கவிஞர் தம்பிமுத்து

Image result
மியரி ஜேம்ஸ் தம்பிமுத்து (1915-1983)
"கவிஞர்களுள் ஓர் இளவரசன்"
கலாநிதி டி. விக்னேசன் 

Tambimuttu: Bridge between Two Worlds என்பது கவிஞர் தம்பிமுத்து குறித்த சிறப்பிதழ். மேற்குலகில் வெளியிடப்பட்ட தம்பிமுத்துவின் ஒரேயொரு கவிதைத் தொகுதியின் கூறுகள் Poetry London இதழின் ஐந்து பதிப்புகளில் காணப்படுகின்றன. வேறு உதிரிக் கவிதைகளையும், திறனாய்வுகளையும் அவர் எழுதியதுண்டு. Poetry London, Lyrebird Press என்பவற்றின் நாற்பதுக்கு மேற்பட்ட பதிப்புகளில் வெளிவந்த அவருடைய ஆக்கங்கள் முக்கியமானவை. எனினும் ஒரு கவிஞர் அல்லது திறனாய்வாளர் என்ற வகையில் அவரது பிம்பத்துடனோ படைப்பாற்றலுடனோ அவை தொடர்புடையவை அல்ல. அவை தவிர அவர் எழுதிய வேறு ஐந்து சிறுகதைகள், அரங்கவுரைகள், முன்னுரைகள் முதலியவற்றைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினம்.   
அவருடைய ஒரே மகள் சகுந்தலாவிடம் கூட அவரது ஆக்கங்கள் எவற்றுக்கும் ஒவ்வொரு பிரதியேனும் கிடையாது. மேற்கண்ட சிறப்பிதழின் 274ம் பக்கத்தில் தம்பிமுத்துவே அதை ஒப்புக்கொண்டுள்ளார்:  "எனது அரும்பெரும் உடைமைகளுள் (மடல்கள், வெளிவராத கவிதைகள், சிறுகதைகள், வேறு எழுத்துமூலப்படிகள்... கொண்ட திரட்டு முதலியவற்றுள்) அநேகமானவை உள்ளடங்கிய பொதி ஒன்று" நியூ யார்க்கில் உள்ள British Eagle Airways அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அதேநாள் அது நொடிப்புக்குள்ளாகி, இழுத்துப் பூட்டப்பட்டுவிட்டது." எனினும் சம்பந்தப்பட்ட ஆக்கங்களின் விவரத்தை, அவை தொலைந்த காரணத்தை, பிரதிகள் வைத்திராத காரணத்தை அவர் எமக்குத் தெரிவிக்கவில்லை.
இலக்கியத் துறையில் தம்பிமுத்து ஏற்படுத்திய தாக்கம் பெரிதும் நாற்பதுகளில் முகிழ்த்தது. அதை மதிப்பிடுவதற்கு, 'Poetry London' பதிப்புகளையும், முப்பதுகளின் தொடக்கத்திலிருந்து வெளிவந்த மற்றும் பிற நூல்மதிப்புரைகள், வெளியீடுகள் அனைத்தையும் எடைபோட்டுப் பார்க்க வேண்டும். அத்தகைய முயற்சியில் இறங்க எனக்கு அவகாசமும் இல்லை; அதற்கு நான் பொருத்தமான ஆளுமில்லை. அவரைப் பற்றி நான் கலந்துரையாடிய தமிழர்களுள் அல்லது இந்தியர்களுள் பெரும்பான்மையோருக்கு அவரது எழுத்தில் அல்ல, அவரது புகழிலும் மேலிடத் தொடர்புகளிலும் மட்டுமே நாட்டம் இருப்பதாகத் தெரிகிறது.
தம்பிமுத்து ஒரு சர்ச்சைக்குரிய பேர்வழி. ஆதலால் இயல்பாகவே ஒரு சங்கதியை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒருபுறம் அவரை நேசித்தோர், நயந்தோர், அவரது பிரசுர வள்ளன்மையால் பயனடைந்தோர் அனைவரும் சமகால ஆங்கிலக் கவிதைத் துறையின் விருத்தியில் அவருக்கு அதிபெரும் பங்கு கோருவார்கள். மறுபுறம் அவரது சாதனையை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள், எந்த வகையிலும் அது குறித்து அலட்டிக்கொள்ளப் போவதில்லை. இன்னொருபுறம் அவரை விரும்பாதவர்கள், அவரது சொற்பெருக்கினால் புண்பட்டவர்கள், இலக்கிய அரங்கிலோ பிற்சுரோவியாவிலோ (Fitzrovia) அவரது தயவு கிடைக்கப்பெறாதோர் அனைவரும், அவர் ஆங்கில இலக்கியத்துடன் எதுவித தொடர்பும் அற்றவர் என்று மற்றவர்களால் ஒதுக்கப்படுவது கண்டு அகமகிழ்ச்சி அடையக்கூடும்.
தமிழர் பலரும் தம்பிமுத்துவின் கவிதைகளை வாசித்திருக்கிறார்கள் என்று உண்மையில் நான் எண்ணவில்லை. எனினும் அவற்றை நேர்த்தியாக வெளிக்கொணர்ந்தால், ஏறத்தாழ இலங்கைத் தமிழர் அனைவரும் இயல்பாகவே அவரது புகழொளியில் திளைக்க விழைதல் திண்ணம். தம்பிமுத்துவின் கவிதைகளை வெளிக்கொணர்வது எங்ஙனம்? அதைப் பற்றி இங்கு நான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. இங்கு நான் கூறவேண்டியதை மட்டுமே கூறுகிறேன். சக கவிஞர், சக திறனாய்வாளர் என்ற வகையில் அவரைப் பற்றி உரியவாறும், ஏன்  பரிவுடனும் கூட, எண்ணிப் பார்த்தே அதைக் கூறுகிறேன். அவரது ஆக்கங்கள் அனைத்தையும் என்னால் தேடிப்பிடிக்க முடிந்தால், பிறகு இன்னொரு கட்டுரையை நான் எழுத முயல்வேன் (இப்போதைக்கு நான் ஏற்கெனவே எழுதிய கட்டுரையைப் பார்க்கவும்: "Tambimuttu: Poet, Critic, Editor/Publisher" in Lanka: Studies in Lankan Culture, 6 (Uppasala University), December 1991, pp. 22-31: http://stateless.freehosting.net/TAMBIMUTTU.htm). பின்வரும் கட்டுரையில் கவிஞரையும், கவிதையியலையும் முதன்மைப்படுத்தியே எழுதுகிறேன்.       
உரிய விவரங்கள் அனைத்தையும் செப்பநுட்பமாகப் புகுத்தி தம்பிமுத்துவின் வாழ்க்கையை எழுத்தில் வடித்தால், அது ஒரு மாயவசியக் கதையைப் போல் அமைதல் திண்ணம்; பிற்சுரோவியா (Fitzrovia) எனப்படும் மாயவசிய அரசில் மாயவசியப்பட்ட மக்களை, மாயவசியப்படுத்தி, மாயவசிய வாழ்வு வாழ்ந்த மாயவசிய இளவரசனின் கதையைப் போல் அமைதல் திண்ணம். 1938ம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையிலிருந்து இலண்டன் வந்தடைந்து மூன்றே மூன்று நாட்களில் பிற்சுரோவியாவை தம்பிமுத்து தேடிப்பிடித்தார்; அதன் மகிமையை அவர் கண்டறிந்தார்.      
ஓராண்டு கழிவதற்குள் (Brick Street, Piccadilly, Women's Printing Society-ல் அச்செழுத்துக்கள்  உதிர்ந்து ஒரு மாத தாமதம் ஏற்பட்ட பின்னர்) Poetry London வாயிலாக வெளிவந்த முதலாவது கவிதைத் தொகுதி Dylan Thomas, T. S. Eliot இருவரதும் பாராட்டைப் பெற்றது. தம்பிமுத்துவின் மந்திரக் கவிதைகள் Crystal Palace தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வெளியே பாய்ந்தவேளையில் இலண்டன் மாநகரை அவரது மந்திரக்கோல் ஏறத்தாழ ஒரு தசாப்தகாலம் கட்டிப்போட்டது. 1949 புரட்டாதி மாத நாள் ஒன்றில் அவர் ஒரு புரளி புரியும்வரை அந்த மந்திரக்கோல் அவருக்கு வருவாய் தேடிக்கொடுத்தது. அதன் பிறகு அவருக்கு அது கைகொடுக்கவில்லை. அந்த மந்திரக்கட்டு அவிழ்ந்துவிட்டது. இழந்த கவியரசை மீட்க இயன்றவரை அவர் முயன்று பார்த்தார். எவ்வாறு 1619ல் போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த யாழ்ப்பாண அரசை அதன் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலியனின் (1616-1620) வழித்தோன்றல் எவராலும் என்றுமே மீட்க முடியவில்லையோ, அவ்வாறே அவனது வழித்தோன்றல் எனத்தக்க தம்பிமுத்துவினால் தனது கவியரசை என்றுமே மீட்க முடியவில்லை.
தலைமறைவாகும் புத்தி தம்பிமுத்துவுக்கு வாய்த்திருந்தால், எடுத்துக்காட்டாக 1949 புரட்டாதி மாதம் Poetry London (26, Manchester Square) அலுவலகத்திலிருந்து வெளியே பாய்ந்தோடிய பிறகு இமயமலைத் தொடரினுள் புகுந்து மறைந்திருந்தால், தனது எஞ்சிய வாழ்வில் அவர் எதை நாடினாரோ, எதை எய்தத் தவறினாரோ அதை அவர் எய்தியிருக்கலாம். அதாவது Lord Byron, Dylan Thomas ஆகிய இரு கவிஞர்களும் பின்னிப்பிணைந்த ஒரு பெருமை தனக்கு நிலைக்குமாறு செய்திருக்கலாம். அல்லது பணவசதி நாடி இலங்கைக்கோ இந்தியாவுக்கோ போயிருந்த காலத்தில், அங்கேயே தங்கியிருந்தால், இந்திய உபகண்டத்தில் இலக்கிய வினைக்கு எழுச்சியூட்டும் பணியை மும்பாயிலும், கொல்கத்தாவிலும் நடமாடிய சிறுதிறத்தாரிடம் விட்டுவிடாமல், அவரே அதற்கு எழுச்சி ஊட்டியிருத்தல் திண்ணம். அத்துடன் நாற்பதுகளின் தொடக்கத்தில் அவர் ஏற்றிப்போற்றிய அவரது புரவலராகிய T. S. Eliot-க்கு ஈடுகொடுத்து, ஒரு கவிஞர் என்ற தனது பெருமையை அவர் மேம்படுத்தியிருக்கலாம்.
தம்பிமுத்துவின் சிறப்பிதழில் காணப்படும் சான்றுகள் அனைத்தும் ஓர் உண்மையை உணர்த்துகின்றன: இலண்டனில் வாழ்ந்து பதினொரு ஆண்டுகளுள் அவர் ஒரு காவிய நாயகனாக மாறியிருந்தார். அவர் ஒரு கனவுலக வாசி, கவிஞர், ஓவியக் கலைஞர். அத்தகைய துறைகளைத் தேர்ந்தெடுத்தே தன்னை அவர் கட்டியெழுப்பியிருந்தார். அன்றைய ஆங்கில இலக்கிய அகல்மாநகரங்களாகிய இலண்டனும், நியூ யார்க்கும் தன்னை உச்சிமீது வைத்துக் கொண்டாடும் என்று அவர் கனவு கண்டு வந்தார். எனினும் தனது கனவு நனவாகாத அவலத்துள்ளேயே அவர் வீழ்ந்தார். Grover Amen என்ற கவிஞரைப் போல் வேறெவரும் தம்பிமுத்துவின் வீழ்ச்சியை நன்கு எடுத்துரைக்கவில்லை:
"இது பைத்தியக்காரத்தனம். நீ ஒரு Thoreau அல்ல. நீ ஒரு குடிகாரன், கிறுக்கன், மோசடிக்காரன். குடிப்பதற்கு உன்னிடம் போதியளவு குடிவகை இல்லை என்றால், உன் மேனி முழுவதும் நடுநடுங்கி, உனக்குச் சன்னி பிடித்துவிடுகிறது. உன் குடிவகை தீர்ந்தவுடன், பறவைகள் உன் தோள்மீது அமர்வது பற்றி நீ பிதற்றுவதை நான் கேட்டிருக்கிறேன். நீ ஒரு படுமோசமான நோயாளி. உன்னால் உலகில் சரிவர நடமாட முடியாது. நீ ஒரு நரகப்பிறவி. விசித்திரப்பிறவி. அதிலிருந்து மீண்டு வா. நம்பிக்கை, விசுவாசம் கொண்டு வாழ்வதாக விழலளந்துவிட்டு எங்கே நீ தப்பியோடப் பார்க்கிறாய்? ஒரு மிடறு குடித்தவுடன் உன்னால் நேராகச் சிறுநீர் கழிக்கவே முடியாதே!"
தம்பிமுத்துவின் சிறப்பிதழில், Mulk Raj Anand, Bob Kingdom, அல்லது Helen Irwin எழுதிய சில கூறுகளைத் தவிர, அவரை அறவே சாடும் கூறில் காணப்படும் மிகவும் கடுப்புவாய்ந்த மேற்கோள் மேற்படி பந்தியில் பொதிந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவரை அறவே புரிந்துகொள்ள வேண்டுமாயின், அதை மேற்கோள் காட்டியே ஆகவேண்டும். ஏதோ ஒருவகையில் விடைகாணமுடியாத புதிராக, புரிந்துணரமுடியாத மாற்றுப் பேர்வழியாக, (அதைவிட முக்கியமாக) காலனியாதிக்க அகல்மாநகரத்துவ யூத-கிறீஸ்தவ பண்பாட்டுடன் நாம் பூண்ட சரடும், சகதியும் மிகுந்த உறவின் ஈர்ப்புமையமாக அவர் விளங்கியபடியால், தமிழராகிய எமக்கு மேற்படி மேற்கோள் சற்று முக்கியமான சங்கதி ஆகிறது. மரியாதை ஈயும் அறிவார்ந்த மொழியாக ஆங்கிலம் விளங்கிய அதேவேளை, காலனியாதிக்க ஆட்சி ஒழிகையில், இலக்கிய வளத்துக்கு அத்தகைய உறவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதா அல்லது இலக்கிய சுதந்திரத்தை ஈட்டிக்கொள்வதா என்ற வினாவையும் மற்றும் பிறவற்றையும் கருத்தில் கொண்டே அவ்வாறு கூறுகிறேன்.
ஓர் அகல்மாநகரத்துவ பரிவேடம் (அந்த வகையில் அதிகாரபூர்வமான நல்லாசி) தம்மை வந்தடையும் என்னும் நம்பிக்கையுடன் நமது ஆசிய கண்டத்தவர்கள் ஏதோ ஒரு பொதுநலவாய இலக்கிய மாநாட்டைப் பேராவலுடன் சூழ்ந்துகொள்வதை நீங்கள் எண்ணிப் பார்த்தால், அன்று கட்டியாளப்பட்டோர் எழுப்பும் மேற்படி கேள்விகள் எவற்றுக்கும் விடைகாணப்படாத புதிர் தெரியவரும்; அது முதன்மையான சங்கதியாக நினைத்துக்கூடப் பார்க்கப்படாத புதிர் தெரியவரும். தம்பிமுத்துவின் சிறப்பிதழில் Mulk Raj Anand-ன் ஊடுருவும் கருத்துரைகள் காணப்படுகின்றன. Mulk Raj Anand-ஐ Jane Williams செவ்வி கண்டபொழுது உதிர்க்கப்பட்ட கருத்துரைகள் அவை. எனினும் எல்லா வகையான ஆசிய கண்டத்தவர்களையும் ஒட்டுமொத்தமாகவும் அதிரடியாகவும் பகுத்தாராய்ந்த இடத்தில் தனது கருத்தை அவர் வலியுறுத்தத் தவறிவிட்டார்:
Jane Williams: ஆங்கில ஆதிக்கம் ஓங்கிய இலங்கைப் பண்பாட்டில் வளர்க்கப்பட்ட தம்பி இலண்டனை வந்தடைந்தபொழுது, அவரது வளர்ப்பின் விளைவுகள் அவரை எதிர்கொண்டன.
Mulk Raj Anand: ஆனாலும் அன்றைய சுதந்திரப் போராட்டம் போன்றவற்றில் அவரோ அவர் நண்பர் சுப்பிரமணியமோ பங்குபற்றவில்லை. இக்கவிஞர்கள் மண்ணிற வெள்ளையராக மாறுவதிலேயே பெரிதும் சிரத்தை எடுத்தார்கள். தம்பி ஏற்கெனவே ஒரு மண்ணிற வெள்ளையரே. தம்பிக்கு வேண்டியவர்கள் மிகவும் செல்வந்தர்களாக விளங்கியபடியால், ஆங்கிலப் பேரரசில் நிலவிய அடிமைமுறையை அவர் அறிந்திருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்களிடம் கூட அடிமைகளை வைத்திருக்கும் வழக்கம் இருந்தது. இன்னோர் இலங்கையராகிய குமாரசுவாமியைப் போல் அவர்களும் ஆணாதிக்க சமூகம் என்னும் சங்கடத்தை எதிர்நோக்கினார்கள். ஆதலால் 'கடவுளே  தலைவிதியை நிர்ணயிப்பவர்' என்னும் வாய்பாட்டு நியதிக்கேற்ப கீழைத்தேய சிந்தனையை அவர்கள் சிக்கெனப் பற்றிக் கொண்டார்கள்.     
