சியாட்டில் உரை 1854

Chief Seattle
செங்குடித் தலைமகன் சியாட்டில் 
(1786-1866) 
எங்கள் நிலத்தை தாங்கள் வாங்க விரும்புவதாக வாசிங்டனிலிருந்து பெருந்தலைமகன் சேதி அனுப்பியிருக்கிறார்வானத்தையும், நிலத்தின் நேயத்தையும் எப்படி உங்களால் வாங்கவோ, விற்கவோ முடியும்? எங்களுக்கு இது ஒரு விசித்திரமான எண்ணமாகவே தென்படுகிறது. காற்றின் தூய்மையும், நீரின் பளபளப்பும் எங்கள் சொத்துகள் ஆகா என்றால்அவற்றை எப்படி உங்களால் வாங்க முடியும்? எனது மக்களைப் பொறுத்தவரை இந்த மண்ணின் ஒவ்வொரு கூறும் புனிதமானது. சவுக்கு மரத்தில் ஒளிரும் ஊசி-இலை ஒவ்வொன்றும், மணலோரம் ஒவ்வொன்றும், இருண்ட தோப்புகளைச் சூழும் புகார் ஒவ்வொன்றும், வெட்டைவெளி ஒவ்வொன்றும், இரைந்து திரியும் பூச்சி-புழு ஒவ்வொன்றும் எனது மக்களின் உள்ளத்திலும் அனுபவத்திலும் ஒரு புனிதச் சின்னமாய் பதிந்துள்ளது. மரங்களில் உள்ளூரப் பாயும் சாறுகூட செங்குடி மக்களின் நினைவை ஏந்திச்செல்கிறது.
         எம்மவர்கள் இறந்தாலும், இந்த அழகிய நிலத்தை மறக்கப் போவதில்லை. ஏனெனில், இது செங்குடிமக்களின் தாய்நிலம், நாங்கள் இந்த நிலத்தின் அங்கம், இந்த நிலம் எங்கள் அங்கம். நறுமண மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிரையும், மாபெரும் கழுகும் எங்கள் சகோதரர்கள். பாறைச் சிகரங்கள், பசும்புல்வெளிகள், மட்டக்குதிரையின் உடற்சூடு, மனிதர் எல்லாத் தரப்புகளும் ஒரே குடும்பத்தின் அங்கங்கள். எனவே, எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக வாசிங்டனிலிருந்து பெருந்தலைமகன் சேதி அனுப்பும்பொழுது, அவர் எங்களிடம் நிறையவே கேட்கிறார்.
இது எங்கள் புனித நிலம்ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல, இது எங்கள் மூதாதையரின் குருதி. நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது புனிதமான நிலம் என்பதையும், ஏரிகளின் தெளிந்த நீரில் புலப்படும் சாயை ஒவ்வொன்றும் எங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளையும், நினைவுகளையும் இயம்புவன என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும்.
இந்த நீரின் சலசலப்பில் எனது பாட்டனாரின் குரலை நான் செவிமடுக்கின்றேன். இந்த ஆறுகள் எங்கள் சகோதரர்கள். எங்கள் விடாயை அவை தீர்ப்பவை, எங்கள் படகுகளை ஏந்திச் செல்பவை, எங்கள் பிள்ளைகள ஊட்டி வளர்ப்பவை. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், இந்த ஆறுகள் எங்கள் சகோதரர்கள் உங்கள் சகோதரர்கள் - என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும். ஒரு சகோதரனுக்கு நீங்கள் காட்டும் அதே கனிவை, இந்த ஆறுகளுக்கும் நீங்கள் காட்ட வேண்டும்.
காலையில் எழும் கதிரவனைக் கண்டு மூடுபனி மலைகளைவிட்டு ஓடுவது போல, முன்னேறிவரும் வெள்ளையரைக் கண்டு செங்குடிமக்கள் என்றுமே பின்வாங்கி வந்திருக்கிறார்கள். எங்கள் தந்தையரின் சாம்பலையும், இடுகாடுகளையும் நாங்கள் விட்டுச்செல்கிறோம். எங்கள் குன்றுகளையும், மரங்களையும், நிலபுலங்களையும் நாங்கள் விட்டுச்செல்கிறோம். எங்கள் புனிதச் சின்னங்களை நாங்கள் விட்டுச் செல்கிறோம்.   
