பட்டு, முடக்கப்படு, புறங்கட்டப்பட்டுள்ளார்கள்.  நீதித்துறை கூட இடைவிடாது திட்டமிட்டு அவர்களுக்கு அநீதி இழைத்து வந்துள்ளது.
தான் துணிந்தவாறு செயற்படும் சுதந்திரம் இலங்கையின் தேர்தல் ஆணையாளருக்கு இல்லை என்றும், வட மாகாணத்தில் குடிமக்களின் வாழ்வில் படையினரின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் என்றும் பொதுநலவாய செயலாளர்-அதிபதி கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். நீதித்துறை அரசுக்கு அடிபணிய வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு அடிபணியாதபடியால் பழிக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதியரசரை ஆதரித்த நீதிச்சேவை ஆணையத்தின் செயலாளர் தாக்கப்பட்டார். அரசாங்க சேவை முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் வடபுல படைத்தலைவராக விளங்கிய ஒருவரே இன்று வடபுல ஆளுநர்! முதல்வர் என்ற வகையில் எனது நிருவாகம் ஒருபுறம், ஆளுநர் என்ற வகையில் அவரது நிர்வாகம் மறுபுறம்! அவரது தலையீட்டை நேரில் அறிந்தவன் நான். வட மாகாண மன்றத்தின் தலைமைச் செயலாளர் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டவர். எமது மறுப்பையும் மீறி அவர் தொடர்ந்தும் பதவியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார். 
(9) ஐ. நா. மனித உரிமை மன்றம்: இந்த மன்றத்தில் மூன்று தடவைகள் இலங்கை தோல்வி கண்டுள்ளது. ஐ. நா. தீர்மானம் இலங்கை அரசின் இறைமையை மீறுவது, சர்வதேய சட்டத்துக்கு மாறானது என்று அரசு கருதினால், அந்த விடயத்தை சர்வதேய குற்றவியல் நீதிமன்றிடம் பாரப்படுத்தி, அதன் மதியுரையைப் பெற்றுத்தரும்படி ஐ.நா. பொதுச் சபையிடமோ பாதுகாப்பு மன்றத்திடமோ கேட்டுக்கொள்ளலாமே! போகட்டும், ஐ. நா.விலிருந்து விலகிக்கொள்ளலாமே! அதை விடுத்து சர்வதேய கடப்பாடுகளை இலங்கை அரசு வெகுண்டெழுந்து மீறிவருகிறது. அதைவிட மோசம், ஐ.நா. விசாரணைக்கு சான்றுகள் திரட்ட முயல்வோரை அது கைதுசெய்து அச்சுறுத்தி வருகிறது. அவை பொய்ச்சான்றுகள் என்பது அரசின் வாதம். அவை பொய்ச்சான்றுகள் என்றால், அவற்றை முறியடிக்க மெய்ச்சான்றுகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைப்பதே சிறந்த வழி அல்லவா? உரிய சான்றுகள் நாட்டுக்கு வெளியே கசிவதை அரசு விரும்பவில்லை. அன்று 3½ இலட்சம் தமிழ் மக்களை வெட்டவெளிச் சிறையில் இட்ட காரணம் அதுவே.
(10) செல்வநாயகம்: 1974ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டுக்கு அனுப்பிவைத்த மடலில்  எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இப்படி எழுதியிருந்தார்: "இன்று இந்த நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. பல்வேறு வகைப்பட்ட இனத்துவ பாரபட்சங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவர்கள் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவை எல்லாம் தமிழரின் இனப்படுகொலைக்கு இட்டுச்செல்லக்கூடும். அவர்களின் அவலத்தை உங்களின் ஊடாக உலகின் மனச்சாட்சிக்குப் புலப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் இந்த மடல் உங்களிடம் சமர்ப்பிக்கப்படுகிறது." செல்வநாயகத்தின் மடலை வெளியுலகம் பொருட்படுத்தியிருந்தால், இலங்கையில் நிகழ்ந்த துன்பியலைத் தவிர்த்திருக்க முடியும்.
(11) இந்திய-இலங்கை உடன்படிக்கை: ஆயிரக் கணக்கான அகதிகள் இந்தியா வந்தடைந்தபடியாலும், சர்வதேய மனிதாபிமானச் சட்டம் மீறப்பட்டபடியாலும், இந்திய தேசிய பாதுகாப்பையும் நலனையும் பேணவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியாலும் 1987ல் இந்தியா இலங்கையில் தலையிட்டது. இந்திய-இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டது. அது இரு நாடுகளுக்கு இடையே செய்துகொள்ளபட்ட உடன்படிக்கை. வடக்கு-கிழக்குவாழ் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் நலன்களையும் முன்வைக்கும் பிரதிநிதியாக இந்தியா பங்குபற்றியது. உடன்படிக்கைக்குப் பொறுப்பேற்று உத்தரவாதமளிக்கும் தரப்பாகவும் இந்தியா செயற்பட்டது. அப்புறம், போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைக்கு வேண்டிய படைபல, அரசியல், உளவுத்துறை உதவிகளை இந்தியா வழங்கியது. போர் முடிந்த பின்னர் உருப்படியான அரசியல் தீர்வு காணப்படும் என்னும் கூற்றின் அல்லது வாக்குறுதியின் பேரிலேயே இலங்கைக்கு இந்தியா உதவியது.