குறிப்பாக Bob Kingdom, Helen Irwin, Fred Lewis, Susanne English, Grover Amen ஆகியோரின் ஒருசில குறிப்புகளே தம்பிமுத்து என்னும் மனிதரை எமக்கு மிகவும் ஊடறுத்துக் காட்டுகின்றன. கழிப்பறைத் தாட்சுருளோ, மேலங்கியோ கூட வாங்கப் பணமோ, நேரமோ கிடையாது. ஆனாலும் இறுதிவரை கணினியைக் கையாள்வது உட்படப் பல்வேறு அலுவல்களில் அவர் மூழ்கியிருந்தார். கையில் பணம் கிடைத்தால், அது அவருடைய ஓர் ஆக்கத்துக்கான அன்பளிப்பாக இருந்தாலும் கூட, அதைக் கொண்டு எவர்க்கும் ஓர் உண்டியோ ஒரு மிடறு குடிவகையோ வாங்கிக் கொடுக்க என்றுமே அவர் சித்தமாய் இருந்தார். அவருக்கு ஒருவரைப் பிடித்துக்கொண்டால், பணம் கிடைக்கும் அறிகுறியோ, அடுத்தவேளை உணவு கிடைக்கும் வாய்ப்போ தென்படாவிடினும், என்றுமே அவரது கவிதைகளை வெளியிட அவர் சித்தமாய் இருந்தார். கவிதைக்காகவும், கவிஞர்களுக்காகவும் இரப்பதற்கு அவர் என்றுமே தயாராக இருந்தார். ஆம், ஓர் இளவரசனைப் போல! எனினும் கவிதைக்கு அரண்மனைப் பட்டாடை அணிவித்து நழுவும் எண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, மற்றவர்களின் பணத்தைக் கரிசனையோடு கையாளத் தவறினார். Editions Poetry London-ல் தம்பிமுத்துவின் தயாரிப்பு முகாமையாளராக விளங்கிய Gavin Ewart என்பவர் The London Magazine-க்கு எழுதிய மடலின்படி, அவர் திறனோ பொறுப்புணர்வோ அற்றவர், வெறியாட்டம் என்றால் என்றென்றும் பெண்களை நாடுபவர், மற்றவர்களின் மூலப்படிகளை இம்மியும் கரிசனையின்றிக் கையாள்பவர் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நாற்பதுகளில் அவர் கொடிகட்டிப் பறந்த வேளையில் கூட, ஒரு தறிகெட்ட பிள்ளையின் சாயல் புலப்படுகிறது. அரும்பணி ஆற்றுவதற்கு ஏற்றுக்கொண்ட பொறுப்புடன் வழிதடுமாறும் பிள்ளையின் சாயல் புலப்படுகிறது.
"என் உள்ளத்துள்அமைதி எய்த நான் போராடி வருகிறேன். அப்புறம் என்னால் நல்லதொன்றைப் படைக்க முடியும். நான் ஒரு மகத்தான கவிஞராக விளங்குவேன் என்கிறார் T.S. Eliot. அப்படி அவர் கூறியபொழுது நான் அழுதிருக்கவும் கூடும். அவர் மிகுந்த  கனிவு கொண்டவர். எனக்கு ஒரு பிதாவைப் போன்றவர். சிலவேளைகளில் நான் அஞ்சி நடுங்கி வருந்துகிறேன். நான் வாழும் விதம் நீங்கள் அறியாதது. அத்துணை தனிமை. வீடுவளவு ஏதுமில்லை. சொந்தம் என்று யாருமில்லை. ஆனாலும் இதை எல்லாம் நான் பட்டுத்தீர்க்க வேண்டியுள்ளது. வாழ்வைப் புரிந்துகொள்வதற்காக நான் வாழ்வைப் பட்டுத்தீர்க்க வேண்டியுள்ளது. என்றோ ஒருநாள் உலக மக்கள் யாவரும் என் கவிதைகளை மீட்டக் கூடும். என்றோ ஒருநாள் நான் ஒரு புனிதராக மாறக் கூடும்" என்றார் தம்பிமுத்து.
சாதாரண இலங்கையரை அல்லது இந்தியரை அல்லது தம்பிமுத்துவின் உறவினரைக் காட்டிலும், இந்த நூற்றாண்டைச் சேர்ந்த சில அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களும், ஓவியர்களும், சிற்பிகளும் தம்பிமுத்துவை நன்கு அறிந்திருந்தார்கள். தனது முதிர்வாழ்வு முழுவதையும் அவர் பெரிதும் இலண்டன், நியூ யார்க் போன்ற அகல்மாநகரங்களில் கழித்தவர் என்ற வகையில் அது வியக்கத்தக்கதல்ல. எனினும் அவருடைய ஆளுமையை நாங்கள் அறிந்துகொள்ளத் தலைப்பட முன்னர், குறிப்பாக மேற்படி அகல்மாநகரங்களில் கவிதையின் புரவலர் என்ற வகையில் அவர் வகித்த பங்கினை நன்கு புரிந்துகொள்வதற்கு வேண்டிய முயற்சியில் நாம் ஈடுபட வேண்டியுள்ளது. அதற்காக ஆகக்குறைந்தது அவரது வாழ்க்கைப் பயணத்தையாவது நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒரே மாநகரத்தில் அல்லது ஒரே நாட்டில் பெரிதும் நிரந்தர முகவரியோ ஒழுங்கான வேலையோ அற்றவராக வசித்த வேளையிலும் கூட, அவர் பெரிதும் பறந்து திரிந்து நடமாடினார். அவரது எண்ணங்களை, திறனாய்வுத் தீர்ப்பினை, சிந்தனையை அது மேலும் துலங்கவைக்கக் கூடும் என்பதற்காக நான் அப்படிக் கூறவில்லை. மாறாக, அவரைப் பின்னின்று உந்தி ஊக்குவித்த காரணிகளை அது ஈற்றில் எமக்குப் புலப்படுத்தக் கூடும் என்பதால் அப்படிக் கூறுகிறேன். தற்செயலாகச் சந்தித்தவர்கள் உட்பட  அனைவரையும் ஊக்குவித்து ஆட்கொள்ளும் வேட்கை படைத்தவர் என்றே அநேகமாக அவரை அறிந்த அனைவரும் கருதினார்கள். எனினும் ஒருசிலரைக் கண்ட மாத்திரத்தே அவர் கூனிக்குறுகியது உண்மையே. ஏன்? அவரும் பித்தங்கள், சாட்டுக்கள் நிறைந்தவர் அன்றோ!  
குறிப்பாக, தம்பிமுத்துவின் சிறப்பிதழிலும், அவரது பாட்டனாரின் வாழ்க்கை வரலாற்றிலும், மற்றும் பிற வெளியீடுகளிலும், மடல்களிலும் விரவிக் கிடக்கும் விவரங்களைப் பொறுக்கியெடுத்து, அவருடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இனி நாம் தொகுத்துரைப்போம். அதற்கு முன்னர் ஒரு சங்கதியை, அதாவது அவர் அரச பரம்பரையில் உதித்தவர் என்பதை என்றுமிலாவாறு இப்பொழுது நாம் விளக்கியுரைக்க வேண்டியுள்ளது. செல்வந்தர்களும், புகழ்பூத்தவர்களும் நிறைந்த கலைத்துவச் சிட்டர் குழாத்துடன் கூடிக்குலவிய தம்பிமுத்து தனது அரச பரம்பரையை அவர்களிடையே தூக்கிப்பிடித்து பெரும் அனுகூலம் அடைந்ததுண்டு. தொலைவில் நிலைகொண்ட அழகாபுரி போல் ஒளிகாலும் வினோத அரசிலிருந்து வருகைதந்த இளவரசனாக மேற்படி சிட்டர் குழாம் அவரை வரவேற்றமை மிகவும் வெளிப்படையாகவே புலப்படுகிறது. கேட்டுக் கேள்வியின்றி அவரை ஏற்றிப்போற்றி, "பிற்சுரோவியாவின் இளவரசனாக" அவரை மனமுவந்து அரியணையில் அமர்த்தியோரை அது படம்பிடித்துக் காட்டுகிறது.
நாம் திரட்டக்கூடிய விவரங்களின்படி, இலண்டன் முழுவதும் காணப்படும் "தொன்மைவாய்ந்த" மதுவிடுதிகள், இரவுவிடுதிகள், அடுக்குமாடியகங்கள், கலைக்கூடங்கள், இலக்கிய-வெளியீட்டு அலுவலகங்கள் உள்ளடங்கிய வலையத்துக்கு தம்பிமுத்து இட்ட பெயர் Fitzrovia! அங்கே கசக்கும் பியரைத் தவிர வேறெதையும் பருகாத "குடிமக்கள்" மரபுவழி ஒழுகாது கலைத்துவ வாழ்வு வாழ்ந்தனர். அதற்கு முதன்முதல் எடுத்துக்காட்டாக விளங்கியவர்: Charles Haddon Redvers Gray. அவர் அவ்வப்பொழுது எழுதிய கவிதைகளை, "பள்ளிப்பையனின் எழுத்தில் பெரிதும் எழுத்தறிவற்ற ஒருவர் கிறுக்கித்தள்ளிய அப்பட்டமான காதல் கவிதைகள்" என்கிறார் தம்பிமுத்து.     
"மரபுவழி ஒழுகாது கலைத்துவ வாழ்வு வாழ்ந்த அந்த முதலாவது ஆங்கிலக் கலைஞர், நான் சந்தித்த கலைஞர், பிற்சுரோவியாவுக்கு நான் அறிமுகப்படுத்திய கலைஞர் ஒரு தகைமைவாய்ந்த சட்டவாளரும் கூட, இந்த மாநகரத்தில் தனது தந்தையின் சட்டவியல் ஆதனத்தை ஈட்டிக்கொண்டவரும் கூட என்பதை அறிந்து நான் மிகவும் வியப்படைந்தேன்" என்று எழுதுகிறார் தம்பிமுத்து.  
Fitzrovia-வின் தோற்றுவாய் எது என்பது குறித்து, தொன்மைவாய்ந்த மேற்படி அரசு திடீரென வரித்துக்கொண்ட பழம்பெரும் இலக்கிய விளம்பரத் தலைப்பின் தோற்றுவாய் எது என்பது குறித்து எவரும் அலட்டிக்கொள்ளக் கூடும். முப்பதுகளின் தொடக்கத்தில் Queens Square, Fitzroy Place, Howland Street, Rathbone Place - Wheatsheaf Tavern என்பவற்றுள் எது அதன் தோற்றுவாய்? அது எதுவாயினும், தனது வாழ்க்கைப் பாணியை அவர் நினைவுகூர்ந்து கொண்டாட விரும்பினார் என்று கொள்வதற்கே அதிக வாய்ப்புண்டு. தான் "கடைசி" யாழ்ப்பாண மன்னன் 6ம் பரராசசேகரனின் (1478-1519) பரம்பரையில் உதித்தவர் என்று அவர் இடித்துரைத்ததுண்டு. அதுவே ஒரு தவறு. தம்பியின் சகோதரர் போலினஸ் (Paulinus) அவர்களின் வமிசாவளி, அவரது பாட்டனார் எஸ். தம்பிமுத்துப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன்: Don Constantine (1515-1619). உடன்பிறந்த உணர்வுடன் சுட்டிக்காட்டப்படும் முக்கியமான தவறு அது, மோசமான தவறு அது. 
அதை, தம்பிமுத்து புலமைத்திறனின்றி இழைத்த தவறு என்று கொள்வதை விட, அவர் நம்பிப் புரிந்த செயல் என்று, தன்னைத் தானே தூய்மைப்படுத்தப் புரிந்த செயல் என்று, இன்னும் செவ்வையாகக் கூறுவதாயின், யாழ்ப்பாணத்தைக் கட்டியாண்ட போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக,  யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனாகிய சங்கிலியனை அறவே மானங்கெடுத்திய போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, அவனை வலிந்து கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றிய போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, அவர் கிளர்ந்தெழுந்து புரிந்த செயல் என்று கொள்வதே சாலவும் பொருந்தும். அவர் ஓர் அரசியல் வினைஞராகவோ, சுதந்திரப் போராளியாகவோ விளங்காதவராகலாம். எனினும் அவர் வாழ்வை நாம் தொடர்ந்து பகுத்தாய்விடுந் தோறும், அவரை ஒரு விடாப்பிடியான கிளர்ச்சியாளராகவே நாம் காண்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, தனது சுதந்திரத்தை நாடிய கிளர்ச்சியாளராகவே அவரை நாம் காண்கிறோம். "பொது அச்சில் சுழலும் இலக்கியம்" என்னும் தனது கவித்துவக் குறிக்கோளுக்காக மாத்திரம் அவர் தனது சுதந்திரத்தை நாடவில்லை. எந்தத் துறையில் அவர் ஈடுபட்டாலும், இன்னதுதான் செய்யப்பட வேண்டும் என்று தன்னிடம் பணிக்கப்படுவதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவரது சுதந்திர நாட்டத்துக்கு அது  சான்று பகர்கிறது. (ஒழுங்கான சம்பள வேலையை அவர் ஏற்றுக்கொள்ளாததற்கும், ஏற்றுக்கொள்ள விரும்பாததற்கும் அதுவே காரணமாகலாம். Poetry London இதழுக்குப் பொருளுதவி புரிந்த Richard March என்பவரின் தலையீடும், கண்காணிப்பும் ஓங்கியதைத் தொடர்ந்து, அதாவது 1949ல் தம்பிமுத்து அதிலிருந்து வெளியேறியதற்கும் அதுவே காரணமாகலாம்).
தனது தாய்நாடு சுதந்திர நாடாக மாறிய வேளையில் அவர் தன் உள்ளத்தளவில் புரிந்த கிளர்ச்சியும் அதுவே. தன்னை 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துக்கேயருக்கும், தற்காலத்தில் அவர்களின் நிலைப்பாட்டுக்கும் இரையான ஒருவராக இயல்பாகவே அவர் இனங்கண்டிருக்க வேண்டும். தனது மூதாதையர் அறவே மானங்கெடுத்தப்பட்டதை, தனது வமிசாவளியில் ஏற்பட்ட கத்தோலிக்க கறையை ஏற்றுக்கொள்ள அந்த "அரசிளங்குமர" இயல்பினர் விரும்பவில்லை. (Meary James என்னும் பெயருடன் அவர் தீக்கை பெற்றவர்). The London Magazine-ல் Anthony Dickins வலியுறுத்தியபடி பார்த்தால், அவரது குடும்பத்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் அவர் "Jim." ஆதலால் தம்பியின் ஈமச்சடங்கை நிகழ்த்திய குருவானவர் அவரை "Mary James" என்று குறிப்பிட்டதைக் கேட்டு அதில் கலந்துகொண்டவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் வியப்படைந்தார்கள். தம்பி ஒப்பமிட்டு எழுதிய கட்டுரைகளை நான் மீள்நோக்கியபொழுது, தனது கிறீஸ்தவப் பெயர்களை அவர் என்றுமே பயன்படுத்தியதில்லை என்பது தெரியவந்தது. பிறகு திடீரென தனது தமிழ் மூதாதையரின் பிதாவழிப் பெயர் கொண்டு "துரைராசா"வாக அவர் வெளிவந்தார். எனினும் பொதுவாக அனைவருக்கும் அவர் "தம்பி"யே. தமிழில் "தம்பி" என்பது இளைய சகோதரனைக் குறிக்கும்.
மியரி ஜேம்ஸ் துரைராசா தம்பிமுத்து 1915 ஆகஸ்ட் 15ம் திகதி பிறந்தார். தந்தை: Henry T.Tambimuttu; தாய்: Mary Ponnammah. ஆறு சகோதரர்கள், ஒரு சகோதரி. அவர் இரண்டாவது மகன். 16வது வயதில் அவர் தாயை இழந்தார். தம்பியின் சிறப்பிதழில் உள்ள விவரணங்களை நாம் நம்புவதாயின், அவர் எத்தகைய ஆளாக விளங்கினாரோ அத்தகைய ஆளாக விளங்குவதில் அவரது தாயின் இறப்பு ஒரு முக்கிய காரணியாக இருந்தமை தெளிவு. தான் சந்தித்து, பண்படுத்திய பெண்கள் பலரையும் அவர் என்றென்றும் தனது தாயாக உருவகித்து வைத்திருந்தார். பதிலுக்கு, மதுவிடுதிகளில் அவரைக் காப்பாற்றும் அளவுக்கு, Poetry London அலுவலகத்தில் அவ்வப்பொழுது காலைவேளைகளில் அவரைக் குளிப்பாட்டும் அளவுக்கு அவர்களும் அவருக்கு மனமுவந்து தாயாகினர். Helen Irwin என்றுமே தம்பியின் காதலியாக விளங்கியதில்லை. எனினும் ஒரே மேற்சட்டையைத் தம்பி தொடர்ந்து அணிவதால் எழும் "மணம்" Helen-க்கு பிடிபட்ட ஒவ்வொரு தடவையும் (26, Manchester Square-ல் அமைந்துள்ள) பசுமைக் குளியலறையில் வைத்து தம்பிக்கு அவர் முதுகு தேய்த்து விடுதுண்டு.  