எங்கள் போக்கு வெள்ளையருக்குப் புரியாது என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு முன்பின் தெரியாத வெள்ளையர், இரவில் இந்த நிலத்துக்கு வந்து, தங்களுக்கு வேண்டியதை எடுத்துச்செல்வர். ஆதலால் அவர்களுக்கு ஒரு நிலபுலமும், அடுத்த நிலபுலமும் ஒன்றே. நிலம் அவர்களுக்கு சகோதரன் அல்ல. நிலம் அவர்களுக்கு எதிரி. அதனைக் கைப்பற்றிய பிறகு அவர்கள் அப்பால் நகர்கின்றனர். தமது தந்தையரின் இடுகாடுகளைப் பொருட்படுத்தாது, கைவிட்டுச் செல்கின்றனர். தமது தந்தையரின் இடுகாடுகாடுகளையும், தமது பிள்ளைகளின் பிறப்புரிமையையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர். தமது தாய்நிலத்தையும், சகோதர வானத்தையும் ஆடுகளைப்போல் அல்லது ஒளிரும் மணிகளைப்போல் வாங்கியோ, கொள்ளையடித்தோ, விற்கும் பண்டங்களாகவே அவர்கள் கருதுகின்றனர். அவர்களின் பசி, நிலத்தை விழுங்கி, வெறும் பாலைவனத்தையே ஈயும். எனக்குத் தெரியாது. எங்கள் போக்கு, உங்கள் போக்கிலிருந்து வேறுபட்டது.
உங்கள் நகரங்களைக் காண்பதே எங்கள் கண்களைப் புண்படுத்துகிறது. செங்குடிமக்கள் வெறும் காட்டுமிராண்டிகள் என்பதால், அவர்களுக்கு எதுவும் புரியாது என்பதால், அப்படி நேர்கிறது போலும். வெள்ளையரின் நகரங்களில் அமைதிக்கு இடமில்லை. வசந்தகாலத்தில் இலைகள் விரிவதையோ, புழுபூச்சிகளின் சிறகுகள் சரசரப்பதையோ செவிமடுப்பதற்கு அங்கு இடமில்லை. நான் ஒரு காட்டுமிராண்டி என்பதால், எனக்கு எதுவும் புரியாது என்பதால் அப்படி நேர்கிறது போலும். உங்கள் நகரத்து இரைச்சல் எங்கள் காதுகளை இகழ்வது போலவே கேட்கிறது. அல்லிப்புள்ளின் ஒற்றைக் கூவலையோ, அல்லிப்பொழுதில் ஒரு தடாகத்தைச் சூழும் தவளைகள் புரியும் வாதங்களையோ ஒருவரால் செவிமடுக்க முடியவில்லை என்றால், அவர் வாழ்வில் என்னதான் உண்டு? நான் ஒரு செங்குடிமகன். எனக்குப் புரியவில்லை.
தடாகப் புறத்தை  வருடி வீசும் காற்றின் மெல்லொலியையும், நண்பகலில் விழும் மழையில் குளித்து வீசும் காற்றின் மணத்தையும், அல்லது சவுக்குமர வாசம்கமழ்ந்து வீசும் காற்றின் மணத்தையுமே செங்குடிமக்கள் நயக்கின்றனர். செங்குடிமக்களைப் பொறுத்தவரை காற்று விலைமதிப்பற்றது. ஏனெனில் மரமும், விலங்கும், மனிதரும் எல்லாத் தரப்புகளும் ஒரே காற்றையே பகிர்கின்றன. வெள்ளையரோ தாங்கள் சுவாசிக்கும் காற்றைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறு இறந்து நாட்பட்டு மரத்த ஒருவனுக்கு எதுவுமே மணக்காதோ, அவ்வாறே  வெள்ளையருக்கு எதுவுமே மணக்காது. எனினும் நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், எங்கள் காற்று விலைமதிப்பற்றது என்பதையும், தான் துணைநிற்கும் உயிரினங்கள் அனைத்துடனும் தன் உணர்வை அது பகிர்கின்றது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். எங்கள் பாட்டனாரின் முதல்மூச்சை அவருக்கு ஈந்த அதே காற்றே அவருடைய இறுதிப் பெருமூச்சையும் ஏந்தியது. எங்கள் பிள்ளைகளுக்கு வாழும் உணர்வை வழங்க வேண்டியது காற்றே. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், நீங்கள் அதனைப் புனித நிலமாக ஒதுக்கிவைக்க வேண்டும். வெள்ளையரே சென்று பசும்புல்வெளி மலர்களின் இனிமை கமழும் காற்றைத் துய்க்கும் இடமாக அதனை நீங்கள் ஒதுக்கிவைக்க வேண்டும்.
            எனவே, எங்கள் நிலத்தை வாங்கும் உங்கள் எண்ணத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம். உங்கள் எண்ணத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன்: வெள்ளையர் இந்த நிலத்து விலங்குகளை தமது சகோதரர்களாக நடத்த வேண்டும். நான் ஒரு காட்டுமிராண்டி. எனக்கு வேறு வழி எதுவும் புரியவில்லை.