2009ல் ஐ. நா. செயலாளர் அதிபதியும், இலங்கை அரசும் வெளியிட்ட கூட்டறிக்கையின் ஊடாக சர்வதேய சமூகத்துக்கும் அதே வாக்குறுதி அளிக்கப்பட்டது. மக்கள்தரப்புகள் அனைத்துக்கும் ஏற்புடைய தேசியத் தீர்வு காணப்படும் என்று இலங்கை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முழங்கினார். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார். இறுதித் தீர்வு காணும்பொருட்டு தமிழ்க் கட்சிகள் உட்பட எல்லாத் தரப்புகளுடனும் கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்தார்.     
(12) இந்தியாவின் கடப்பாடு: இலங்கை மக்களின் பொதுநலனைப் பேணவேண்டிய சட்டபூர்வமான கடப்பாடு, அறநெறிக் கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவுக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளையும், சர்வதேய சட்டத்துக்கு அமைவான கடப்பாடுகளையும் நிறைவேற்றும்படி இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். இலங்கையில் நீதியும் உண்மையும் ஓங்குவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்படும் சர்வதேய நடைமுறைகளுக்கு இந்தியா துணைநிற்க வேண்டும். இலங்கையில் மக்களாட்சியும், சட்ட ஆட்சியும் மீட்சிபெற இந்தியா உதவ வேண்டும். சிறுபான்மையோரைத் துன்புறுத்தி அலைக்கழிக்கும் செயல்களை நிறுத்துமாறும், குடிவாழ்வு மீள வகைசெய்யுமாறும், படைமயமாக்கத்தை ஒழிக்குமாறும் இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும். இந்தியா அதன் "தடா", "பொடா" சட்டங்களை நீக்கியது போல் இலங்கையும் அதன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை  நீக்க இந்தியா நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் நலிபடுவோர் தமிழ் பேசும் மக்களே. அவர்களுக்கே இந்தியாவின் கடப்பாடுகள் மேலும் திட்பமாய்ப் பொருந்துகின்றன. தமிழ் பேசும் மக்களின் நம்பக முகவர் எனத்தக்க தரப்பு இந்தியாவே. ஆகவே தமிழ் பேசும் மக்கள் வதைக்கப்படாவாறும், அவர்களுடைய காணிகள் மீட்கப்படுமாறும், அவர்களின் பாரம்பரிய தாயகத்தில் நிலைகொண்டுள்ள படையினர் விலக்கப்படுமாறும், போரினால் வதையுண்ட சமூகத்தின் அவசர உளநல, சமூகநல தேவைகள் நிறைவேற்றப்படுமாறும், மாதரும் சிறுவரும் பாதுகாக்கப்படுமாறும் பார்க்க வேண்டியது இந்தியாவின் கடப்பாடுகள் ஆகும்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதன் ஊடாகவும், ஒற்றையாட்சித் தன்மையற்ற ஓர் அரசியல்யாப்பில் தகுந்த 13 சக திருத்தம் ஒன்றைப் புகுத்துவதன் ஊடாகவும் இந்தியா அதன் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். 1987 அக்டோபர் 28ம் திகதி தமிழ் மக்களின் தலைவர்கள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பிய மடலில் பொறித்த தீர்க்கதரிசன வார்த்தையை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய-இலங்கை உடன்படிக்கை மீறப்படும், இலங்கை அரசாங்கம் நயவஞ்சகம் புரியும், 13வது திருத்தம் ஒரு கேலிக்கூத்து, உடன்படிக்கையின் ஏற்பாடுகள் மீறப்படும், வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படும், மாகாண மன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரங்களுக்கு ஆப்பு வைக்கப்படும், ஒப்பாசாரப் பங்கு வகிக்கவேண்டிய ஆளுநர் நிர்வாகத்தில் தலையிடுவார்... என்றெல்லாம் அந்த மடலில் எதிர்வுகூறப்பட்ட அனைத்தும் இன்று மெய்யாகியுள்ளன. இலங்கை ஒரு பல்லின, பல்மத, பன்மொழி நாடு என்பதைக் கருத்தில் கொண்டு  அங்கு மனித பாதுகாப்பையும், மக்களின் இறைமையையும் இந்தியா நிலைநாட்ட வேண்டும்.
"தட்டிக்கேட்க ஆளில்லை என்றால், தம்பி சண்டப் பிரசண்டன்" என்னும் பழமொழியை நினைவூட்டுவது போல் நீதியரசர் கன்னா (Justice Khanna) கூறினார்: "இடையறா விழிப்புணர்வு என்னும் விலைசெலுத்தியே சுதந்திரத்தைக் கட்டிக்காக்க முடியும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், சுதந்திரத்தைக் கட்டிக்காக்க வேண்டியோர் பொதுமக்களே. மக்கள் மதியிழந்தால், அதிகாரபீடம் மமதை கொள்ளும் என்பதே வரலாறு எமக்குப் புகட்டும் பாடம்."
இடையறா விழிப்புணர்வுடன் இயங்கிய கண்ணபிரான் அவர்களையும், குடியியற் சுதந்திர சமாசத்தையும் ஏற்றிப்போற்றி எனது உரையை நிறைவு செய்கிறேன். 
PEOPLE'S UNION FOR CIVIL LIBERTIES (PUCL) - THE INAUGURAL K.G.KANNABIRAN MEMORIAL LECTURE at VIDYODAYA SCHOOL AUDITORIUM - NO: 1, Tirumalai Pillai Road, T Nagar, Chennai 600017 (near Valluvar Kottam) - On 9th November, 2014 at 11 am. - Address by Justice C.V.Wigneswaran, Chief Minister, Northern Province, Sri Lanka and Retired Judge of the Supreme Court of Sri Lanka on Safeguarding security and sovereignty.
தமிழ்: மணி வேலுப்பிள்ளை, 2014-12-10

No comments:

Post a Comment