தம்பியைத் தத்தெடுத்த Shaw-Lawrences குடும்பத்தை எண்ணும்பொழுது உடனடியாகவே Jean-Jacques Rousseau நினைவுக்கு வருகிறார். ஜெனீவாவில் வைத்து Rousseau-ஐ பெற்றெடுத்த கையோடு தாய் இறந்து விடுகிறார். தனது 16வது வயதில் ஜெனீவாவை விட்டுப் புறப்பட்டு, இடத்துக்கிடம் சென்று, Charmettes என்ற பிரெஞ்சு நகரில் Warens அம்மையாரின் விருந்தோம்பலில் அவர் திளைத்து வந்தார். அவர் என்றென்றும் நாடிய உள்ளத்து அமைதியை அம்மையாரின் விருந்தோம்பலில் மாத்திரமே அவர் எய்திக்கொண்டார். எஸ். தம்பிமுத்துப் பிள்ளையின் மகன் ஹென்றி தம்பிமுத்து ஒரு பேரறிஞர் என்றும், கல்வீட்டுப் பாட்டனார் (Grand-father of the Stone House) என்றும்  போற்றப்பட்டவர். தனது தாய்வழிப் பாட்டனாரைப் போலவே அவரும் யாழ்ப்பாண அரச வம்சத்தில் உதித்தவர். அது உண்மையோ இல்லையோ என்பது வேறு சர்ச்சை. தம்பி அதை நம்பினார் என்பதே இங்கு முக்கிய விடயம். அவரது நடத்தையும், வாழ்க்கைப் பாணியும் உருவாகிய விதத்தில் அந்த நம்பிக்கை தீர்க்கமான பங்கு வகித்திருக்கலாம்.
அதற்கு நிகராக வேறு குடும்பங்கள் பலவும் யாழ்ப்பாண அரச வம்சத்துக்கு உரிமை கோரியிருக்கக் கூடும். 13ம் நூற்றாண்டில் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தியால் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண அரசு பெருநிலப்பரப்பு கொண்டதல்ல. 1618 ஆகஸ்ட்–செப்டெம்பர் மாதங்களில் தமிழ்க் கிறீஸ்தவக் குழுமம் ஒன்று 2ம் சங்கிலி மன்னனுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியை அடுத்து போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டது. இது எதுவும் தம்பியின் உள்ளத்தை உறுத்தியதாகத் தெரியவில்லை. தம்பியின் தந்தை கொழும்பு சென்று அரசாங்க அச்சகத்தில் வேலைசெய்து பிழைக்க வேண்டியிருந்தது. தம்பியின் சகோதரன் வெறுமனே ஒரு பல்கலைக்கழகத்தின் உட்புறங்களைப் பார்ப்பதற்காக, பேச்சுப்போட்டி ஒன்றில் வென்ற தங்கப்பதக்கத்தை விற்க வேண்டியிருந்தது.
யாழ்ப்பாண வைபவ மாலை, யாழ்ப்பாண வைபவ கெளமுதி என்பவற்றை வைத்து எழுதப்பட்ட தம்பியின் பாட்டனாரது வாழ்க்கை வரலாற்றின்படி, 6ம் பரராசசேகர மன்னனின் இரு புதல்வர்கள் ஈற்றில் வெவ்வேறு காரணங்களுக்காக கத்தோலிக்கராக மாறினர். மன்னனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மையின் புதல்வனாகிய இளவரசரன் பரநிருபசிங்கமே பட்டத்து இளவரசர். இப்படி ஒரு கதை உண்டு: மன்னனின் வைப்பாட்டிகளுள் ஒருவராகிய மங்கத்தாமாளுக்குப் பிறந்த "இளவரசன்" சங்கிலி தனது தந்தையுடன் தென்னிந்தியாவில் உள்ள கும்பகோணத்துக்கு யாத்திரை சென்றான். அங்கு துர்நடத்தையில் ஈடுபட்டதற்காக அவன் சிறைவைக்கப்பட்டான். மகனை மீட்கத் தலைப்பட்ட தந்தையும் அதே கதிக்கு உள்ளானான். சோழ மன்னனின் மூர்க்கத்தனத்தை அறிந்தவுடன் இளவரசரன் பரநிருபசிங்கம் சோழ மன்னனுக்கு எதிராகப் போர் தொடுத்து, அவனைத் தோற்கடித்து, தந்தையையும் தனது சகோதர முறையானவனையும் மீட்டு வந்தான். தந்தை நன்றியுணர்வுடன் தனது சொத்தினை அந்த வீரமகனுக்கு எழுதி வைத்தான்...
வேறு வரலாற்றறிஞர்கள் கூறுவது: வீரத்துடன் எதிர்த்து நின்ற கண்டி அரசு தவிர்ந்த ஏனைய தென்னிலங்கை அரசுகளை (கோட்டை, சீதவாக்கை, உடரட்டை அரசுகளை) அடிப்படுத்துவதிலும், அவற்றின் மன்னர்களை மதமாற்றுவதிலும் ஈடுபட்டிருந்த போர்த்துக்கேயர், தமக்கு ஓரளவு வெற்றி கிட்டிய மன்னாருக்கு சமயப் பரப்புரைஞர்களை அனுப்பினார்கள். தமிழ் மன்னர்கள் பதிலடி கொடுத்தார்கள். அதனால் தமிழ்த் தேசத்தை ஒறுப்பதற்கு போர்த்துக்கேயர் இரண்டு தடவைகள் (1560ம், 1591ம் ஆண்டுகளில்) எத்தனிக்க நேர்ந்தது. இரண்டு தடவைகளும் அவர்கள் தோற்க நேர்ந்தது. ஈற்றில் 1619ம் ஆண்டு போர்த்துக்கேய-சார்பு கிறீஸ்தவ தமிழரின் துணையுடன் யாழ்ப்பாண அரசை (யாழ் குடாநாட்டையும் வன்னியையும்) போர்த்துக்கேயர் தமது ஆட்சிக்கு உட்படுத்தினார்கள்.    
"1619 முதல் 1621 வரையான யாழ்ப்பாண அரசில் போர்த்துக்கேய-சார்பு கிறீஸ்தவ சிறுபான்மையோர் நடமாடினார்கள். அங்கு போர்த்துக்கேயர் ஈட்டிய வெற்றியுடன் தொடர்புடைய முக்கிய காரணிகளுள் அது ஒன்று. யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பொழுதும், அதன் பிறகும் மேற்படி சிறுபான்மையோர் அங்கு ஒரு பலமான தரப்பினராக விளங்கினார்கள். தீர்க்கமான தருணங்களில் போர்த்துக்கேயருக்கு சாதகமான சூழ்நிலையை அது தோற்றுவித்திருக்கலாம்" என்கிறார் கே. எம். டி சில்வா.   
மக்களால் வெறுக்கப்பட்ட போர்த்துக்கேயரை, தீவினைக்கு அஞ்சாத போர்த்துக்கேயரை எதிர்த்து நிற்கத் துணிந்த இந்து மன்னர்களின் தன்மான உணர்வை முத்துத்தம்பி ஈட்டியிருக்கக் கூடும்.
இனி தம்பிமுத்துப் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து நோக்குவோம்.  இளவரசன் பரநிருபசிங்கம் தயவு மிகுந்தவன், உள்ளம் பண்பட்டவன் மட்டுமல்ல ஆயுள்வேத வைத்திய நிபுணனும் கூட. கண்டிச் சிங்கள மன்னன் ஜயவீரனின் (1511-52) தேவிக்கு கடுங்குடல்வலி ஏற்பட்டது. பாரம்பரிய சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்ல. ஆதலால் பரநிருபசிங்கத்தின் உதவியை நாடினான் கண்டி மன்னன். பரநிருபசிங்கமும் தயைகூர்ந்து, தாமதிக்காது புறப்பட்டான். புறப்பட்ட கையோடு "சங்கிலி" அரியணையை அபகரித்துக் கொண்டான். அந்தக் காலத்தில் இளவரசர்களுக்கு வேறு சிறந்த விளையாட்டுகள் இல்லாதபடியால் அவர்கள் புரியும் அலுவல்களுள் அது ஒன்று. கண்டியிலிருந்து திரும்பிய பரநிருபசிங்கம் இந்தியா சென்று கத்தோலிக்கராக மாறினான். அதற்கான காரணம் மேற்படி வாழ்க்கை வரலாற்றில் தெளிவுபடுத்தப்படவில்லை. இங்கு கதை குழம்புகிறது. தனது காணிகள், குறிப்பாக ஒன்பது குறிச்சிகள் தனது மகன் இளவரசன் பரராசசிங்கத்துக்குச் சேருமாறு இறப்பாவணமிட்டான் பரநிருபசிங்கம். பதிலுக்கு பரராசசிங்கம் அவற்றை தனது ஏழு புதல்வர்களுக்கும், புதல்விக்கும் பின்வருமாறு பகிர்ந்தளித்தான்:  

1.   நல்லூர், கள்ளியங்காடு = அல்லக்கண்மை வல்ல முதலி; ஆதலால் அவர் நல்லூர் மாளிகையில் வசித்தார்
2.   மல்லாகம் = தனபாலசிங்க முதலி
3.   சண்டிலிப்பாய் = வெற்றிவேலாயுத முதலி
4.   அராலி = விசய தெய்வேந்திர முதலி
5.   அச்சுவேலி = திடவீரசிங்க முதலி
6.   உடுப்பிட்டி = சந்திரசேகர மாப்பாண முதலி
7.   கச்சாய் = இறையரத்தின முதலி
8.   மாதகல் = மகள், இளவரசி வேதவல்லி

இங்குதான் தம்பிமுத்து ஆட்கள் சம்பந்தப்படுகிறார்கள். அவர்களது மூதாதையர்களுள் ஒருவராகிய (17ம் நூற்றாண்டில் ஒரு முக்கிய பண்பாட்டு மையமாய் விளங்கிய மானிப்பாயைச் சேர்ந்த) வாரித்தம்பி ஆராய்ச்சியாரின் இரண்டாவது மகள் குலசேகர முதலியாரை மணந்தார். அப்புறம் அச்சுவேலிக் கிராமத்தை அவர் இறப்புச்சொத்துப்பேறாக ஈட்டிக்கொண்டார் (உள்நாட்டு, வெளிநாட்டுப் பகையை வென்று தனது ஆட்சியை நிலைநிறுத்திய பரராசசேகர மன்னனின் [1478-1519] கொள்ளுப்பேரனே  குலசேகர முதலியார்). எஸ். முத்துதம்பிப் பிள்ளை  அச்சுவேலியைச் சேர்ந்த Anne Gardiner-ஐ மணந்தார். படுமோசமாகவும், குளறுபடியாகவும் வரையப்பட்ட வாழ்க்கை வரலாற்றிலிருந்து தம்பிமுத்துவின் அரசவம்சத் தொடர்பு என்ற வகையில் என்னால் புரிந்துகொள்ளக்கூடிய சங்கதி அதுவே.
எனினும் மேற்படி வாழ்க்கை வரலாற்றில் (திடவீரசிங்க முதலியின் மகனே குலசேகர முதலியார் என்றாலொழிய) Paulinus Tambimuttu-வின் வமிசாவளியோ, மற்றும் பிற அரைகுறை வரலாறுகளோ திடவீரசிங்க முதலியையும் குலசேகர முதலியாரையும் தொடர்புபடுத்தவில்லை. அதேவேளை தம்பிமுத்துவின் பாட்டியாரையும் இளவரசி வேதவல்லியின் மகளையும் அந்த வமிசாவளி தொடர்புபடுத்துகிறது. இவை அனைத்தும் மிகவும் சுவையான சங்கதிகள். அதேவேளை மேற்படி வாழ்க்கை வரலாற்றில் பொதிந்துள்ள கதையில் காணப்படும் பாரிய வழுக்களுள் இன்னொன்றை இனி நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது:
"1619ல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி, சங்கிலி குமாரனையும் அரசியையும் பணயக்கைதிகளாக கோவா கொண்டுசென்றனர். அவ்வாறே 7 வயது கொண்ட முடிக்குரிய இளவரசன், (யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் 8ம் பரராசசேகரத்தின் புதல்வன்), இளவரசிகள் இருவர், இளவரசனின் மைத்துனர் ஆகியோரும் கோவா கொண்டுசெல்லப்பட்டனர். சங்கிலி குமாரன் அங்கே கொல்லப்பட்டான். எஞ்சிய அரசகுலத்தவர்கள் மீது கன்னிமடங்களைப் பராமரித்து, பாதுகாக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டது. ஏனைய அரச குடும்ப இளவரசர்களும், இளவரசிகளும் முதலில் கொழும்புக்கு அனுப்பப்பட்டு, உரோமன் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் தமக்கு மானியமாக வழங்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாழ்ந்தார்கள். அவர்கள் வழிவந்தோர் மடைப்பள்ளி வெள்ளாளர் எனப்பட்டனர். அவர்களின் கிராமம் இராச மடைப்பள்ளி அல்லது குமார மடைப்பள்ளி எனப்பட்டது. மடைப்பள்ளி என்பது ஒரு வட இந்திய கலிங்கத்துக் கிராமம்" (Paulinus Tambimuttu, "Preface", S.John Rajah).
இவை எல்லாம் மிகவும் சிக்கலான சங்கதிகள். யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் யார்? டான் கொன்ஸ்டன்டைனா (Don Constantine), 8வது பரராசசேகரனா? அண்மையில் கே. எம். டி சில்வா எழுதிய இலங்கை வரலாறு வெளிவந்தது. மேற்படி வரலாற்றை எழுதுவதில் கலாநிதி எஸ். பத்மநாதன் கே. எம். டி சில்வாவுக்கு உதவியுள்ளார். அவரது வரலாற்று நூலின்படி ஒரே பெயருடன் கூடிய இரு மன்னர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டார்கள்: 1ம் சங்கிலி (1519-1561); 2ம் சங்கிலி (1616-1620). அப்பொழுது போர்த்துக்கேய தலைமைத் தளபதியாக விளங்கியவன்: Constantino de Sa de Noronha (1618-20). சங்கிலி குமாரனே 2ம் சங்கிலி. அவன் 1615ல் இறந்த கடைசி மன்னனாகிய எதிர்மன்னசிங்கத்தின் மருமகன்.
சங்கிலி குமாரன் சட்டப்பேறு வாய்ந்த ஒரு 3 வயது இளவலை விடுத்து ஏனைய அரசவமிச இளவரசர்கள் அனைவரையும் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். தென்னிலங்கையில் நிக்கப்பிட்டி பண்டாரா என்ற இன்னொரு மோசமான எதிரி போர்த்துக்கேயருக்கு தொல்லை கொடுத்தபடியால், யாழ்ப்பாணத்தில் சங்கிலியை அவர்கள் பதிலரையனாக ஏற்க நேர்ந்தது. அப்புறம் சங்கிலிக்கு எதிராகக் கிளர்ந்த கிறீஸ்தவத் தமிழரின் ஆதரவுடன் வேறொருவன் அவனை எதிர்கொண்டபொழுது போர்த்துக்கேயர் சங்கிலிக்கு உதவிபுரிய மறுத்தனர். இந்தியவிலுள்ள தஞ்சாவூர் நாயக்கரிடம் உதவி கோரினான் சங்கிலி. அவர்கள் வந்து கலகத்தை அடக்கினார்கள். பிறகு இலங்கைத் தீவிலிருந்தே போர்த்துக்கேயரை அகற்றும் நோக்குடன், ஒல்லாந்தர் பக்கம் சாய்வது உட்பட, அனைத்து முயற்சிகளிலும் சங்கிலி இறங்கினான். எனினும் உயர்குலம் உட்பட உள்ளூர்க் கிறீஸ்தவ தமிழ்க் குழுமங்களின் உதவியுடன் போர்த்துக்கேய தலைமைத் தளபதி கொன்ஸ்டன்டைன் டி சா 1619ல் யாழ்ப்பாணத்தை ஒருவாறு கைப்பற்றினான். பிறகு இரு தடவைகள் பாரிய தாக்குதல் தொடுத்து ஆங்காங்கே நின்றுபிடித்த எதிர்ப்படைகளை அழித்தொழித்து, சங்கிலி குமாரனை சிறைப்பிடித்து, யாழ்ப்பாண அரசுக்கு அவன் முடிவு கட்டினான்.       
மேற்படி சங்கதிகள் குறித்து தனது சகோதரன் Paulinus மேற்கொண்ட ஆராய்ச்சியை தம்பிமுத்துவே பெரிதும் நம்பியதுண்டு. அந்த வகையில் மேற்படி பகுப்பாய்வு தம்பிமுத்து பற்றிய எமது ஆராய்வுக்குப் பொருந்தும். வேல்சியரும் (Welsh), திராவிடரும் உடன்பிறப்புகள் என்று நியூ யார்ர்கில் வைத்து Fred Lewis-இடம் கூறியிருக்கிறார் தம்பி.