விரையும் தொடருந்திலிருந்து வெள்ளையரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஓராயிரம் எருமைகள் எங்கள் புல்வெளிப்புலத்தில் கிடந்து அழுகுவதை நான் பார்த்திருக்கிறேன். நான் ஒரு காட்டுமிராண்டி. நாங்கள் உயிர்வாழ்வதற்காக மட்டுமே கொன்று, உண்ணும் எருமையைவிட, புகை கக்கும் அந்த இரும்புக் குதிரை எப்படி முக்கியமானதாய் இருக்கமுடியும் என்பது எனக்குப் புரியவில்லை. விலங்குகள் இல்லையேல், வெள்ளையர் என்னாவது? எல்லா விலங்குகளும் அழிந்தொழிந்தால், மாபெரும் தனிமையுணர்வினால் மானிடர் மாண்டுபோவர் அன்றோ! விலங்குகளுக்கு எது நேர்கிறதோ, அதுவே விரைவில் மனிதருக்கும் நேரும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை
உங்கள் பிள்ளைகள் மிதிக்கும் நிலம் எங்கள் பாட்டன்மாரின் சாம்பலே என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும். இந்த நிலத்தை அவர்கள் மதிக்கும் வண்ணம், இது எங்கள் மக்களின் வாழ்வினால் நிறைந்த நிலம் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். நிலம் எங்கள் தாய் என்று எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் புகட்டியதை, உங்கள் பிள்ளைகளுக்கும் நீங்கள் புகட்டுங்கள். நிலத்துக்கு நேர்வதே நிலத்தின் புதல்வருக்கும் நேரும். நிலத்தில் உமிழும் மனிதர் தம்மீது உமிழும் மனிதரே.
நிலம் மனிதருக்குச் சொந்தமல்ல, மனிதரே நிலத்துக்குச் சொந்தம். ஒரே குருதியால் இணைக்கப்பட்ட குடும்பத்தைப் போல, எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கு நேர்வதே நிலத்தின் புதல்வருக்கும் நேரும். வாழ்க்கை-வலையை மனிதர் பின்னவில்லை. அந்த வலையில் மனிதர் ஓர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே அவர்கள் தமக்குச் செய்கிறார்கள். எனினும், எனது மக்களுக்கு நீங்கள் ஒதுக்கிய புலத்துக்கு நாங்கள் செல்லலாம் என்று நீங்கள் முன்வைத்த எண்ணத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம். நாங்கள் புறம்பாகவும், அமைதியாகவும் வாழ்வோம். எங்கள் எஞ்சிய நாட்களை நாங்கள் எங்கு கழிப்போம் என்பது அத்துணை முக்கியமில்லை.
தங்கள் தந்தையர் தோற்கடிக்கப்பட்டு, அடிபணிய வைக்கப்பட்டுள்ளதை எங்கள் பிள்ளைகள் கண்டுள்ளார்கள். எங்கள் போராளிகள் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றார்கள். தோல்வியை அடுத்து சோம்பித் திரிந்து, இனிக்க உணவுண்டு, வெறிக்க மதுவுண்டு, உடலைக் கெடுத்து, பொழுதைக் கழித்து வருகின்றார்கள்.
எங்கள் எஞ்சிய நாட்களை நாங்கள் எங்கு கழிப்போம் என்பது அத்துணை முக்கியமில்லை. அது பல நாட்களுக்குமல்ல. இன்னும் ஒருசில நாழிகளே. இன்னும் ஒருசில மாரிகளே. முன்னொரு காலத்தில் உங்களைப் போலவே வலிமையுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்த ஒரு மக்கள்-திரளின் இடுகாடுகளை நினைந்துருகுவதற்கு, அன்று இந்த நிலத்தில் வாழ்ந்த அல்லது இன்று இந்தக் காடுகளில் சிறு குழுமங்களாகத் திரியும் மகத்தான குலத்தவரின் பிள்ளைகளுள் எவருமே எஞ்சப்போவதில்லை. எனினும், எனது குலத்தவர் மறைவதை நான் ஏன் நினைந்துருக வேண்டும்? குலங்கள் மனிதரால் ஆனவை. அவ்வளவுதான். கடலின் அலைகளைப் போல மனிதர்கள் வருவார்கள், போவார்கள்.