"கிறிஸ்துவுக்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர் பிரித்தானியாவின் மேற்குக் கரையோரமாகக் கடற்பயணம் செய்தனர். Dravidian, Druid இரண்டும் ஒன்றே. இதை எல்லாம் எனது சகோதரர் சிங்கம் 20 ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறார்" என்று கூறிய தம்பிமுத்து, முகத்தில் புன்னகை தவழ, "அதைப் பற்றி அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார்" என்றார்.
"அவர் எங்கே பேராசிரியராக இருக்கிறார்?"
"அவர் பேராசிரியர் இல்லை" என்றவர், சற்று கசப்புடன் "அவர் பகலில் பிரித்தானிய நிர்வாக சேவை புரிபவர், இரவில் எழுதுபவர்" என்று சொல்லி முடித்தார் (J. Williams).
தம்பியின் சின்னஞ்சிறு பராயத்தில் தந்தை ஹென்றி தம்பிமுத்து தனது குடும்பத்தை மலேசியா கொண்டுசென்றார். தம்பியின் சகோதரி Josephine, மற்றும் Francis, Paulinus, Augustine, Joseph, Crysanthus, தம்பி ஆகிய ஆறு சகோதரர்கள் உடன் சென்றிருக்கலாம். தந்தை கோலாலம்பூரில் Malaya Tribune இதழின் உதவிப் பதிப்பாளராகப் பணியாற்றினார். தம்பி அங்கே பாடசாலை சென்றாரா என்பது தெரியவில்லை. ஹென்றி இலங்கை திரும்பி திருகோணமலையில் (அல்லது அச்சுவேலியில்) ஓர் அச்சகத்தை அமைத்தார். தம்பி திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் கல்விகற்றது உறுதிபடத் தெரிகிறது. பின்னர் சகோதரர்கள் அனைவரும் Darley Road-ல் உள்ள பாடசாலையில் கல்விகற்றார்கள். தம்பிக்கு 7 வயது நடக்கும்பொழுது பேரவா கொண்ட கணித ஆசிரியர் ஒருவர் அவரைத் தண்டித்ததை அடுத்து, தந்தையை ஒருவாறு இணங்க வைத்து, அந்தப் பாடசாலையில் கற்பதை அவர் நிறுத்திக் கொண்டார்.     
"ஒரு பையனை அவர் தண்டிக்க விரும்பிய வேளைகளில் எல்லாம், கையை நீட்டச்சொல்லி ஓர் அடிமட்ட விளிம்பினால் உள்ளங்கையில் அவர் அடிப்பதுண்டு. நான் அடிக்கடி அவரால் தாக்குண்டேன்... அவர் என்னை மிகவும் ஆக்கினைப்பட வைத்தார். அவர் நீராளமான வாயும் பெருங்கரு விழிகளும் கொண்டவர். நயந்துபேசிப் பழிமுடிப்பவர். அவர் என்னிடம் எதையோ உள்ளூர மன்றாடுகிறார் என்ற உணர்வு என்னைத் திகிலடைய வைத்தது. என்னை ஓர் ஒதுக்கிடம் கொண்டுசென்று அந்தரங்கமாகப் பேச விரும்புகிறார் என்ற உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்பட்டது. தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அவ்வப்பொழுது சாடைமாடையாக என்னிடம் உணர்த்தினார். அதைத் தவிர்ப்பதற்கு அல்லது அவரைக் கடந்து விரைந்து நழுவிச் செல்வதற்கு நான் அரும்பாடுபட்டேன்" என்கிறார் தம்பிமுத்து.   
பின்னர் ஹென்றி தனது பிள்ளைகளை கொழும்பு கொண்டுசெல்ல முடிவுசெய்தார். அங்கே முன்னிலை வகித்த கத்தோலிக்க பாடசாலையில் அவர்கள் அனைவரும் சேர்க்கப்பட்டார்கள்.  அதன் பெயரும் புனித ஜோசப் கல்லூரியே  என்கிறார் Anthony Dickins. தம்பியின் மிக உருக்கமான நினவுகள் சிலவற்றின் தொடக்கம் அவர் திருகோணமலையில் வாழ்ந்த காலப்பகுதி ஆகும். அங்கேதான் அவருக்கு முதன்முதல் ஐரோப்பியருடன் தொடர்பு ஏற்பட்டது. G.A. Henry எழுதிய நூல்களை நண்பர் Major Graham அவருக்கு அறிமுகப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரது இளமைப்பராய இந்து நண்பர் சுப்பையாவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரது இறுதி ஆண்டுகளில் அவரை அறவே கொள்ளைகொண்ட சுய பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் முதன்முதல் அவரைத் தொடர்புபடுத்திய அந்த நண்பருடன் தொடர்பு ஏற்பட்டது. "பிள்ளையாரின் குட்டி வெண்கலச் சிலை" ஒன்றை அவரிடம் கொடுத்த அந்த நண்பருடன் தொடர்பு ஏற்பட்டது. தம்பியின் இந்துப் பரம்பரையின்பால் அவரை முதன்முதல் ஈர்த்த அந்த நூதனமான பொருளுடன் தொடர்பு ஏற்பட்டது.   
தனது கத்தோலிக்க வளர்ப்புக்கு அப்பால் சுண்டி இழுக்கப்படும் உணர்வும், இந்து மறைஞான ஆன்மீகம் மீதான நாட்டமும் அவருக்கு முதன்முதலாகவும் திரும்பத்திரும்பவும் அதே காலகட்டத்திலேயே ஏற்பட்டது. தன்னைத் தானே இனங்காணும் உணர்வுகள் தன்னிடம் ஓங்கியது பற்றி தம்பி குறிப்பிட்டுள்ளார் ("Swami Rock, Raga Rock"). அவற்றைத் தவிர்ப்பதற்கான அல்லது அவற்றுக்கு நிகரான ஈர்ப்புடைய எதிர்ச் சுவைகளையும், தாக்கங்களையும் மேலைத்தேய காலனித்துவமும், கத்தோலிக்க சமயமும் தோற்றுவித்திருந்தன. போர்த்துக்கேயர் தமது கோட்டைக்குள் அபகரித்து வைத்திருந்த பெயர்போன இந்து சிவன் கோயிலால் ஈர்க்கப்பட்டு, அதை தேடிச்சென்றதை அவர் கொண்டாடி மகிழ்கிறார். பிரடெரிக் கோட்டையினுள், சுவாமி மலையில் அமைந்திருக்கும் 400 அடி உயரமான அக்கோயிலை சோழமண்டலத்து தமிழ் மன்னன் ஒருவன் கட்டியதாகக் கொள்ளப்படுகிறது.    
"மிகவும் பழமையும், முழுமையும் வாய்ந்த சுவாமி மலை, உள்ளத்தைப் பூரிக்க வைப்பது. இந்தியாவுக்கும் சிவபெருமானுக்கும் புனித சின்னமாக விளங்கும் ஆறு இலிங்கேஸ்வரங்களுள் ஒன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு அமைந்திருந்த காலத்தில் எழுந்த ஒலியின் எதிரொலி எனும்வண்ணம் அந்த உயர்ந்த பாறையின்மீது (அவரது பாடசாலையைச் சேர்ந்த பிரஞ்சு யேசுசபை குருமார் போலன்றி) மேலாடை அணியாத பூசகர்கள், முப்புரி நூலணிந்து, காற்றோடு காற்றாக மந்திரம் ஓதி, படபடக்கும் கடல்மீது  மலர் சொரிவர்."
கேம்பிறிச், இலண்டன் பல்கலைக்கழகங்கத் தேர்கவுளுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாகவே அவர்களுடைய பாடசாலைப் போதனை அமைந்தது. காலனித்துவ எசமான் அல்லது கத்தோலிக்க சமயபரப்புரைஞர் இட்டுக்கட்டிய பாடநூல்களை வைத்தே ஆசிரியர்கள் அவர்களை ஆயத்தப்படுத்தினார்கள். அவரது இலங்கைத் தாயக பின்னணியும், வரலாறும் அவருக்குப் புரியாத புதிர்களாகவே அமைந்தன. உடன்பிறப்புகளுடன் அவர் உணவுண்ட பின்னர் அவர்களது மூதாதையர் பற்றியும், மூதாதையரின் வீரதீரங்கள் பற்றியும் ஆயாக்கள் சொல்லக் கேட்ட கதைகளாகவே அமைந்தன.       
"எனினும் அந்தக் காலகட்டத்தில் (பூதத்தம்பி எனப்பட்ட மூதாதையரின்) வரலாற்றுத் துணுக்கு, சுவாமி மலையின் கதையைப் போன்று, வெறுமனே ஒரு கட்டுக்கதையாகவோ, பழங்கதையாகவோ இருந்தது. எனது சின்னஞ்சிறு பராயத்தில் என்னுள் ஒரு பிளவாளுமையை அது ஏற்படுத்தியது. பிளவாளுமை என்பது காலனித்துவ காலத்து இலங்கையரதும், இந்தியரதும் குணவியல்பாக இருந்தது."
தம்பியின் (1) கத்தோலிக்கத்துக்கும் இந்துசமயத்துக்கும் இடையே, (2) வெண்ணிறத்தனத்துக்கும் (அல்லது மண்ணிறத் துரைத்தனத்துக்கும்) இந்து இளவரசப்பேறுக்கும் இடையே, (3) யோகித்தனதுக்கும் (அல்லது குருத்துவத்துக்கும்) மதுநுகர்வுக்கும் (அல்லது போதைமருந்து நுகர்வுக்கும்) இடையே, (4) அவருள் குடிகொண்ட கவிஞருக்கும் நுண்ணறிஞருக்கும் (அல்லது கல்வித்துறைஞருக்கும்) இடையே, (5) மரபுவழி ஒழுகாத கலைஞருக்கும் ஆதிக்கத்தரப்பின் அங்கீகாரத்தை அவாவிய கலைஞருக்கும் இடையே பிளவுண்ட ஆளுமை ஏதோ ஒரு வகையில் அவரை வாழ்நாள் முழுவதும் வேட்டையாடி வந்தது. சுருங்கக் கூறின், அவ்விரு பிளவுக் கூறுகள் இரண்டையும் என்றுமே தம்பியால் ஒருங்கிணைக்க முடியவில்லை. ஆதலால் கீழ்நாட்டவரின் நினைவில் அவர் ஒரு துயரார்ந்த பேர்வழியாக நிலைபெறக் கூடும்.
தந்தையார் கொழும்பில் வைத்திருந்த "Commercial Press" அச்சகத்தை பொருளாதார "மந்தம்" ஏற்பட்ட காலத்தில் அவர் விற்க நேர்ந்தது. அவர் அரசாங்க சேவையில் சேர்ந்து, ஈற்றில் அரசாங்க அச்சகத்தின் அந்தரங்க கிளைக்குப் பொறுப்பாளரானார். 1971ல், தனது 84வது வயதில், அவர் அச்சுவேலியில் இறந்தார். அங்கேதான் அவரது தந்தை (தம்பியின் பாட்டனார்) தனது "சன்மார்க்க போதினி" (The Tribune) இதழ் ஊடாக அவரை (தம்பியின் தந்தையை) ஓர் ஊடகராகப் பயிற்றுவித்திருந்தார். தனது தந்தையின் அச்சகத்திலேயே தனது குறுங்கவிதைத் திரட்டுகள் மூன்றையும் அச்சிடும் கலையை தம்பி கற்றறிந்தார். முதலிரு திரட்டுகளும் தடயம் எதுவுமின்றி மறைய, மூன்றாவது திரட்டு (Tone Patterns) மட்டுமே எமக்குக் கிடைத்துள்ளது. Audrey de Silva-வுடன் கொண்ட காதல் மங்கிய பிறகு தனது கனவுக் கன்னியாய் ஓங்கிய Miriam de Saram (செல்வி Pieris) என்ற பெண்ணுக்கு அதை அவர் அர்ப்பணித்திருந்தார். பாடசாலையில் எல்லா வகையான கலைத்துறைச் செயற்பாடுகளிலும் தம்பி ஈடுபட்டார். கொழும்பில் (Forbes Road) வசித்தபொழுது அவருக்கு 14 வயது. அவரும், மைத்துனர் அன்டனும் ஒரு திரைப்படக் காட்சியையும் தவற விட்டதில்லை. இலங்கையில் இருந்த திரையரங்குகள் அனைத்தும் அன்டனின் தந்தை ஸ்ரீ சிற்றம்பலம் கார்டினருக்குச் சொந்தமானவை. பிறகு கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் தாவரவியல் கற்க ஒரு புலமைப்பரிசிலை தம்பி வென்றெடுத்தார். எனினும், "தனது பட்டத்தை அவரால் கையேற்க முடியவில்லை" என்று தெரிவிக்கப்படுகிறது. நான் நினைப்பது சரி என்றால், தேர்வுகளில் அவர் சித்தி எய்தவில்லை என்பதே அதன் பொருள். அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. உள்ளூர் தாவர, விலங்கினங்கள் பற்றிய தனது அறிவை "My Country, My Village" என்னும் தன்வரலாற்றுக் கவிதையில் அவர் நன்கு பயன்படுத்தியுள்ளார்!          
     
"எங்கள் வளவைச்சுற்றி இளந்தளிர் மாங்கன்றுகள்
ஓங்கிய இலுப்பை சொரியும் வெண்பனி மலர்கள்
பன்னாடை மீது உருண்டு பூரிக்கும் மாதுளங்கனிகள்
அல்லி, அலரி இடையே ஓங்கும் /குக் கம்பங்களாய்
திருநீற்றுக் கமுகுகள்... 
அனைத்தும் எங்கள் வளவில்,
எங்கள் வாழ்வில் தன்னிறைவு,
எங்கள் வயலில் தானியம், புகையிலை, வெங்காயம்
உள்ளி, மிளகாய், வாகை, இஞ்சி, குங்குமப்பூ,
சேனைக்கிழங்கு, கீரை, மூலிகை,
சுவைமணங் கமழும் பழவகைகள்
ஓடுகளும் வலைகளும் நிறைந்து ஓலமிடும் கடல்." 

மேற்படி கவிதையின் இறுதி நான்கு கூறுகளும் பிற்சேர்க்கையாக அமைவது நியாயம் என்று கொள்ளப்பட்டிருக்கலாம். மற்றும்படி, தம்பியின் தாயக தாபத்தை இக்கவிதை அடியோடு துலங்க வைக்கிறது. உள்ளத்துள் பதிந்த பசுமை நினைவுகளை ஊரின் வண்மைச் சிறப்புகள் ஊடாக மீட்டும் கவிதை இது. ஊரெழிலில் அவர் திளைத்த காலத்தில் அவர் உள்ளத்துள் ஓங்கிய கவித்துவம் பிறகு அவருக்கு எவ்வளவு தூரம் கைகொடுத்தது என்பதை இது புலப்படுத்துகிறது. இலண்டனிலும், நியூ யார்க்கிலும் அவர் தடல்புடலாகக் கவிதைகளை வெளியிட்டு, கவிதைத் துறையை மேம்படுத்திய காலத்தில் அது அவருக்குத் துணைநின்றது. அடுத்த உண்டிக்கோ குடுவைக்கோ எங்கே போவது என்று அவர் அலட்டிக்கொள்ளாத காலத்தில் அது அவருக்குத் துணைநின்றது. பிறகு எல்லா வகையான செப்பநுட்பங்களையும் ஊடுருவிச் செல்வதற்கு வேண்டிய வலுவை அத்தகைய இயற்பண்புகளே அவருக்கு வழங்கின. அதேவேளை அவரை ஒரு முதிரா வெகுளி என்றோ உயர்குடிப்பிறந்த காட்டுமிராண்டியின் திருவுருவம் என்றோ சிலர் கொள்வதற்கான காரணங்களும் இதில் அடங்கியுள்ளன.     
16 வயதில் கவிதை யாத்தவர் தம்பி. அவர் கொழும்பில் வாழ்ந்த காலம் அது. மைத்துனர் அன்டன் கார்டினருடன் அவர் பூண்ட நட்பு ஆழமானது. பிறகு அவரை விடுத்து, இலண்டனில் Sir Henry Wood-இடம் இசைநெறியாள்கை பயின்றவரும், கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் வாத்தியப்பேழை மாணவராக விளங்கியவருமாகிய Anthony Dickins-உடன் நட்புறவு பூண்டார். இன்னோர் இலங்கை நண்பர் அழகு சுப்பிரமணியம், கண்கவர் சட்டவுரைஞர், எழுத்தாளர், பிற்சுரோவியத்தின் (Fitzrovianism) அசல் சாறு எனத்தக்கவர். தம்பி இலண்டனில் குடித்துவெறித்து வாழத் தொடங்கிய காலத்தில் அழகுவை அறிந்துகொண்டார். Poetry London இதழின் சக நிறுவனராகிய Dickins தம்பியின் தொடக்க காலக் கவிதைகளாலும், பாடல்களாலும் ஈர்க்கப்பட்டு, அவருடைய பாடல் ஒன்றை Shaftesbury Avenue-ல் உள்ள ஓர் இசை வெளியீட்டாளர் ஊடாக (Eclipse) இசைத்தட்டில் பதிவிட்டார். அது Woolworth கடையில் விற்கப்பட்டது. தம்பி இலங்கையை விட்டுப் புறப்பட முன்னரே இலண்டனில் தனது பாடல்களை வெளியிடுவித்தார் என்று The London Magazine-ல்  எழுதிய கட்டுரை ஒன்றில் Dickins குறிப்பிட்டுள்ளார். Day& Co.-விடம் உள்ள இன்னொரு பாடலாகிய The Hindu Love Song வெளிவராததற்கு "எனது பராமுகமே காரணமாகலாம்" என்கிறார் தம்பி. பிறகு "இலங்கையில் எனக்கு இங்கிலாந்து ஈந்த வாழ்வின் ஒரு பாகத்தை இங்கிலாந்தில் நான் களைந்து வந்தேன்" என்கிறார். இந்த மூடுமந்திரக் கூற்றினைப் புரிந்துகொள்வது கடினம். தம்பிக்கு வாழ்வின்மீது ஏற்பட்ட கரிசனை அவர் இங்கிலாந்தில் வாழ்ந்த காலத்தில் குன்றியதாக நாம் முடிவுகட்டுவதா?                   
கல்லூரிப் படிப்பைக் கைவிட்ட பிறகு இரத்தினபுரி கச்சேரியிலும், பிறகு கொழும்பு பொது கட்டுவேலை திணைக்களத்திலும் தம்பி கொஞ்சக்காலம் பணியாற்றினார். அவர் ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்றவர் (திருகோணமலையில் அவர் தமிழ் பேசிய ஒவ்வொரு தடவையும் 1 சதம் அபராதம் செலுத்த நேர்ந்திருக்கும்). அந்த வகையில் தனது உறவினருள் புகழ்பெற்ற இருவர் அடங்குவது குறித்துப் பெருமைப்பட்டவர் தம்பி. ஒருவர் ஆனந்த குமாரசுவாமி (இன்றும் வாழ்ந்துவரும் அவர் மகன் கலாநிதி இராமா, தம்பி அப்படி உரிமை கொண்டாடுவதை நிராகரித்துள்ளார்). ஆனந்த குமாரசுவாமி பாஸ்டன் கவின்கலை அரும்பொருளகத்தில் இந்திய அழகியற் கலைஞராகவும் காப்பாணையாளராகவும் விளங்கினார். மற்றவர் யேசு சபையைச் சேர்ந்தவரும் அகராதியியலருமாகிய ஞானப்பிரகாசர். அவர் தம்பியின் தந்தைக்கு ஒருவழிச் சகோதரன். அவரை எஸ். தம்பிமுத்துப் பிள்ளையே வளர்த்துப் படிப்பித்தார். திட்டவட்டமான தேர்ச்சிகளோ, தகைமைப் பட்டயங்களோ, பணவசதியோ அற்றவராக Kashima Maru என்னும் யப்பானியக் கப்பலில் ஏறிய  தம்பி 1938 தை மாதம் இலண்டனில் வந்து இறங்கினார்.
"பிற்சுரோவியாவின் இளவரசன்" என்ற வகையில் இலண்டன் இலக்கியத் துறைஞர்களுடன் அவர் கூடிக்குலவத் தொடங்கினார். அந்த உறவு 10 ஆண்டுகள் நீடித்தது. அவர் குடிபுகுந்த இடம்: 45, Howland Street. அங்கேதான் Verlaine, Rimbaud இருவரும் கூடிக்குலவிக் குமுறியதாக அவர் எண்ணினார். முப்பது-நாற்பதுகளில் அரும்பிய இளங் கவிஞர்களையும் ஓவியர்களையும், தன்மீது மிகுந்த விசுவாசம் கொண்ட "குடிமகனாகிய" Anthony Dickins-ஐயும் Redvers Gray என்பவர் ஊடாக அவர் சந்தித்தார்.
ஏற்கெனவே அவர் ஒரு மகத்தான கவிஞராக முளைத்திருப்பதாக Eliot எண்ணியதாகக் கூறுகிறார் Safia. ஹிட்லர் மேற்கு ஐரோப்பாவை அச்சுறுத்திய காலகட்டத்தில், நாசம் விளையப்போகும் காலகட்டத்தில், அதைப் பற்றி இம்மியும் அலட்டிக்கொள்ளாத கவிஞர் குழுமம் ஒன்று, மரபுவழி ஒழுகாத குழுமம்  ஒன்று Soho வட்டார மதுவிடுதிகளில், தம்பியின் தலைமையில் கொலுவீற்றிருந்தது. பத்தே பத்துப் பவுணுடன் தம்பியும் Dickins-உம் ஒருபடியாக Poetry London இதழை வெளியிடத் தொடங்கினார்கள். அதன் பிறகு தம்பி ஏற்றங்களுக்கும், அரிதாக இறக்கங்களுக்கும் உள்ளானார். தன்னையும் இதழையும் கொண்டுநடத்த வல்லவராகவே தென்பட்டார். அவர் நீண்ட நேரம் சோம்பிக் கிடந்துவிட்டு, தடல்புடலாகச் செயற்படுவார் என்று தம்பியின் சிறப்பிதழில் காலவரன்முறைப்படி விவரணம் எழுதிய சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். அதை உறுதிப்படுத்துவது போல் Poetry London அவ்வப்பொழுது மட்டுமே  வெளிவந்தது. 1945 மாசி மாத Poetry London புதிய கவிஞர்களின் நிரலை மட்டுமே கொண்டிருந்தது.        மற்றுமப்டி 1943 முதல் 1947 வரை ஒரேயொரு Poetry London மாத்திரமே உருப்படியாக வெளியிடப்பட்டது. மொத்தத்தில் தம்பி 14 இதழ்களை மாத்திரமே பதிப்பித்தார், 15வது இதழைப் பதிப்பிக்கத் தொடங்கியிருந்தார். அவ்வளவுதான்! அதன் பிறகு Poetry London-New York இதழ்கள் நான்கும் (1956-1960), Poetry London/Apple Magazine இதழ்கள் இரண்டும் (1979-1982) வெளிவந்தன. புலமைசார்ந்த அல்லது போலி முன்னோடிக் கலைத்துவம் மிகுந்த அல்லது பளபளப்பான சஞ்சிகைகள் உட்பட எல்லா வகையான சஞ்சிகைகளையும் வெளியிடும் பாணி ஓங்கிய ஓருலகில் அவை வெளிவந்தன. தம்பியின் சிறப்பிதழில் Peter Owen எழுதிய கட்டுரை அதை தெளிவுபடுத்துகிறது.   
திறமைவாய்ந்த ஆங்கிலேயக் கலைஞர்களை இனங்காண்பவராகவோ, கவிதையியலுக்கு முன்னோடியாகவோ, கவிதையியலை ஊட்டிவளர்ப்பவராகவோ விளங்குகிறேன் என்று மேற்கொண்டு தம்பியால் மார்தட்ட முடியவில்லை. பிரித்தானியாவில் ஓரங்கட்டப்பட்ட கவிஞர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மாபெருஞ் சதி ஒன்றின் ஊடாக, ஓர் அறுதியிறுதிப்போரின் ஊடாக, ஆதிக்கத்தரப்பிடமிருந்து Poetry Society Review-ஐ கவர்ந்துகொண்ட Eric Mottram ஏழு ஆண்டுகளாக அதை வெளியிட்டு வந்துள்ளார். தம்பி விபரமறிந்த ஓர் உயர்கல்விக் கழகத்தவரோ, ஒதுக்கி ஒடுக்கப்பட்ட எழுத்தாழரோ, கவிஞரோ அல்லர். அந்த வகையில், தன்னால் எய்தமுடியும் என்று தம்பி கனவிலும் எண்ணாத சாதனைகளை Eric Mottram நிகழ்த்திக் காட்டினார். இன்று King's College (London)-ல் ஆங்கில- அமெரிக்க இலக்கிய பீடாதிபதியாக உயர்ந்துள்ள Eric Mottram பேருணர்ச்சி கிளர்த்தும் 20 கவிதைத் தொகுதிகளை (William Burroughs பாணியில்) வெளியிட்ட பெருமைக்குரியவர். அவை ஏற்கெனவே 21ம் நூற்றாண்டுக்குரிய கவிதைத் தொகுதிகளாக விளங்குவது நியாயமே. அத்துடன் ஆங்கில, அமெரிக்க இலக்கியம், பண்பாடு குறித்து பத்துப் பதினைந்து புதுவகைத் திறனாய்வுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.      
தம்பி, மொட்றாம் (Mottram) என்னும் கவிஞர்கள் இருவரையும் நாம் ஒப்புநோக்கும் பொழுதே தம்பிக்கு கல்வியறிவும், விறலும் போதாது என்பதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியும். எத்தகைய பணியை மொட்றாம் ஆற்றிவந்தாரோ, அத்தகைய பணியை மேற்கொள்ளும் விறல் தம்பிக்குப் போதாது என்பதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.  40 ஆண்டுகளாக இலண்டன் பல்கலைக்கழகத்திலும், மூன்று கண்டங்களிலும் எண்ணிறந்த மாணவர்களுக்குப் போதித்தவர் மொட்றாம். கால அடைவில் அவருக்கு அங்கீகாரம் கிட்டியது. தம்பியை ஆதரித்த தரப்பினர் இனித்தான் மொட்றாமை அங்கீகரிக்க வேண்டியுள்ளது. ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தம்பிக்குப் பதவி கொடுக்க மறுத்தபொழுது, அவர் நிலைகுலைந்து விழுந்தவர் போலானார். மறுபுறம், அவரது சொந்த வெளியீடுகளே அற்பசொற்பம். அப்படியிருக்க, ஏனைய கவிஞர்களின் படைப்புகளை அவர் சீராட்ட முனைந்த காரணம் எதுவாயிருக்கும் என்று நாம் அங்கலாய்க்க நேர்கிறது. அவர் நாடியது அதிகாரமா, அதன்மூலம் மற்றவர்களால் மெச்சப்படும் தகுதியா? தம்பி இயற்கொடை மிகுந்தவர். அவர் சுயமாகவே ஓர் ஆங்கிலக் கவிஞராகவும், திறனாய்வாளராகவும் விளங்கியிருக்க முடியுமே!
தவிரவும், Poetry London மட்டுமே போர்க்காலச் சஞ்சிகை என்பதற்கில்லை. Life and Letters Today, New Directions, Diogenes, Kingdom Come, Twice n Year, Voices, Partisan Review உட்படப் பல்வேறு சஞ்சிகைகள் வெளிவந்தன. Poetry London-ல் வெளிவந்தவை பலவும் வேறு சஞ்சிகைகளிலும் வெளிவந்தவை. எதிர்காலத்தில் பெருமையீட்டப் போவோரை, Dylan Thomas, Kathleen Raine, David Gascoyne, George Barker போன்றோரை மோப்பம்பிடிக்கும் வல்லமை படைத்தவர் தம்பி என்பது உண்மையே. வேறு சிலரின் பெருமையைப் போல் அவர்களின்  பெருமையையும் அவர் பதிப்பித்த Poetry London இதழ்கள் உறுதிப்படுத்தவில்லையா? 1947 புரட்டாதி மாதம் அவர் தாபித்த Poetry London, 40க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்ட Poetry London அதை உறுதிப்படுத்தவில்லையா?
Poetry London அல்லது English Poetry London வெளியீட்டகத்தை வந்தடைந்தோருள் சிலர் T.S. Eliot அல்லது Walter de la Mare போன்று ஏற்கெனவே வெற்றியீட்டியவர்கள் அல்லது Herbert Read, Louis MacNiece, Stephen Spender, Laurence Durrell முதலியோர் போன்று மேன்மேலும் வெற்றியீட்டி வந்தவர்கள். தவிரவும், W.B.Yeats, Henry Treece, Henry Miller, Salvador Dali, Henry Moore, Graham Sutherland, Vladimir Nabokov மற்றும் Eliot போன்ற ஒருசில பெருங்கவிஞர்களுக்கு தம்பியின் தயவு தேவைப்படவில்லை. தம்பியின் காலகட்டத்தில் தமது முத்திரையைப் பதிப்பதற்கு அவரது தயவு அவர்களுக்கு தேவைப்படவில்லை. தம்பியையோ,  கவிதைத் துறைக்கு மிகவும் நலம்பயக்கும் வண்ணம் அவர் மேற்கொண்ட முயற்சிகளையோ நான் மட்டந்தட்ட முற்படவில்லை. பணத்தைக் கையாள்வதில் அவர் சற்று கவனக்குறைவாக இருந்தாலும் கூட, அவர் அசாதாரண தொழில்முனைவுத் திறன்கள் படைத்தவர் என்பதில் ஐயமில்லை. G.S. Fraser தமது Letter from London-ல் வலியுறுத்துவது போல், "ஐம்பதுகளில் கவிஞர்கள் தமக்கு வழிகாட்டும் ஒளியை இழந்தவர்கள் போல் நடமாடி வந்தார்கள்."    
Poetry London, English Poetry London இரண்டையும் பொறுத்தவரை தம்பி ஈட்டிய சாதனை வியக்கத்தக்கது. சாதித்த காலகட்டத்தையும், சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளும்பொழுது அது வியக்கத்தக்கது. அதனால் ஆங்கிலக் கவிதையுலகில் விளைந்திருக்கவல்ல தாக்கம் என்ன, அக்கவிதையுலகிற்கு அறவே தேவைப்பட்ட உந்துவிசையை அது அளித்ததா என்பது வேறு கதை. தம்பியை முதன்முதல் புகழ்ந்தோர் Dylan Thomas, T.S. Eliot இருவரும் என்பது உண்மையே. ஆனாலும் தொடக்கத்தில் மாத்திரமே அவர்கள் புகழ்ந்தார்கள். அது போகட்டும்; ஆங்கில இலக்கியக் கடலொடு கலக்கும் இலக்கிய வகைகள் அனைத்தையும் கொண்ட கிளையாறுகளுடன் கூடிய இலக்கியப் பேராற்றில்  பதினான்கு Poetry London இதழ்கள் ஏற்படுத்திய தாக்கத்தை ஒருவர் கணிப்பது எவ்வாறு?      
திறனாய்வுத் துறையிலும் தம்பியின் பிறவித் திறம் வெளிப்பட்டது. அந்த வகையில், ஒரு G.S. Fraser அல்லது ஒரு Keith Douglas புதுக்க எழுதிய ஒன்றை, பெரிதும் திறனாய்வுக் கணிப்புகள் வாயிலாக, அவர் தோண்டியெடுக்க ஆசைப்பட்டது உண்மையே. Poetry London கவிஞர்களை "வெற்றிகொண்ட" பிரித்தானியாவின் "ஒப்பற்ற" கவிஞராகிய D.J. Enright-ஐ அவர் சாடியமை, தனது நம்பிக்கைகளில் அவர் எத்துணை உறுதி பூண்டவர் என்பதை உணர்த்துகிறது. எனினும் இந்திய செவ்வியலில் புலமையின்மையே அவர் உள்ளம் ஒடிந்தமைக்கான தலையாய காரணம். தான் விழைந்த கவிக் கலைத்துவத்தை, ஏறத்தாழ வேதகால முனிவர்களின் செய்யுட் கலைத்துவத்தை முன்வைக்கப் போதிய ஆற்றல் வாய்ந்தவராக அவர் என்றுமே விளங்கியதில்லை.   
Bhavani Torpy கூறுவதை நாம் நம்பாமல் விட நியாயம் இல்லை. அவர் கூறுவதை நாம் நம்புமிடத்து, Poetry London-ஐ விட்டு வெளியேறிய தம்பி, பெரிதும் இரங்கத்தக்க வகையில் வருந்தி வாழ்ந்த இறுதிக் காலத்தில், வேதகால முனிவர்களின் செய்யுட் கலைத்துவத்தை Shri Chinmoy-ன் படைப்புகளில் கண்டடைந்ததாகத் தென்படும். 1983 ஆனி மாதம் அக்கவிஞரின் The Son நாடகத்தைப் பார்க்கையில் தம்பிக்கு அக்கலைத்துவம் அருளப்பட்டிருக்கும். தம்பியை ஒடுக்கிய கத்தோலிக்க கல்விக்கும், வளர்ப்புக்கும், ஆங்கிலப் பண்பாட்டின் எச்சமிச்சங்களுக்கும், அல்லது அச்சுவேலியிலோ, திருகோணமலையிலோ அவரது அரசகுடும்பத்தவர்கள் தமது இந்து பாரம்பரியம் முழுவதையும் அறவே தவிர்த்தமைக்கும் அவரை நாம் குறைகூற முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலகட்டத்தில், இலங்கை கட்டியாளப்பட்ட காலகட்டத்தில், அவருக்கு அவையே கைகூடின. அதேவேளை ஓர் ஆங்கிலத் தாய்க்குப் பிறந்த "மாமனார்" ஆனந்த குமாரசுவாமி இந்து, பெளத்த மதங்களால் ஈயக்கூடிய உன்னதங்கள் முழுவதையும் உள்வாங்குவதற்கு எதுவுமே தடையாக அமையவில்லை!   