நண்பருடன் நண்பர் கதைப்பது போல், வெள்ளையரின் கடவுள் வெள்ளையருடன் உலவி, உரையாடுவதுண்டு. அத்தகைய வெள்ளையர் கூட பொது விதிக்கு விலக்கானோர் அல்லர். எவ்வாறாயினும், நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் ஆகலாம். பொறுத்திருந்து பார்ப்போம். எங்கள் கடவுளும் அதே கடவுளே. அதனை வெள்ளையர் ஒருநாள் கண்டுபிடிக்கக் கூடும். எங்கள் நிலத்தை நீங்கள் சொந்தமாக்க விரும்புவது போல், கடவுள் உங்களுக்கே சொந்தம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் கடவுளை உங்கள் சொத்தாக்க முடியாது. அவர் மனிதரின் கடவுள். அவர் செங்குடியினருக்கும் வெள்ளையருக்கும் சரிநிகராகவே கருணை காட்டுபவர். அவரைப் பொறுத்தவரையும் இது விலைமதிப்பற்ற நிலமே. அத்தகைய நிலத்துக்கு தீங்கு விளைவிப்பது, அதனைப் படைத்தவரை அவமதிப்பதற்கு நிகர். இனி, வெள்ளையர் கூட மறையவே வேண்டும் - ஒருவேளை மற்றைய குலத்தவர் அனைவரையும்விட வேகமாக மறையவே வேண்டும். எனினும், நீங்கள் மாளும் வேளையில் ஒளிவீசுவீர்கள் - உங்களை இந்த நிலத்துக்கு கொண்டுவந்து, ஏதோவொரு விசேட நோக்கத்துக்காக, இந்த நிலத்தையும், மக்களையும் உங்கள் ஆட்சிக்கு அடிப்படுத்திய கடவுளின் வலிமையால், நீங்கள் மாளும் வேளையில் ஒளிவீசுவீர்கள். அந்த விதி எங்களுக்கு ஒரு புதிராகவே தென்படுகிறது.
எருமைகள் எல்லாம் எப்பொழுது கொன்றொழிக்கப்படும், காட்டுக் குதிரைகள் எல்லாம் எப்பொழுது வீட்டுக் குதிரைகளாக்கப்படும், மானுட மணம் கமழும் காட்டின் மூலைமுடக்குகளும், முற்றிய குன்றுகளின் கண்கவர் தோற்றமும் தந்திக் கம்பிகளால் எப்பொழுது கறைப்படுத்தப்படும் என்பது எங்களுக்குப் புரியவில்லை. புதர் எங்கே? ஒழிந்து போயிற்று. கழுகு எங்கே? ஒழிந்து போயிற்று. வேட்டைக்கும், வேகம்கொண்ட மட்டக்குதிரைக்கும் விடைகொடுப்பது என்பது என்ன? அதுவே வாழ்வின் முடிவு, அதுவே பிழைப்பின் தொடக்கம்
எனவே, எங்கள் நிலத்தை வாங்கும் உங்கள் எண்ணத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம். அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்றால், நீங்கள் உறுதியளித்த ஒதுக்குப்புலத்தை ஈட்டிக்கொள்வதற்காகவே உடன்படுவோம். ஒருவேளை, அந்த ஒதுக்குப்புலத்தில் எங்கள் குறுகிய வாழ்நாளை நாங்கள் விரும்பியவாறு கழிக்கலாம். பிறந்த குழந்தை அதன் தாயின் இதயத்துடிப்பை நேசிப்பது போல, இந்த நிலத்தை நாங்கள் நேசிக்கின்றோம்.
ஆதலால், இந்த நிலத்திலிருந்து இறுதிச் செங்குடிமகன் மறைந்த பின்னரும், எங்களைப் பற்றிய நினைவு என்பது எங்கள் புல்வெளிப்புலத்தைக் கடந்துசெல்லும் ஒரு முகிலின் நிழலாய் மாறிய பின்னரும், இந்தக் காடுகளும் நீர்நிலையோரங்களும் எனது மக்களின் ஆவிகளைப் பேணிக் காக்கும். எனவே எங்கள் நிலத்தை நாங்கள் உங்களுக்கு விற்போம். நாங்கள் நேசித்தவாறு அதனை நேசியுங்கள். நாங்கள் பராமரித்தவாறு அதனைப் பராமரியுங்கள். இந்த நிலத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளும்பொழுது, அது எப்படி இருக்கிறதோஅப்படியே அதனைப் பற்றிய நினைவை உங்கள் உள்ளத்துள் பேணி வைத்திருங்கள். எங்கள் அனைவரையும் கடவுள் நேசிப்பதுபோல, உங்கள் பிள்ளைகளுக்காக, இந்த நிலத்தை இதயபூர்வமாக நேசித்துப் பேணுங்கள்.
எங்கள் கடவுளும் அதே கடவுளே. அவரைப் பொறுத்தவரையும் இது விலமதிப்பற்ற நிலமே. வெள்ளையரும் பொது விதிக்கு விலக்காக முடியாது. எவ்வாறாயினும், நாங்கள் அனைவரும் சகோதரர்களாக விளங்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்."
Seattle, 1854, தமிழ்: மணி வேலுப்பிள்ளை, 2009-08-20

No comments:

Post a Comment