Safia-ஐ தம்பி மணம் முடித்த பிறகு மும்பாயில் ஓர் இந்தியப் பெண்மணியிடம் (அவர் உடற்பயிற்சி செய்கையில்) கொஞ்சம் வடமொழி கற்க அவர் திடுதிப்பென்று முயற்சி எடுத்தார். அது காலங்கடந்த, பரிதாபத்துக்குரிய முயற்சி. யோகநெறியை விடுத்து இலக்கிய-மெய்யியல் கவித்துவ நெறிநின்று இந்துமத நெறி ஒன்றை அவர் தழுவ எடுத்த முயற்சி ஒரு வீண்முயற்சி. பல நூற்றாண்டுகளாக ஆங்கிலேய-அமெரிக்க மரபுவழியாக ஊட்டப்பட்ட யூத-கிறீஸ்தவப் பண்பாட்டில், ஒரு சிறுவனாக நின்று உள்வாங்கிய பண்பாட்டில், ஈற்றில் ஓர் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் கவிஞராகவும் நின்று விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொண்ட பண்பாட்டில் ஊறிய தம்பி எதிர்நோக்கிய அரிய சவால் அது. இங்கு ஒரு வினா எழுகிறது: அவர் Oxford, Cambridge பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கியம் கற்றிருந்தால், பெரும்பாலும் ஓர் Eliot-ஆக நின்று கவித்துவ விவாதங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதுடன் அவர் நிறைவுகொண்டிருக்க மாட்டாரா? (Harvard பல்கலைக்கழகத்தில் Eliot மேற்கொண்ட இந்து மெய்யியல் ஆராய்ச்சியால் உந்தப்பட்டு தமது Waste Land-ஐ எழுதியிருக்கக் கூடும்). தம்பியும் மேலைத்தேய மரபுக்கு அமைந்த கட்டுரைகள் வாயிலாகத் தனது வாதங்களை முன்னகர்த்தியிருக்க மாட்டாரா? Geoffrey Grigson, Robert Conquest, D.J. Enright மீது அவர் தொடுத்த கண்டனங்கள், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் எந்த அளவிலேனும் ஏற்புடையதாகலாம். அதன் பொருள், தனக்கு வேண்டிய உயர்கல்வித் தேர்ச்சிகளை அவர் ஈட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்பதல்ல. அவர் அவற்றை ஈட்டிக்கொள்ளவில்லை, அவரால் அவற்றை ஈட்டிக்கொள்ள முடியவில்லை என்பதே அதன் பொருள். அதை எல்லாம் ஒப்புக்கொள்வது போல் எல்லா வேளைகளிலும் அவர் சற்று இரங்கி வருந்த நேர்ந்தது. Poetry London-New York-ல் அவர் முதன்முதல் எழுதிய மடலில் அது நிரம்பி வழிகிறது:
"பிரித்தானியாவில் Objective Reporting, The New Apocalypse, The New Romanticism போன்ற வெளியீடுகளை விஞ்சி நாம் நிலைகொண்டுள்ளோம். ஏற்கெனவே நிலையூன்றிய வெளியீடுகளை ஏனைய பதிப்பாளர்கள் நாடிய வேளையில், புதிய எழுத்தாளர்கள் இல்லை என்று ஒரேயடியாக முழங்கிய வேளையில், புத்தம்புதிய கவிஞர்-தலைமுறை ஒன்றின் பெருமையை நாம் மேம்படுத்தினோம்... ஒப்பளவுக் கண்ணோட்டத்தை மீண்டும் நிலைநாட்ட முற்படும் தரப்புக்கு, தற்காலக் கவிதைக்கு வரவேற்புக் கிடைக்க உறுதுணை புரியும் தரப்புக்குத் தோள்கொடுப்பதே எமது கொள்கை.  எடுத்துக்காட்டாக, சமயோசிதம், பொதுப்புத்தி, அறிவியல், தொழினுட்பவியல் கொண்டு கவிதையை அணுகும் முறை பரந்துபட்ட அளவில் மக்களை ஈர்த்த முப்பதுகளில் நாம் Walter de la Mare, Dylan Thomas, Stephen Spender, George Barker போன்றவர்களின் கவிதைகளில் புலன் செலுத்தினோம்... (Thomas) பெரிதும் நாட்டார் கவிதையில் உள்ளவாறு புலனுகர்வு, உணர்வெழுச்சி கொண்டு அல்லது வெறுமனே மந்திர உச்சாடணம் கொண்டு கவிதையை அணுகும் முறையை வலியுறுத்தத் துணிந்தார்" (தம்பி).
தொடக்கத்திலிருந்தே தன்தரப்பு வாதத்தில் தம்பி ஈடுபட்டு வந்துள்ளார். காலப்போக்கில் அவர் தரப்பு வாதம் குன்றிக் குறுகியது. தனது சொந்தக் கவிதைக்குத் தளமெடுக்கும் காலம் பிறக்கும்வரை அது குன்றிக் குறுகியது. எதையாவது எண்ணி சொந்தக் கனவு காண்பதை விட வேறெதுவும் அவருக்கு கைகொடுக்கப் போவதில்லை. அப்படித்தான் அமையவேண்டும் என்று அவர் விரும்பியிருப்பார் என்பதல்ல. அதைப்பற்றி எல்லாம் அவர் வாய்மையுடனும் நேர்மையுடனும் ஒழுகியது உண்மை என்றுதான் கூறுகிறேன். அதேவேளை, ஆங்கில அரங்கினைப் பொறுத்தவரையாவது, அவர் தப்புக்கணக்குப் போட்டிருக்கக் கூடும் என்பதும் உண்மையாகலாம். தம்பியின் For Katharine (Kamala) Bennett and All True Sadhakas" மற்றும் "Gita Saraswati: A Theology for Modern Science, The Creation and Dissolution of Kosmos" ஆகிய கவிதைகள் போன்று ஆங்கிலக் கவிஞர்கள் பெரிதும் அருட்கவிதைகளை எழுத வேண்டியிருக்கவில்லை. இற்றுவிழும் தனது இலக்கிய ஆளுமைக்கு முண்டுகொடுக்கும் இறுதி முயற்சியாக அவர் எழுதிய கவிதைகளே இவை இரண்டும் எனலாம். (Bennett என்பவர்  Poetry London-New York-ல் ஓர் இணைப் பதிப்பாளர், அறுபதுகளின் பிற்கூறில் தம்பி நிறுவிய Lyrebird அச்சகத்துக்குப் பொருளுதவி புரிந்தவர்).
குமாரசுவாமி எழுதிய Myths of the Hindus and the Buddhists, Carl Sagan எழுதிய Cosmos நூல்களில் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை மேற்கோள்காட்டி மேற்குறித்த இரண்டாவது கவிதையை நாம் எளிதில் புறக்கணித்து விடலாம். எனினும் Sri Chinmoy-யின் இறுதி நிலைப்பாடு போல் தம்பியின் இறுதிக் கோட்பாட்டை, தனிச்சொற் கோட்பாட்டை நிலைநாட்டுவதற்கு இக்கவிதைகள் துணைநிற்கின்றன. அதேவேளை தம்பி என்றுமே உறுதி தளர்ந்ததில்லை. தொடக்கத்திலிருந்தே Poetry London-ல் அவர் எழுதிய "letters," பிறகு Poetry London-New York-ல் எழுதிய "Fourth Letter" வாயிலாகப் பண்டை இந்துக் கவியியல் பற்றிய எண்ணத்தை அவர் குறைந்த நிபுணத்துவத்துடன் எடுத்துரைக்க முயன்றுள்ளார். (அது கூட, குமாரசுவாமி மாமா கீழ்க்கண்டவாறு எழுதியதை வாசித்தபடியால் தானோ?):  
"ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கவிதை உண்டு. உலகினைப் பற்றிய உள்ளத்து விழிப்புணர்வே கவிதை. உலகத்தில் உள்ளவை அனைத்தையும் கவிதை அணைத்துக் கொள்கிறது. கவிதையிலிருந்தே சமயங்கள், மெய்யியல்கள், நன்மை தீமை பற்றிய உணர்வுகள், நோய்களையும் அறியாமையையும் எதிர்த்துப் போராடும் அவா, மானுடர்க்கு நல்வாழ்வு நாடும் அவா முழுவதும் பிறக்கின்றன. உளத்துக்கும் சடத்துக்கும் இடைப்பட்ட தொடுப்பே கவிதை. கவித உலகளாவியது."
"பூரண மனிதனை எடுத்தியம்பும் பண்பாட்டின் உள்ளேயே திட்பமான கவித்துவம் உச்சநிலை எய்துவது சாத்தியம். அத்தகைய கவித்துவமே உலகெங்கும் புரிந்துகொள்ளப்படும்."
அத்தகைய சாதனைகளுக்கான எடுத்துக்காட்டுகளாக "மகாபாரதம்" (அந்த வகையில் "பகவத்கீதை"), "இராமாயணம்", காளிதாசரின் "சகுந்தலை" போன்ற காவியங்களை அவர் முன்வைக்கிறார். கவித்துவக்கலை பற்றி ஏதோ ஒன்றை உறுதிபட அறியாது, அதை அவர் அறுத்துரைக்க முயல்வது இங்கு வெளிப்படையாகவே புலப்படுகிறது. அவருக்கு அவை இந்திய எடுத்துக்காட்டுகள் போல் மின்னுபவை, ஆதலால் அவற்றையே அவர் செவ்விய எடுத்துக்காட்டுகளாகக் கொண்டார். தனது நிலைப்பாட்டுக்கு இந்திய இலக்கிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டே அவர் விளக்கமளிக்க வேண்டியிருந்தது. தனது "கோட்பாட்டை"  விரித்துரைக்கையில் Dante-ஐ அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதேவேளை கலாநிதி Faustus பற்றியோ, Paradise Lost பற்றியோ குறிப்பிட மறந்துவிடுகிறார். அவரது தனிச்சொற் "கோட்பாடு" மிகவும் காத்திரம் வாய்ந்த ஏதோ ஒன்றில் வேரூன்றியிருக்கக் கூடும்.
"தலம், சடங்குகள், சூழல் என்பவற்றுடன் கூடிய ஓர் இந்துக் கோயில் எனக்கு ஈயும் நிறைவின் உச்சத்தை என்னால் எடுத்தியம்ப முடியாது. முற்றுமுழுதான ஈடுபாடு, புலன்கள் அனைத்தும் ஒன்றிய நிலை... தலைமுடி வேரடியிலும், நெற்றியிலும் சுரந்து, மேனிதீண்டிப் பாயும் வியர்வைச் சுவையுடன் உறைப்பு மிகுந்த சோறு கறி உண்கையில் எழும் மனநிறைவு, பேரின்பம். கிறங்கவைக்கும் பல்வண்மை, நறுஞ்சுவை, பொது நோக்கு, பொது உணர்வு... தனி நறுஞ்சுவைகள், உணர்வுகள் அனைத்தும் ஒன்றி ஒருமித்த நிலை; ஆழ்ந்துணர்ந்த, அதேவேளை எடுத்தியம்பவியலாத நறுஞ்சுவைகள் அனைத்தும் ஒன்றி ஒருமித்த சுரம். யோகச்சுவை ஊடாகப் பரந்து பாயும் புதிய சக்தியுடன், நூறு விழுக்காடு  சக்தியுடன் ஒன்றிய சுயம். சூழலுடன் ஒன்றி ஒருமித்து இசைந்த நிலை. உச்ச நிறைவு" என்கிறார் தம்பி.      
மேற்படி கூற்றில் தனது "கோட்பாடு" விரித்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் கொள்ளவில்லை. எனினும் அவர் எதை எய்த விரும்பினாரோ அது இங்கு மிகச்சிறந்த முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. அருட்கவிதை என்ற வகையில் முற்றிலும் செல்லுபடியாகும் கவிதை அது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் வாய்மொழியில் அமைந்த வேதமந்திரம் போல் செல்லுபடியாகும் கவிதை அது. தம்பியின் சிறப்பிதழில் முழுமையாய் இடம்பெற்றுள்ள Sri Chinmoy-யின் "The Absolute" கவிதையில் அருட்கவிதைக்கு ஒரு மாதிரியை நாம் நாடுவதாக வைத்துக்கொண்டால், எங்களைக் கட்டியாண்ட எசமானின் இடத்தில் இந்துசமயத்தை வைக்க வேண்டும் என்பதே தம்பியின் உண்மையான நிலைப்பாடா? அவருக்கும் அவரது முன்னோருக்கும் அந்த எசமான் இழைத்த ஈடுசெய்யமுடியாத கேட்டுக்கு இப்பொழுது காலந்தாழ்த்தி வஞ்சம்தீர்க்கும் நிலைப்பாடா? இந்தியர்கள், இலங்கையர்கள் அனைவரும் "பிளவாளுமை"க்கு உட்பட்டவர்கள் என்று வலியுறுத்திய தம்பியின் "பிளவாளுமை" ததும்பும் பொன்மொழிக்கு வழிவகுத்த எசமானிடம் வஞ்சம்தீர்க்கும் நிலைப்பாடா? என்று எங்களை நாங்களே வினவிக்கொள்ளலாம். அல்லது, கட்டியாண்டோரால் நெய்யப்பட்ட சுயம், சித்தம்பிறழ்ந்த சுயம் என்பதே அத்தகைய மானக்கேட்டின் இறுதி விளைவா?
அன்று கட்டியாண்ட எசமானிடம் கும்பத்தில் ஒரு தட்டு வாங்க ஆசைப்படுவது, தவிர்க்கமுடியாவாறு ஆசைப்படுவது இதன்மூலம் புரிகிறது. மேலைத்தேயத்தின் முழுநிறைவான இந்திய செல்லப்பிள்ளையாகிய P.LaI ஒரு கவிஞரே அல்லர். அவர் பொருள்பெயர்த்த இருக்குவேதச் செய்யுள் ஒன்றின் கையெழுத்துப் பிரதியும், அவரைப் போலவே தம்பிக்கு உவப்பான இந்திய-ஆங்கிலேயராகிய Nissim Ezekiel எழுதிய கவிதையும், Mulk Raj Anand எழுதிய காலனியாதிக்கதுக்கு எதிரான வாதபோதமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்றும் கூட இலண்டனில் அல்லது நியூ யார்க்கில் ஒரு நூலை வெளியிடுவதன் மூலம்  மேல்நாட்டில் இடம்பிடிப்பதற்கே இந்திய, இலங்கை அறிஞரோ எழுத்தாளரோ கனவுகாண்கிறார் என்பதை எவருமே மறுக்க முடியாது. பல வழிகளிலும் ஆங்கிலேயரை விஞ்சிய ஆங்கிலேயர்களாக மாறியுள்ள நைபோல்களும் சல்மன் ருஷ்டிகளும், ஏனைய ஆர்வலர்களுக்கு வழிக்காட்டுவதை விடுத்து, இக்கண்ணோட்டத்தை வலுப்படுத்துவோராகவே புலப்படுகிறார்கள்.         
அவர்கள் ஆங்கிலக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மிகைபடக் கற்றவர்கள். அத்தகைய புலமை தம்பிக்கு வாய்க்காதது ஓர் அவப்பேறே ஆகும். அந்த வகையிலும் அவர் ஒரு முன்னோடியே. அதனைக் கருத்தில் கொண்டே ஆங்கில இலக்கிய அரங்கில் அவர் ஈட்டிய சாதனையையும், அவரது புலமைத் தாழ்ச்சியையும் கணிக்க வேண்டும். எனினும் தனது "ஆங்கிலேயத்தனத்தை" அவரால் முற்றிலும் எய்தியிருக்க முடியுமா? தனது "இந்தியத்தனத்தை" அவர் உதறித்தள்ளியிருப்பாரா? அவற்றுக்கான விடை எவருக்குமே தெரியவராது போகலாம். தம்பியின் தன்மானம் நிலைகுலையாவாறு அவரது மறுசுயம், மூதாதையர் வழிவந்த பெருமை, நன்கு முண்டுகொடுத்தமை இங்கு வெளிப்படையாகவே புலப்படுகிறது. 
மனமுடைந்த தம்பி, "ஒரு மாலைவேளையில் கத்தரிக்கோலினால் தனது தொப்பியையும், உடைகள் அனைத்தையும் கீலம்கீலமாக வெட்டித்தள்ளி, பின்வளவில் தாழ்க்கையில் Eliot வந்து அவரைத் தடுத்தாட்கொண்டார்." பிறகு Bridge House-ல் (Cranbrook, Kent) சேர்க்கப்பட்டு, அவர் பராமரிக்கப்பட்டார்.
சர்ச்சைக்குரிய பேர்வழிகள் பலரையும் போலவே தம்பியும் முரண்பாடுகளுக்கு உட்பட்டவர். நுண்ணறிவாண்மைக்கும், புறவய ஆய்வுக்கும் எதிரான தம்பியின் நிலைப்பாடு அவருக்குப் பிறிதொரு புலமைத்துறையில் கைகொடுத்தது. Eliot, Wordsworth குறித்து அவர் முழக்கமிட அது உதவியது. வடமொழியில் அமைந்த இந்து நூல்களின் நறுஞ்சுவைக் கூறுகள் சிலவற்றை ஆங்காங்கே கிள்ளித் தெளிக்க அது உதவியது. வேண்டிய இலக்கியப் பின்புலம் வாய்க்கப்பெறாத இந்த இலங்கைத் தமிழர் தனது 23-வது வயதில், அந்த அசல் ஆங்கில இலக்கிய அகல்மாநகரில் குமுறியெழுந்து, அங்கே கவிதை பாயும் திசையை மாற்றியமைத்தமை இன்றும் எமக்கு வியப்பூட்டுகிறது.
1971-ல் Poetry London-ன் Cass வெளியீட்டகப் பதிப்புக்கு The Times Literary Supplement-ல் வெளிவந்த மதிப்புரையில் அது ஒப்புக்கொள்ளப்பட்டும், சாடப்பட்டும் உள்ளது. கவித்திறனும், திறனாய்வுப் புலமையும் வாய்ந்தவர் தம்பி. எனினும் சல்மன் ருஷ்டியின் எழுத்துகளைப் போலவே தம்பியின் சுயவரலாற்றுக் குறிப்புகளும், Poetry London மடல்களும் அலுப்பூட்டும் இலக்கியச் சரக்கினுள்  அல்லது மறைஞானக் கூற்றுகளுடன் அல்லது மதிமயக்கும் கூற்றுகளுடன் கூடிய பெருந்தத்துவச் சரக்கினுள் அடங்குவது தெளிவு. கூச்சப்பட்டு, குளறுபடிசெய்து கூறிவிட்டு அவரால் தப்பிக்கொள்ள முடிந்ததில்லை. ஆதலால்தான் நாற்பதுகளில் அவர் இலண்டனில் வகித்த பங்கு மேலும் வியப்பூட்டுவதாய் அமைகிறது. விறல்கொண்ட திறனாய்வுகளை அவர் தவிர்த்து வந்தார். நிச்சயிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகளையும், விளக்க விவரங்களையும் ஆதாரமாக முன்வைக்காமல் அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் பொதுப்படையான கூற்றுகளை மாத்திரமே அவர் தவிர்த்து வந்தார். "...கத்திவகைகள் கொண்டு கவிதையை வெட்டிப் பிளந்து இடுங்கிப் பிடுங்கச் சித்தம் கொண்டவர்களுள் நான் ஒருவனல்ல..."  என்று வேறு குறிப்பிடுள்ளார்! தம்பியின் சிறப்பிதழில் மீளவும் முற்றுமுழுதாக இடம்பெற்றுள்ள அவரது "Fourth Letter"-ல் காணப்படும் முறுகித்திருகிய வாதங்கள் பலவற்றையும் துலக்கியுரைப்பதற்குரிய கவிதைகளை அல்லது பாக்களை முற்றுமுழுதாகவே எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது!     
புலன், சந்தம், ஒலி, உரு ஆகிய கூறுகளை உணர்த்தும் தனிச்சொல்லின் கனதியே, செய்யுள் வரியும் உரைநடை வரியும் வெவ்வேறு விதங்களில் வேறுபடும் அளவுகளை நிர்ணயிக்கும். அப்படிமுறையை "I, in My Intricate Image" என்னும் கவிதையில் Thomas விளக்கியுரைத்துள்ளார் (இங்கு முழுமையாக இடம்பெறும் கவிதை அது).  
அவரால் "புது நவீனர்கள்" (The New Moderns) என்று கொள்ளப்பட்டோர் மீதும், அவரது சஞ்சிகைகளிலும் வெளியீடுகளிலும் ("நவீனர்களுக்கு" எதிராக) அவரால் ஊட்டிவளர்க்கப்பட்டோர் மீதும், உயிர்க்களையிலும் தன்னிகழ்விலும் அவர்கள் கொண்ட நாட்டத்தின் மீதும் வாசகரின் கவனத்தை அவர் ஈர்க்கும் வேளையில் Kathleen Raine எழுதிய The Hyacinth கவிதை முழுவதையும் அவர் மேற்கோள்காட்டுகிறார் (1933 முதல் 1939 வரை Geoffrey Grigson "நவீனர்களின்" (The Moderns) கவிதைகளை New Verse இதழில் வெளியிட்டார்). பிறகு தனது தனிச்சொல்வாரியான கவிதைக்கலையையும், மிகுந்த சிக்குப்பிக்குடன் தொகுக்கப்பட்ட இந்திய கலையழகு "ரச" நெறியையும் அவர் எவ்வாறு வேறுபடுத்துகிறார் என்று தெரியாமல் எங்களை ஏங்கிநிற்க வைத்துவிட்டு அகன்றுவிடுகிறார் (அவரது அவசர அடிக்குறிப்பின்படி இந்திய கலையழகு "ரச" நெறியை வெறுமனே ஒரு "சுவை" நெறி என்று அவர் கருதுவதாகத் தெரிகிறது).
மேற்படி "நவீன" கவிஞர்களின் கலையும் ஆங்கிலக் கவிஞர் Kathleen Raine-ன் கலையும் வெவ்வேறானவை. தற்காலத்தில் "கவித்துவ நேர்த்தி" பற்றியும் கட்டுக்கதைகள் உள்ளன. எனினும்  இந்தியர்கள் "ரசம்" (கவிதையின் சாரம்) என்று குறிப்பிட்ட அந்த நயம், வரையறுக்கவியலாத அந்த நயம் Kathleen Raine-ன் கவிதைவரியில் உண்டு. அது வலிந்து புகுத்தப்படுவதல்ல (அதற்காகவே அதை அவர்கள் வாசிக்கிறார்கள். மனிதரின், சமூகத்தின் இயல்பினைப் பற்றிய கீதங்களை அவர்கள் வாசிப்பதில்லை).      
தனது "பிற்சுரேவிய குரு"வாகிய Philip O'Conner-ன் கவிதையை விபரிக்க, "ரசம்" என்னும் மேற்படி நடனக்கலைச் சொல்லை தம்பி கையாண்டுள்ளார். "தகர்த்தெறியும் அவரது கவிதைப் படிமங்களில் இந்தியர்கள் கூறும் "ரசம்" அல்லது கவிச்சுவை இழையோடுகிறது (உண்மையில் நாவில் சுவைக்கிறது)" என்கிறார் தம்பி. இங்கு மூன்றாவது உணர்வை, B.N. Goswamy கூறுவது போல் இன்பத்தின் உச்சத்தை, அல்லது ஆனந்தத்தை,  அதாவது அடிப்படை மெய்ந்நிலையை ஆன்மா உணர்த்தும் பேரின்பத்தை தம்பி கருத்தில் கொள்ளவில்லைப் போலும். விரிவாகத் தொகுத்துரைக்கப்பட்ட 9 "ரச" நெறிகளையோ, பரத முனிவர் குறிப்பிடாத நெறிகளையோ அல்லது 33 வியபிசார பாவங்களையோ, 8 சாத்வீகங்களையோ, விசுவநாதரின் சாகித்திய தர்ப்பனங்களையோ தம்பி அறிந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  
இந்திய சிந்தனையிலிருந்து தாராளமாக அவர் இரவல் பெற்றதாகவே தென்பட்டது. அல்லது இந்திய ஒருமைத் தத்துவத்தினுள் தனது "கோட்பாட்டை" அவர் மறைத்ததாகவே தென்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், தம்பியின் கவிக்கலை சற்றுக் கோணல் மாணலாகவே தென்பட்டாக வேண்டியுள்ளது. படிம, வரி அணுக்களை ஒன்றாக உருக்கி, குறுக்கிக் காட்டும் கவிதை மொழி ஒன்றை, தனியோர் எண்ணப்பாங்கை உணர்த்தும் பாரிய சேர்க்கை மொழி ஒன்றை, என்றென்றும் அதிர்வொலியெழுப்பி வியாபிக்கும் மொழி ஒன்றைக் கையாள்வதற்கு அவர் அடிக்கோளிட்டார். அதாவது தன்னளவில் ஒரு சமயநெறியை அமைக்கும் கவிதையாக அது அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக, வேதங்கள் போன்ற ஓர் இந்து மறைநூலில் கவர்ந்தெடுத்த ஒரு கூறாக அமைய வேண்டும்.  
"உணர்வுத் தனிச்சொல் அல்லது உணர்வுத் தனிச்சொல்லீடு என்பதற்கு எதிர்மாறான படிமுறை நிகழ்வதையும் நாம் உள்ளத்துள் பதிக்க வேண்டும்" என்ற எச்சரிக்கையுடன் கூடிய தம்பியின் கூற்று: "கவிதையில் திட்டவட்டமான சொற்களிடையே, தொடர்களிடையே, உரைநடை வரிகளிடையே உணர்வுத் தனிச்சொல்லீடு இயல்பாகவே நிகழ்கிறது...(Dylan Thomas-ன் மேற்கண்ட கவிதையில் உள்ளதுபோல்) அவ்வரிகளிடையே அது நிகழ்வதால், அவை அனைத்தும் ஒருமித்து ஓர் எண்ணப்பாங்கு ஆகின்றன. எதிர்மாறான படிமுறையைப் பொறுத்தவரை மெய்ந்நிலை போன்று தோன்றும் நெருக்கடி குறித்து எதிரும் புதிருமான நிலைகள் தோற்றுவிக்கப்பட்டு, பேணப்பட்டு வருகின்றன..." 
பிறகு தம்பியின் கவியியல் ஒருபுறம் திரும்புகிறது. உரைநடை, முற்றிலும் கவிதை ஆகிய துறைகள் இரண்டிலும்  கருத்துப் படிநிலைகள் பலவும் உருகி ஒருமிக்க வேண்டும் என்கிறார். அற்குச் சான்றாக தனது Invocation to Lakshmi என்ற கவிதையை முன்வைக்கிறார் (முதன்முதல் அவரை ஆதரித்த வெளியீட்டாளராகிய Norman Nicholson அக்கவிதையை Penguin Anthology of Religious Verse என்ற தொகைநூலில் சேர்த்திருந்தார்). தம்பியின் "கோட்பாட்டில்" காணப்படும் இந்த அம்சம் குறித்து அவர் கூறியதை இங்கு நாம் மேற்கோள் காட்டலாம்:    
"உரைநடை வரிகள் பலவும் கொண்ட கவிதை ஒன்றை எழுந்தமானத்தில் என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆதலால் ஏற்கெனவே எழுதிய எனது சொந்தக் கவிதை ஒன்றை இங்கு மேற்கோள் காட்டுகிறேன். (அதை Telegraphesing என்று அவர் எழுத்துக்கூட்டியுள்ளார்). இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்து இலண்டனில் ஐந்து இடங்கள் என் உள்ளத்துள் பதிந்திருந்தன: (1) எரியுண்ட தெரு ஒன்று; (2) Hastings கடற்கரை; (3) இலண்டனில் ஒரு படுக்கை அறை; (4) மகப்பேற்று மனை ஒன்று; (5) குடிசைகள், கிழங்கு வகைகள், பருவப்பெயர்ச்சிக் காற்று, நுரைக்கும் கடலில் மிதக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையில் எழுந்து அழகுசொரிபவளும், அகிலாண்ட நாயகியும், பிறகு இராமாயணத்துக்காக ஏர் பிளந்த அழகிய வயலில் மனமுவந்து சீதையாகப் பிறந்தவளும், வாழ்வியலுக்கு உட்பட்ட சஞ்சலம் கொண்ட உலகத்தாயும், இந்திரா எனப்படுபவளும், கடற்பெருக்கில் உதித்தவளுமாகிய கலைமகள் சிலைகொண்ட கோயிலுடன் கூடிய தென்னிந்திய ஊர் ஒன்று."
Pound, Dante, Thomas, Khayyam, Whitman, காளிதாசர் மற்றும் தனது சஞ்சிகைகளில் அவர் வெளியிட்ட குறுங்கவிஞர்கள், மற்றும் பிற கவிஞர்கள் யாத்த படைப்புகளின் உறுதுணையுடன் தனது கவியியலை ஒருபுறம் அவர் நிலைநிறுத்த வேண்டியிருந்தது. மறுபுறம் தனது Gita Saraswati போன்ற கவிதைகளில் quantum mechanics மீது தனது கவியியற் படிமத்தை அவர் நிலைநிறுத்த முற்படுகிறார்.
(Rubiyat பற்றிக் குறிப்பிடுகையில்) "செதுக்கியெடுத்த படிமங்களை நான் கருதவில்லை. ஒருங்கிணைந்த, இணைந்து பிணைந்த, பேராற்றலுடன் நகருகின்ற, அணுச் சின்னத்தின் அலகு அல்லது குறுங் கதிர் மண்டலம் எனத்தக்க, மெய்ந்நிலை போலும் உயிர்த்துடிப்புடைய ஆற்றல்மிகுந்த குற்றணுக்களாய் இயற்கையுடன் இயைந்து வியாபிக்கும் படிமங்கள் என்று நான் குறிப்பிட்டுள்ளேன்" என்கிறார் தம்பி.
வாழ்க்கையும் வாழ்வும் எளிமையானவை, நுண்ணறிவுடன் அவற்றை அணுகத் தேவையில்லை என்று தனது முதலாவது மடலில் அவர் புகட்டிய போதனையிலிருந்து இது பெரிதும் வேறுபடுகிறது. 
"நுண்ணறிவுடன் கூடிய அணுகுமுறையினால் நாம் பொது வாழ்விலிருந்து மேலும் தூர விலகிவிடுவோம். வெறும் நுண்ணறிவுடன் கூடிய அணுகுமுறை எமது இறப்புக்கு நிகராகும். வாழ்க்கையின் மெய்ந்நிலை எளிமையானது. வாழ்வு எளிமையானது. சிந்தனையின் தோற்றுவாய்கள் எளிமையானவை. மாறாக, நுண்ணறிவுடன் கூடிய அணுகுமுறை சிக்கலானது"  (தம்பி).
இன்று, நெடுங்காலங்கழித்து, தம்பியை நாம் திறனாய்வது இலகுவே. எனினும் அவருக்கு அல்லது அவரது கண்ணோட்டங்களுக்கு இப்பொழுது நாம் நியாயம் கற்பிக்க முயலக் கூடாது. 23 வயதிலிருந்து 43 வயது வரை தான் கூறவேண்டியிருந்ததை எல்லாம் அவர் எழுத்தில் இட்டுச்சென்றார். 25 வயதுக்கு உட்பட்ட இளைஞராகவே Dylan Thomas, Keith Douglas ஆகியோரின் கவிதைகளை அவர் ஏற்றிப்போற்றினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தம்பியை Eliot மெச்சிய காலம் அது. இடைக்காலத்தில் இறைவனுக்கு மேலாக இசையை ஏற்றிப்போற்றி, பற்றுறுதியுடன் யாழேந்தி, இசைக்கு அடிபணிந்து, பணிவிடை புரிந்த தமிழ்ப் பாணர்களின் பாணியில் தலம்பெயர்ந்த கவிஞர் அவர். தனது வாழ்நாள் முழுவதையும் கவிதைக்கு அர்ப்பணித்தவர் அவர்.       
மதச்சார்பற்ற சங்கத் தமிழ் இலக்கிய மரபு தம்பியின் உள்ளத்துள் சுவறவில்லைப் போலும். சுய நிறைவு எய்தும் தனது சொந்த முயற்சியில் தனக்குத் துணைநிற்கும் வண்ணம் புனிதமும் அபசாரமும் கூடிய அன்பு பொதிந்த மொழி, தொனி, உணர்வு கலந்த சேர்க்கையின் ஊடாக "சடமும் ஆன்மாவும் ஒன்றை ஒன்று ஊடுருவும் நிலையை" அவர் நாடினார்.
அத்தகைய நாட்டத்தில் எதுவித தவறும் இல்லை. அது நகைக்கத்தக்கதுமல்ல. தம்பியின் மதமே, அவரது மூதாதையரின் இந்து மெய்யியலே அவரது கவியியல். தன்னால் இயன்றவரை தனது உள்ளுணர்வின் ஊடாக அதை அவர் புரிந்துகொண்டார். முழுமை வாய்ந்த உண்மையையே, இந்துமத உண்மையையே ("உரையின் அழகும் பொருளும் உண்மையே" என்பதையே) கவிதை உணர்த்த வேண்டும் என்று விரும்பினார். அதேவேளை, நவீன கவிதைக்கு அல்லது தனது காலத்துக் கவிதைக்குப் புத்துயிரூட்டும் வழிமுறையாகவே அதை அவர் இனங்கண்டார். நாற்பதுகளில் ஓங்கிய தலையாய கவிஞர்கள் அவரை மெச்சி ஆர்வத்துடன் பின்பற்றும் வரை அவருடைய நிலைப்பாடு சரியா, தவறா என்பது முக்கிய சங்கதியாகத் தென்படப் போவதில்லை. தம்பியின் அன்றைய செல்வாக்கு தீங்கு விளைவித்தது என்று இன்றைய நிலையில் வைத்துக் கூறுவது,  செவ்வனே தேர்ந்து தெளியாத ஓர் இலங்கைத் தமிழ்க் குடிகாரர் ஆங்கிலக் கவிஞர்களைக் கட்டிமேய்த்தார் என்று கூறுவதற்கு நிகராகும்; இரண்டாம் உலகப் போர் நிகழ்கையில் ஓங்கிய சிறந்த கவிஞர்களைக் கட்டிமேய்த்தார் என்று கூறுவதற்கு நிகராகும். அது ஒரு படுமோசமான கூற்றாகும். தம்பி ஆங்கிலேயராகப் பிறந்தவரல்ல என்பதை ஆதாரமாகக் கொண்டு, அவர் கவிதையை வரையறுப்பது எங்ஙனம் என்றொருவர் வினவக்கூடும்.  மகத்தான கவிதையாக அவர் எதைக் கருதினார் என்பது எவருக்கும் அறவே நிறைவு தராது போகக் கூடும். எனினும் தமது எண்ணத்தை எடுத்துரைப்பதற்கு எவருக்கும் உள்ள உரிமை தம்பிக்கும் உண்டு:      
நாம் உவக்கும் கவிதையில் (அ) எல்லா விவரங்களும், கடப்பாட்டு நிலைகளும் ஒரே சொல்லில் பொதிந்திருக்கும், அல்லது மேலும் நடைமுறை வாரியாகக் கூறுவதாயின், ஒரே கவிதையில் பொதிந்திருக்கும்; (ஆ) சந்தம், தொனி, எண்ணம், சாயல், உரையின் விசை, தென்படும் படிமுறை உட்பட எல்லா வகையான நகர்வுகளும் எதிர் அசைவுகளும் அதில் அடங்கியிருக்கும். அதாவது கவிதையின் தெளிவு பொதுவான பேச்சுமொழியில் தங்கியிருக்கவில்லை. மாறாக, உரைக்கப்படும் பொருளின் உயிர்க்களையிலேயே அது தங்கியிருக்கிறது. வீறுமிகுந்த வரியே கவித்துவம் மிகுந்தது; இயல்பு மிகுந்தது; அது "இயற்கை" நிலைக்கு மிகவும் நிகரானது; இயற்கையின் பொருள்விளக்கத்துக்கு அல்ல, அதன் புலனுணர்வுக்கு நிகரானது... தருக்கவாரியான முடிவுக்கு இட்டுச்செல்லும் வண்ணம் எனது கருத்தை நான் மேற்கொண்டு இப்படி வலியுறுத்துவேன்: நாம் உவக்கும் கவிதையானது ஒரே சொல்லில் அண்டப் பருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டும்; இயன்றவரை பாரிய தனிச்சொல்லை அது கொண்டிருக்க வேண்டும்" (தம்பி).
இயற்பியல் கோட்பாடு பற்றி அவர் கொஞ்சம் அறிந்திருந்தார் என்பது வெளிப்படை. அண்டத்தின் அமைப்பு, அண்டப் பேரோசைக் கோட்பாடு, அண்ட நிலைகுலைவுக் கோட்பாடு,  quantum mechanics பற்றி அவர் கொஞ்சம் அறிந்திருத்தல் திண்ணம். ஏதோ ஒருவகையில் நுண் கவித்துவப் படைப்பும், பேரண்டப் படைப்பும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதாகக் காட்ட முயன்று, "Gita Saraswati" என்ற ஒரு கவிதையையாவது அவர் எழுதினார். மெருகிடாத கவிதை அது. அவரது கவியியலின் திருவுரு அது. ஒரு வரையறைக்குள் கூறுவதாயின், அவருக்கு அதுவே கவித்துவக் கலையின் உச்சம் எனலாம். அவருடன் நாம் உடன்படாவிட்டால், அவர் கூறுவதை நாம் புரிந்துகொள்ளாதவர் ஆவோம். வேறு வலிதான சாதனை எதனையும் போலவே அவருடைய சாதனையும் ஒரு கவித்துவ சாதனையே. இதில் கவிஞரும் அவரது கவித்துவக் கோட்பாடும் இரண்டறக் கலப்பதாகக் கொள்ளலாம். தம்பிக்கு உவந்த போடுதடியாகிய Geoffrey Grigson-ஐ அவர் திரும்பத் திரும்பச் சாடியதற்கும், கவிஞர் என்ற வகையிலோ "கோட்பாட்டாளர்" என்ற வகையிலோ தம்பி ஈட்டிய சாதனைக்கும் இடையே சம்பந்தம் இல்லை. (கவிதை என்பது விருத்தி அடைய வேண்டும் என்பதாகக் கொண்டு) ஆங்கிலக் கவிதையின் விருத்தியை அவர் குழப்பியடித்துவிட்டாரா என்ற வினாவுக்கும், கவிஞர் என்ற வகையிலோ "கோட்பாட்டாளர்" என்ற வகையிலோ தம்பி ஈட்டிய சாதனைக்கும் இடையே சம்பந்தம் இல்லை. வேறு பொதுநலவாய எழுத்தாளர் எவரையும் போலவே தன்னை ஓர் ஆங்கில மொழிக் கவிஞர் என்றும், திறனாய்வாளர் என்றும் கொண்டாடும் உரிமை தம்பிக்கும் உண்டு.
ஆங்கிலக் கவிஞர்களுக்கு வழிகாட்டி, ஊக்குவித்து, வெளியீட்டாளராக விளங்கும் தகுதி சாலவும் வாய்க்கப் பெற்றவர் தம்பி என்பதற்கு Keith Douglas பற்றியும், அவரது Out of this War கவிதைத் தொகுப்பினைப் பற்றியும் அவர் எழுதிய திறனாய்வுக் கட்டுரை நன்கு சான்று பகர்கிறது (இக்கட்டுரையை எழுதியபொழுது அதன் கூறுகள் சிலவற்றை மாத்திரமே நான் வாசித்திருந்தேன். பிறகு அவரது கவிதைகள் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டேன். பார்க்கவும்: "Tambimuttu: Poet, Critic, Editor/Publisher," http://stateless.freehosting.net/TAMBIMUTTU.htm.   
ஐம்பதுகளின் முடிவுக்குப் பின்னர் தம்பியின் எஞ்சிய வாழ்வை மேற்கொண்டு நாம் எடுத்துரைக்க வேண்டிய தேவை பெரிதும் இல்லை. அப்பொழுது அவர் எதிர்கொள்ள நேர்ந்த அவலமும் அவமானமும் வெளிப்படை. அவர் நாடிய ஆன்மீக ஆழத்தை அவை அதிகப்படுத்தியிருக்கலாம். தம்பி உணர்வெழுச்சியுடன் அல்லது பிறர்மனைநயந்து வாழ்ந்து குழம்பிய கதைகள் அனைத்தையும் மீறி அவர் மூன்று தடவைகள் மணம் புரிந்தார் (அவரை மணந்தமைக்கு அம்மாதரை எவரும் கடிந்ததை நான் காணவில்லை!)
முதலாவது மனைவி: Jacqueline Stanley, இலண்டனைச் சேர்ந்தவர், தளதளப்பானவர், வெண்முடி கொண்டவர். தம்பியும் அவரும் Marchmont Street-ல் வசித்து வந்தனர். போர் நிகழ்ந்த காலத்தில் அவர் தம்பியை விட்டுப் பிரிந்தார். அதனால் தம்பி மனமுடைந்ததாகத் தெரிகிறது. Stephen Spender என்ற கவிஞர் Ines என்பவரைப் புதுக்க மணம்முடித்து இரு கிழமைகள் கழிவதற்குள் விட்டுச்சென்ற அடுக்குமாடியகத்தில் Jacqueline Stanley-உடன் தம்பி தேனிலவைக் கழித்த குறிப்பு மட்டுமே தனது மனைவியைப் பற்றி தம்பி எழுதிச்சென்ற கருத்துரை.  Jacqueline நீரிழிவு கண்டு இறந்ததாகத் தெரிகிறது. இலண்டனில் 11 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, 1949 திசம்பர் 7ம் திகதி S.S. Canton என்ற கப்பலில் தம்பி கொழும்பு திரும்பினார்.   
அப்பொழுது தம்பி நாடறிந்தவர் ஆகியிருந்தார். எனினும் அவர் பெருமை விரைந்து குன்றியது. தம்பியின் இரண்டாவது மனைவி: Safia Tyabjee. இந்திய தேசிய பேரவைக் கட்சியின் முன்னாள் தலைவரின் பேர்த்தி. இலங்கை நண்பர் ஒருவர் அவர்கள் இருவரையும் பொதுப்படையாக அறிமுகப்படுத்தியதை அடுத்து அவர்கள் இரண்டு கிழமைகளுக்கு மேலாக அன்றாடம் சந்தித்து, 1951 யூலை 15ம் திகதி மணம் புரிந்து கொண்டார்கள். தம்பியின் தங்கை எனத்தக்க Safia அவருக்கு ஓரளவு பாதுகாப்பை ஈந்தார். மணவாழ்வின் பேரின்பத்தையும் அவர் ஈந்தார் என்பதில் ஐயமில்லை.    
மும்பாயில் Tyabjee குடும்பத்தவருடன் அவர் பெரிதும் உறவாடி மகிழ்ந்ததாகத் தெரிகிறது. Safia-வின் பெற்றோருடன் அவர் நீடித்த உறவு கொண்டாடினார். அவரது குணவியல்பையும், அவர் உருப்படக்கூடியவர் என்பதையும் அது பெரிதும் புலப்படுத்தியது. 1952ல் தம்பியும் மனைவியும் இலங்கை சென்று, அவரது குடும்பத்தவரையும் நண்பர்களையும் சந்தித்தனர். பின்னர் கொழும்பிலிருந்து இலண்டன் சென்று, அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். பலரும் பூசித்த T.S. Eliot உட்படப் பற்பல நண்பர்கள் அவர்களை உளமார வரவேற்றார்கள். 1952 நவம்பர் மாதம் அவர்கள் நியூ யார்க் சென்றடைந்தார்கள். துறைமேடையில் ஒரு வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருந்தது. எனினும் பழைய இலண்டன் காலகட்ட நண்பர் ஒருவர் தற்செயலாக அவரைக் கூவியழைக்கவே, தம்பியின் வாழ்வு மறுமலர்ச்சி கண்டது. உரையாற்றும்படி அழைப்புகள் வரலாயின. 1953 பெப்ரவரி 19ம் திகதி, Poetry Center, New York: "Contemporary English Verse; 24ம் திகதி New York University: "Modern Trends !n English Verse"; பின்னர் Brown University, Connecticut... தம்பியின் புகழ் பரவியது.
1953 முதல் 1958 வரை தம்பியும் Safia-வும் ஏடாகூடமான பெரிய அடுக்குமாடியகம் ஒன்றில் (338 East 87th Street) வசித்து வந்தார்கள். அவர்களது அயலவர்களாகிய Claude, Luki Mieville இருவரும் அதை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார்கள். 1956 முதல் 1960 வரை Poetry London-New York-ன் நான்கு பதிப்புகளை அவர் வெளியிட்டார். திடீரெனப் பணம் குவியத் தொடங்கியது. அப்படியே திடீரென வரவு குன்றியது. உளவுறுதியும் உடனலமும் குன்றிய நிலைமைக்கு ஈடுகொடுக்க Safia மிகவும் சிரமப்பட்டார். அறுவைச் சிகிச்சை ஒன்றை அடுத்து அவர் மும்பாய் திரும்பினார். சஞ்சிகை பற்றிய பதைபதைப்புடன் குடும்பப் பொறுப்புகளைத் தம்பியால் மேற்கொண்டு நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால், 1958ல் அவரை மணவிலக்குச்செய்ய Safia சம்மதித்தார். எனினும் இருவரும் சிறந்த நண்பர்களாக விளங்கினார்கள். இறுதிவரை கடிதத் தொடர்பு வைத்திருந்தார்கள்.
Safia-வுடன் வாழ்ந்த வாழ்வே தனக்குப் பேரின்பம் பயந்ததாகத் தம்பி பின்னர் ஒப்புக்கொண்டதுண்டு. எனினும் 1961ல் மூன்றாவது தடவை தம்பி மணந்து கொண்டதாகத் தெரிகிறது. மூன்றாவது மனைவியாகிய Esta Busi-உடன் பூண்ட மணவாழ்வின் பயனாக தம்பியின் ஒரே பிள்ளை 1962ல் பிறந்தது. தம்பியின் குணவியல்புக்கமைய அதற்கு Shakuntala Safia Tambimuttu என்று பெயர் சூட்டப்பட்டது. Hudson Street, Greenwich Village-ல் அவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களின் மணவாழ்வும் நீடித்ததாகத் தெரியவில்லை. பிரிந்த மணமக்கள் அறுபதுகளின் தொடக்கத்தில் மணவிலக்குப் பெற்றிருக்கலாம்.
1961 முதல் 1966 வரை Poetry London-New York அலுவலகங்கள் West 11th Street-ல் அமைந்திருந்தன. அப்புறம் கவிதை அரங்கில் தோன்றிய Timothy Leary தம்பியின் வாழ்வினுள் புகுந்து நிலைத்துவிட்டார். Milbrook-ல் அமைந்திருந்த Leary-ன் League for Spiritual Discovery-உடன் தம்பி இணைந்து கொண்டார். ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பதவி ஒன்றுக்கு தம்பியின் பெயர் விதந்துரைக்கப்பட்டது. ஏதோ ஒரு காரணத்தால் அது கைகூடவில்லை. 1968ல் தம்பி ஏமாற்றத்துடன், வெறுங்கையுடன் இலண்டன் திரும்பினார். அறுபதுகளின் பிற்கூறில் Kathleen Falley Bennett-ன் பொருளுதவியுடன் Lyrebird Press-ஐ அவர் திறந்தார். The October Gallery தம்பிக்கு Old Gloucester Street-ல் ஓர் அலுவலகத்தை வழங்கியது. பழைய யந்திரத்தை இயக்கிய தம்பி, Beatles இசையணியுடன் ஏதோ ஓர் ஒழுங்குக்கு வந்து, Poetry London Apple Magazine என்னும் புதிய சஞ்சிகையின் ஒரு பதிப்பை வெளிக்கொணர்ந்தார். 1982ல் இன்னொரு பதிப்பை வெளிக்கொணர்ந்தார். தம்பியின் இறுதி உறைவிடம்: 14, Cornwall Gardens, London. அங்கிருந்து அடிக்கடி அமெரிக்காவுக்குச் சென்று வந்தார். பழைய உழைப்பு-பிழைப்புகளுக்குப் புத்துயிரூட்ட அவர் மேற்கொண்ட முயற்சி அதிக வெற்றி அளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் அவர் வாழ்வு மீண்டும் பணமுடையினால் தாக்குண்டது. வாடகை செலுத்தப்படவில்லை. வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணையில் ஒரு நீதிபதி தம்பிக்கு கனிவு காட்டினார். 
ஏற்கெனவே Safia இலண்டனுக்கு வந்து 6 மாதங்கள் தங்கியிருந்தார். அப்பொழுது இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். தம்பியை இந்தியாவுக்கு வரும்படி Safia அழைத்தார். சகுந்தலாவுடனும், Apple Magazine சஞ்சிகையின் இந்தியக் கவிதைப் பதிப்பு ஒன்றை வெளிக்கொணரும் முடிபுடனும் இந்தியா திரும்பிய தம்பி அங்கு மகத்தான வெற்றி ஈட்டினார். இந்திரா காந்தி கூட அவரை வரவேற்று, பொருளுதவி புரிந்தார். ஐக்கிய இராச்சியத்துக்கும், அது முன்னர் கட்டியாண்ட நாடுகளுக்கும் இடையே பண்பாட்டு உறவை மேம்படுத்தும் நோக்குடன்  இந்திய-இலங்கை கலை மன்றம் ஒன்றை அமைக்கும் மகத்தான திட்டத்துடன் தம்பி இலண்டன் திரும்பினார். அவர் வாழ்வு திடீர் மறுமலர்ச்சி அடைவது போல் தென்பட்டது. அதில் அவரும் ஊக்கம் கொள்வது போல் தென்பட்டது. அதற்குப் பிறகு அவர் விழுந்து முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான்கு நாட்கள் கழித்து, 1983 யூன் 22ம் திகதி தம்பி இயற்கை எய்தினார்.
பலரும் கூறுவது போல் கவித்துவக் கலைக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒருவரின் வீரவாழ்வு இவ்வாறு முற்றுப்பெற்றது. எத்தனையோ பேர், Durrell மற்றும் Leary உட்பட தம்பியின் சிறப்பிதழில் எழுதிய சுமார் 60 பேர், அவரது நாட்டவரே அல்லாதோர் அனைவரும் அவரை நினைந்து புலம்புவார்கள் என்று யார்தான் எண்ணியிருப்பார்கள்? கந்தல் அணிந்த அந்தக் கவிஞர் எல்லோர்மீதும் சரிநிகரான பாசம் வைத்திருந்தபடியால், அவரை அவர்கள் நேசித்தார்கள். சில தர்மசங்கடமான சூழ்நிலைகளுக்கு அவர் உள்ளானதுண்டு. ஆனாலும் பிறரை ஈர்த்திழுப்பவர், ஆற்றுப்படுத்துபவர், ஒத்த இயல்பினர், பரிவு கொள்பவர், அளவுகடந்து தயைகூர்பவர், எல்லாவற்றுக்கும் மேலாக, நெடுந்தொலைவில் விரிந்துகிடக்கும் இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் தீவொன்றின் இளவரசர் என்றே தம்பி நினைவுகூரப்பட்டு வருகிறார். உண்மையில் அவர் கவிஞர்களுள் ஓர் இளவரசனே!     
Dr. T. Wignesan, தமிழ்: மணி வேலுப்பிள்ளை                      

No comments:

Post a Comment